கட்டுரை

ஆரம்பியுங்கள் இன்றே உங்களிடம் இருந்து

இது பெண்ணியம் பேசும் பதிவோ

பெண் அடிமை படுத்தும் பதிவோ

இல்லை … உடனே நடுநிலைவாதியா என்று உங்கள் அரசியல் வார்த்தைகளை இங்கே தூக்கி வராதீர்கள்.

நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் பெரும்பாலும் உளவியல் சார்ந்தது. யதார்த்தமானது. வேண்டுமானால் யதார்த்தமான நடைமுறை பதிவு என்று வைத்துக் கொள்ளுங்கள் பெயரை !

இன்று அதிகாலை கொஞ்சம் ரம்யமான தான் இருந்தது !

ஞாயிறு என்பதால் பிள்ளைகளும் எங்கும் கிளம்பும் வேலை இல்லாமல் ஓய்வில் உறங்கி கொண்டு இருந்தார்கள். சரி காலை வேலைகளை சற்றே தளர்த்திதள்ளிப் போட்டுவிட்டு பிறகு செய்யலாம் என்று ஒதுக்கியாகி விட்டது.

வெளியில் சூழலும் மிகவும் ரம்யமாக இருந்தது. அக்னிநட்சத்திரத்துக்கு உண்டான தாக்கம் குறைந்து இருந்தது போல உணர்ந்தேன். விடிந்து இவ்வளவு நேரம் ஆகியும் சூரியன் கொஞ்சம் எட்டிப்பார்க்காமல் இருந்தது !

சூடாக ஒரு தேநீரை கோப்பையில் ஏந்தி ஒரு புத்தகம் எடுத்து உட்கார்ந்தேன் படிப்போம் என்று. துவக்கம் நன்றாக தான் இருந்தது. சில சிறு கதைகளின் தொகுப்பு மற்றும் நிஜ நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த புத்தகம் மொத்தம் 44 தனி கதைகள் உள்ளது. இதன் பெயர் எனக்கு கூற விருப்பம் இல்லை. காரணம் இந்த புத்தகம் யாருக்கும் பரிந்துரைக்கும் எண்ணம் இல்லை.

முந்தைய நாள் தான் ஒரு புத்தகம் முழுதாக படித்து முடித்து இருந்தேன் (ஆதுர சாலை) இதனை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். அதற்கு இடையில் வேறு வேலைகள் வந்துவிட்டபடியால் சரி இன்று எழுதலாம் என்று நினைத்து இருந்தேன்.

இன்று சற்று ஓய்வாக தானே உள்ளோம் ஒரு புது புத்தகம் படிக்கலாமே என்று எடுத்தது தான் தவறாகி விட்டது… காலங்காத்தால 7 மணிக்கு எல்லாம் இந்த பதிவை எழுத உக்காத்திட்டாங்க பாஸ். 🥺🥺😠

அதில் ஒரு தலைப்பில் உள்ள கதை சுருங்க இங்கே எழுதுகிறேன். அனைத்துமே இரு பக்க கதை தான். “சிறந்த தம்பதி” இது தான் கதையின் பெயர். இதில் கதையில் பிழை ஒன்றும் இல்லை. கருத்து ஒரு சதவிகிதம் கூட ஒத்துப் போகாத ஆனால் 35 வருடங்கள் உடன் குடும்பம் நடத்தும் அந்த தம்பதிக்கு பரிசு கொடுக்கப்படுகிறது. கதையின் முடிவில். இந்த கதையில் பிழை இல்லை. கருத்தில் பிழை இல்லை. ஆனால் …

இந்த புத்தகத்தில் எல்லா இடத்திலும் வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் என்று வரும் போது ஒருமையில் கையாளப்படுவதும் ஆண் என்னும் போது சிறு வயது என்றால் கூட மரியாதையான வார்த்தைகள் உபயோகிப்பதும் தான்.

இங்கே “பெண்ணியம் பேசவில்லை என்பதை ஆணித்தரமாக கூற விழைகிறேன். பெண்ணியம் என்று உங்களுக்கு தோன்றினால் இங்கேயே படிப்பதை நிறுத்திவிட்டு பதிவை கடந்துவிடுங்கள்”

என்னுடைய பலபதிவுகளில் உளவியல் சார்ந்த சிக்கல்கள் வெளி பார்வைக்கு தெரியாது உள்ளார்ந்து ஊறிவிடும் என்று பல வருடங்களாக ஆங்காங்கே பதிவு செய்து கொண்டு தான் உள்ளேன்.

அதை சார்ந்த பதிவாக தான் இதுவும்.

இதை விளக்கும் முன் ஒரு சிறிய கதையை (எல்லோரும் அறிந்தது தான்) இங்கே முன் வைத்துவிடுகிறேன். அப்பொழுது தான் முழுமையாக கருத்து புரியும்.

ஒரு ஆங்கிலேய நபர் நமது இந்தியாவை சுற்றி பார்க்க வந்த பொழுது நம்முடைய நாட்டு நண்பரிடம் கேட்கிறார் ” எங்கள் நாட்டில் யாரை சந்தித்தாலும் அது பாலின பாகுபாடு இல்லாமல் கைகுலுக்கி அல்லது கட்டி அனைத்து அன்பை / வரவேற்பை பகிர்வோம், உங்கள் நாட்டில் பெண்களுடன் கை குலுக்குவதை கூட ஏன் மறுக்கப்படுகிறது / அனுமதிப்பது இல்லை “

அதற்கு நமது நாட்டு நண்பர் கேட்கும் கேள்வி “உங்கள் நாட்டில் உங்கள் அரசியின் கையைய் யாராவது பற்றி குலுக்குவது உண்டா ? பொதுஜனம்” என்று கேட்க … “இல்லை அது எப்படி முடியும் ? அவர் அரசியாயிற்றே” என்று பதில் உரைக்கிறார்.

அதற்கு விளக்கமாக நமது நண்பர் கூறுவது ” எங்கள் நாட்டில் ஒவ்வொரு பெண்களும் அரசிகள் ! அதனால் தான் நான் எங்கள் நாட்டு அரசிகளுடன் பிறரை கை குலுக்க அனுமதிப்பது இல்லை” என்று !

இப்பொழுது இங்கே ஒரு சாரார் “பெண்ணடிமை தனம் என்று இந்த பதிவை புறம் தள்ளி கிளம்பினால், அங்கேயே புரிதல் நின்று விடும்”. தொடர்ந்து படித்தால் …. இது பெண்ணியமோ பெண் அடிமை தனமோ கிடையாது என்பது விளங்கும்.

இப்பொழுது விசயத்திற்கு வருவோம் !

இங்கே ஆண் பெண் என்னும் இந்த வார்த்தை பேதத்தை இந்த எழுத்தாளர் காட்டி இருப்பது மிகப் பெரிய முரண். இதில் அந்த எழுத்தாளர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கலை கையில் எடுக்கும் நபருக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அந்த கலையை இந்த சமூகம் உற்று நோக்கும். பல நாடக மேடைகளில் தான் சுதந்திரத்திற்கான உயிரோட்டமான சிந்தனை தூண்டல் ஆரம்பித்தது. இது மனதின் ஆழத்தில் பதிந்து செயல்வடிவம் கொடுக்கும் ஒன்று. அப்படி இருக்க இன்று உள்ள எழுத்தாளர்கள் மட்டும் அல்ல பல படைப்பாளிகள் இந்த சிந்தனை மறந்தது ஏன் ?

பல திரைப்படங்களில் தொலைக்காட்சியில் என்று மட்டும் இல்லாமல் இன்று எழுத்துலகில் கூட பரவலாக பெண்களை கீழிறக்கி தான் வைத்து உள்ளார்கள். இங்கே என்ன உளவியல் சிக்கல் நிகழ்ந்து விடப்போகிறது என்று உங்கள் சிந்தனை அல்லது கேள்வி எழலாம்.

உளவியலில் எப்படி சுதந்திரத்தை மேடை நாடகங்களில் தூண்ட முடிந்தது அதே போல பெண்கள் மீதான இது போன்ற வார்த்தை வன்முறையில் இருந்து ஆரம்பித்து அடுக்கடுக்காக அவள் உடல் வறை அடுத்தவர்கள் ஆக்கிரமிப்பு நடத்துகிறார்கள்.

உடல் என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட சொத்து. இதை சூறை ஆடும் எண்ணத் தூண்டல் இங்கே ஆரம்பித்து விடுகிறது.

எந்த பெண்ணையும் மரியாதையுடனும் கண்ணியத்துடன் இங்கே வார்த்தை கையாடல் கூட இல்லை என்றால் இனி வரும் சமூக குழந்தைகளின் சிந்தனை எப்படி இருக்கும் ? இயல்பாகவா ?

உடனே பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று உங்கள் உழுத்து போன பஞ்சாயத்தை தூக்கி வராதீர்கள்.

இந்த தலைப்பு இன்னும் பெரியது … அது இன்னும் ஒரு நாள் பார்ப்போம்.

இங்கே முற்றும் கருத்து :

உங்கள் வீட்டு பெண்களை மட்டும் அல்ல நாட்டுப் பெண்களையும் காக்க வேண்டும் என்றால் உங்கள் வார்த்தைகளில் சம மரியாதை கொடுங்கள். பிறர் மனதில் அது ஒரு என்னத்தூண்டலை உருவாக்கும். பிறகு பாருங்கள் அவர்களின் பாதுகாப்பு படிப்படியாக தானே நடக்கும். ஒருவரின் முன்னெடுப்பு ஒரு சிறிய தீ பொறி… அது பற்றி கண்டிப்பாக எல்லா இடத்தில் சீக்கிரம் பரவும்…

ஆரம்பியுங்கள் இன்றே உங்களிடம் இருந்து !

எண்ணமும் எழுத்தும்

Devi P Kannan

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button