உன் மிதமிஞ்சியக் காதலால்…../கவிதை

நெடுந்தூரப் பயணத்தின்
விளைவாக லேசான மூச்சிரைத்தல்
சுவாசம் சற்றே அலட்சியப்பட்டு
எட்டி நின்று அழைக்கிறது.
வறண்ட உதடுகளின் மேற்புறத்தை
ஈரப்படுத்த நாவின் எச்சில் தவறுகிறது.
தொண்டைக் குழிக்குள் சிக்கிய
முள்ளாய்….ஒரு அலட்சிய பயபந்து
உருள்கிறது.
நான் சதமடித்த மட்டை வீரரை
தேடிப்பிடித்து…வெற்றி பெற்ற
வீரர் ஒருவர் கையொப்பமிட்ட
மட்டையைத் தருகிறேன்.
எனக்காக அந்த அலட்சியப்
பந்தை அடித்து விரட்டுங்கள் என்று !
நகைப்பொலியோடு கூடிய அலட்சிய
மைதானத்தில் என் கோரிக்கையைத்
தவிர்க்கிறார் அவர்.
நடந்து நடந்து பாதங்களின் அடியின்
கொப்பளங்கள் சுண்ணாம்புத் தடங்களாய்
வழித்தெடுக்க முடியாத நீர் தரையில்
சற்றே நின்று ஆசுவாச நடனத்திற்கு
அனுமதி மறுக்கப்பட்ட ஆடலரசியானேன்.
மிகைத் தூரம் நடக்கையில் எனைக்
கடந்து போகும் வாகனங்கள் அனைத்தும்
பாதசாரியான என்னை நகைப் பார்வை
பார்க்கிறது.
தொடர முடியாத தூரங்களில் நின்றபடி
தொட்டுவிடேன் என்று கேலி செய்கிறது.
எல்லாம் கடந்து மேற்கூரையற்ற ஒரு குடிலைக்
கண்டுபிடித்தேன். நீர்குவளையின் அடிப்
பாசியின் காதலை விடமாட்டேன் என்று
எஞ்சியிருந்த நீர் என் தாகம் தணிக்க
தடுமாறியது. உறக்கம் தொலைத்த
விழிகளின் இரப்பைகள் விவாகரத்து ஆன
இணைகளைப் போல முறைத்துக் கொள்ள,
அயர்ச்சியில் எனக்கான விரிக்கப்பட்டு
இருந்த அலட்சியப் படுக்கைக்குள்
விழுந்தேன்…..!
இந்த அலட்சியப் பூச்சிகள்
போர்வைக்குள் புகுந்து கொண்டு உடல்
முழுக்க ஊர்ந்து கொண்டு இருக்கிறது.
இங்கிருந்து எனை மீட்க உன்
மிதமிஞ்சியக் காதலால்
மட்டுமே முடியும்.
எதிர்பார்ப்புடனும்
ஏக்கத்துடனும் ……….
லதாசரவணன்
