பாசமலர் காலம்!

நடிகர் திலகம் வீட்டில் கமலா அம்மா செய்யும் விரால்மீன் குழம்பை எம்ஜியாருக்கு கொடுக்காமல் சாப்பிட்டு விட்டால், சின்ன குழந்தையாக வீடு தேடி வந்து சண்டை போடும் எம்ஜிஆருக்கு பயந்து கொண்டு, விரால்மீன் வந்த கையோடு சின்னவருக்கு போன் போட்டு, கமலாம்மா சாப்பாட்டுக்கு வரச்சொன்ன காலமெல்லாம் பாசமலர் காலம்!
சின்னவரும் போகும் போதெல்லாம், பாலக்காட்டு ஸ்பெசல் கருவாடுகளை தம்பிக்கு கொண்டு போய் கொடுப்பது வழக்கம்!
“அவர் பொய்யாக, போலியாகவெல்லாம் நடிக்க மாட்டார்! பாசம் காண்பித்தால் முழுமையாகத்தான் காட்டுவார்! “மலர்ந்தும் மலராத” பாட்டும் “இதோ எந்தன் தெய்வம்” பாட்டும் உயிர்! “மாதவி பொன் மயிலாள்” பாட்டுக்கு ஒரு நடை நடந்து வருவேன்! அதை மட்டும் திரும்ப திரும்ப போடச்சொல்லி குழந்தை போல் கை தட்டி மகிழ்வார்! தில்லானா மோகனாம்பாள் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பார் என்று அவருக்கே கணக்கு தெரியாது”.
“வசதி வந்ததும் போட்டி போட்டு தர்மம் செய்தோம்! அதை விடுங்கள், அது எல்லோரும் செய்வது! தனக்கு போக தானம்! அதிலெல்லாம் வியப்பில்லை, அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல், அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் கிடைக்கும் கொஞ்ச காசையும் நண்பர்களுக்கும், கஷ்டம் என்று கேட்டவர்களுக்கும் உதவினாரே ஆரம்ப கால எம்ஜிஆர், அவர் அங்கேதான் இமயமாக உயர்ந்து போனார்” இதை பின்னாட்களில் எம்ஜிஆர் பற்றி
பெருமிதத்தோடு சொன்னவர் நடிகர் திலகம்.
‘மதுரை ஸ்ரீபாலகான சபா’ சென்னையில் முகாமிட்டிருந்த சமயம். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தான் சகோதரர் எம்.ஜி.ஆர்., வீடு இருந்தது. காலையிலும், நாடகம் முடிந்த பின்பும் மற்றும் ஓய்வு நேரங்களிலும் அவரது வீட்டிற்குச் செல்வேன். அவரது அம்மா, என்னையும் ஒரு மகனாக எண்ணி பழகியதை, என்னால் மறக்க முடியாது.
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து, குளித்து, எனக்காக காத்திருப்பார் எம்.ஜி.ஆர்., நான் சென்றதும், இருவரும் அருகருகே அமர்ந்த பின்தான், அவரது அம்மா எங்களுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறுவார். நான் செல்வதற்கு சிறிது தாமதமாகி, அதற்குள் அண்ணனுக்கு பசி எடுத்து விட்டால், ‘அம்மா… எனக்கு பசிக்கிறது…’ என்று சொல்வார். அதற்கு, ‘இரு… கணேசன் வரட்டும்; சேர்ந்து சாப்பிடலாம்…’ என்பார் சத்யா அம்மா.”
தனக்கு கிடைத்த குறைந்த பணத்தை தனக்கே செலவழித்துக்கொள்ளாமல், இரவு சினிமா கூட்டிப்போய் படம் பார்த்து விட்டு வரும் போது, சேட்டு கடையில் சப்பாத்தி சாப்பிட வைத்து, வீடுவரை கொண்டு போய் விட்டு விட்டு வீடு செல்லும் எம்ஜிஆரின் ஈகை குணத்தின் மேல் அப்போதே சிவாஜிக்கு வியப்பு.
எம்ஜிஆருக்கு சிவாஜி அம்மாவும்,
சிவாஜி சாப்பிட்ட பின்பே எம்ஜிஆருக்கு சத்யா அம்மா சோறிட்டதும் வரலாறு!
1984ல் உடல்நலம் கெட்டு அமெரிக்கா புரூக்ளீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் எம்ஜிஆர், அவராகவே விரும்பி பார்க்க வேண்டும் என்றது சிவாஜியைத்தான்!
அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின், சிவாஜியிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்ட எம்ஜிஆரின் ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போய் விட்டது என்பது செய்தி.
சினிமா,நடிப்பு என்பதை தாண்டிய ஒரு உன்னதமான நட்பு சிறு வயது முதலே இவர்களிடையே இருந்துள்ளது, அது கடைசி வரை மாசுபடவேயில்லை என்பதை நடிகர் திலகம் சொன்னதிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி
தினமலர் வாரமலர்.