மாமனிதர் விருது பெற்றதரணி

மாபெரும் சமூக சேவகி மறைந்தார்
சளைக்காமல் சமூகசேவை செய்து பாலம் கல்யாண சுந்தரம் பாணியில் மாமனிதர் விருது பெற்ற
தரணி’ (67 ) சென்னையில் சமீபத்தில் மறைந்தார். சிறுவயதிலிருந்தே இதயம்
சம்பந்தப்பட்ட குறைகளை பொருட்படுத்தாமல் மாநில அரசுப் பணி செய்து பணி
மூப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் சமூக சேவைகளை நிறுத்திவிடாதது மட்டுமின்றி புது
உத்வேகத்துடன் முழு நேரப் பணியாக உழைத்தார். முதலில் இவர் சேவை பெரம்பூர் ரயில்வே
மருத்துவமனை போன்ற அரசு சுகாதார நிலையங்களின் அவசர அறுவை சிகிச்சைகளுக்கு
குருதி தானம் தருவோர்களைத் தொடர்பு கொண்டு ஊக்குவிக்கும் பணியாக ஆரம்பித்தது.
அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அபிவிருத்தி செய்து கால் ஊனமுற்றோருக்கு ஊன்றுகோல்
வாங்கித் தருதல், சக்கர நாற்காலி ஏற்பாடு செய்வது, சர்க்கரை வியாதி போன்ற குறைகள்
உள்ள சிறுவர்களுக்கும் மற்றவர்களுக்கும் diaper போன்றவற்றை ஏற்பாடு செய்வது,
உழைப்பாளிகளுக்கு மத்திய உணவு தருவித்தல், இன்சுலின் போன்ற மருந்து மாத்திரைகள்
வாங்க வசதியின்றி இருப்பவர்களுக்கு நன்கொடையாளர் மூலமாக அவற்றை ஏற்பாடு
செய்வது போன்ற எண்ணற்ற சேவைகளில் இறங்கினார். பல்வேறு பரிசுகள், விருதுகள்
பெற்றவர். தன் ஓய்வு ஊதியம் முழுவதையுமே ஊழியத்திற்காகச் செலவு செய்தவர். திருமணம்
செய்து கொள்ளாமல் உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாமல் புன்சிரிப்புடன் அவர்
சுறுசுறுப்புடன் இயங்கியதை ஏனைய சமூக ஊழியர்கள் எளிதில் மறக்க முடியாது. இவ்வளவு
வேலைகளுக்கு இடையேயும் புனே அருகில் உள்ள மகர் பாபா நிலையத்திற்கு வருடம்
நான்கைந்து முறை சென்று விட்டு சமூக, ஆன்மிக உணர்வுகளுக்கு புத்துணர்ச்சி
பெற்றுக்கொண்டு வருவார். அன்னாரின் மறைவு சமூக ஆர்வலர்களுக்கு பெரிய இழப்பாக
இருக்கிறது.
படம், தகவல்
ஸ்ரீதர் சாமா