இந்த ஆடை போர்த்துவது, மாலை போடுவது இதெல்லாம் கௌரவிப்பதற்கு அடையாளமாக யார் நிர்ணயித்தது

இந்த ஆடை போர்த்துவது, மாலை போடுவது இதெல்லாம் கௌரவிப்பதற்கு அடையாளமாக யார் நிர்ணயித்தது?
ஒருவர் மேல் மரியாதை என்பது மனதிலும் அவரிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் தான் அறியப்பட வேண்டுமேயல்லாது, அது இந்த ஆடை போர்த்துதலிலும், மாலை போடுவதிலும் இல்லை.
என்றோ யாரோ எதற்கோ ஏற்படுத்திவிட்டுப் போன சம்பிரதாயங்களை எதற்காக என்று கூட ஆராயாமல் இன்று வரை அதை கடைபிடித்துக் கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களில் தான் இதுவும் சேரும்!
மேடையில் ஒருவரை கௌரவிக்கத் தோன்றினால் அவரைப் பற்றியதான உங்கள் எண்ணங்களை அனைவரும் அறியுமாறு நான்கு வார்த்தைகளில் சொல்லலாமே? சில ஆத்மார்த்தமான நல் வார்த்தைகளைவிடவா இவை கௌரவம் அளித்துவிடப் போகின்றன?
வார்த்தைகள் மனதில் நிற்பவை காலாகாலத்திற்கும். போர்த்தும் பொன்னாடை ஒன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் மற்றவர் தோளுக்குப் போகும், இல்லையெனில் பெட்டியிலோ பிரோவிலோ தூங்கும். அணிவிக்கப்படும் மாலை உதிரத் தொடங்கியதும் குப்பைக்கு போகும். என்ன நன்மை இவற்றால்? வார்த்தைகள் மனதிலிருந்து வரவேண்டியவை, ஆனால் பணம் இருந்தால் இவற்றை வாங்கி போர்த்திவிட்டோ, அணிவித்துவிட்டோ சென்று கொண்டே இருக்கலாம்.
நேற்று என் தோழி ஒருவர் என்னை அழைத்து இந்தப் பொன்னாடையெல்லாம் எங்கு கிடைக்கும் என்று கேட்டார். எனக்குத் தெரியாது என்று சொல்ல அவர் மிகவும் ஆச்சரியமாக உங்கள் நிகழ்வுக்காக நீங்கள் வாங்குவீர்கள் தானே என்றார். இன்றுவரை இல்லை இனிமேலும் இல்லை என்றேன். என் அழைப்பிற்கு இணங்கி வருபவர்களுக்கு நான் அளிப்பது நெஞ்சார்ந்த ஒரு நன்றியும், நினைவுக்காக, என் சக்திக்குத் தகுந்தார் போல் உபயோகமாகும் ஒரு பொருளும் தான் என்றேன்.
ஆனால் நீங்கள் பொன்னாடை போர்த்திக் கொண்டிருப்பது போன்ற படங்கள் பார்த்தேனே என அடுத்த கேள்வியை முன்வைத்தார். அது போர்த்த விரும்பும் அவர்கள் மனதிற்கு நான் அளிக்கும் மரியாதை என்றேன்.
உங்களுக்கு அவர்கள் செய்யும் மரியாதையையாவது நீங்கள் திருப்பிச் செய்ய வேண்டாமா என்றார். அவர்கள் அதை கௌரவப்படுத்துவதாக பார்க்கிறார்கள், அதனால் செய்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்களுக்காக நான் அதைப் பெற்றுக்கொள்கிறேன். அதற்காக எனக்கு உடன்பாடில்லாத விஷயத்தை நான் யாருக்காவும் செய்ய மாட்டேன் என்றேன்.
முதலில் கூட்டத்தில் சிலரை மட்டும் அழைத்து ஏன் கௌரவிக்க வேண்டும்? அப்பொழுது மற்றவர்கள் எல்லாம் கௌரவிக்கப்பட வேண்டாதவர்களா? நமக்காக நேரம் செலவழித்து வரும் மனிதர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே! இதில் பெரிய மனிதர், சிறிய மனிதர் என்ற பாகுபாட்டை ஏன் திணிக்க வேண்டும்?
அரசியல் ஆதாயங்களுக்காக அரசியல் கூட்டங்களில் இவை நடக்கலாம். ஆனால் இலக்கிய கூட்டங்களில் எதற்கு இதை செய்ய வேண்டும். ஒருவரின் தனித்தன்மையையோ, அவர் எழுத்துக்களுக்காகவோ, அவர் கலைக்காகவோ, இல்லை நற்செயலுக்காகவோ கௌரவிக்கப்பட வேண்டும் என நினைத்தால் அவர்களைப் பற்றிய ஓரிரு வார்த்தைகளை சொல்லலாம். வந்திருக்கும் மற்றவர்களும் அவர் யார் எனத் தெரிந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாக அமையலாம். எதற்கு இந்த ஆடையும் மாலையும்?
பகுத்தறிவாளர்கள் என தன்னை அறிவித்துக் கொள்பவர்கள் கூட இந்த சம்பிரதாயத்தை கேள்வி கேட்காமல் கடைபிடிப்பது ஆச்சரியமாகவே உள்ளது எனக்கு!
(இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதியதில்லை…..எப்பொழுதும் போல் என் சிந்தனைப் பகிர்தல் மட்டுமே!)
– லதா