தமிழ் என்றும் அமிழ்தே –

குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் கடுந்தோள் கரவீரன்
குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் கடுந்தோள் கரவீரன்
” கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பரழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து
உயிர் செகுக்கும்
சாரனாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே “.
ஓங்கி வளர்ந்திருந்த மரமொன்றின் கிளையினிலே ஒன்றிய அன்பால் உணர்வுகள் கலந்து ஓர் இணைக் குரங்குகள் ஆணும் பெண்ணுமாய் உற்சாகம் மேலிட உட்கார்ந்திருந்தன!
அவைகள் ஈன்ற இளம் குட்டி யொன்றும் அன்னையின் மடியில் உறங்கிற்றாங்கே!
தந்தைக் குரங்கு தனது துணைக்கோர் முத்தம் தந்த பின்னர் தாவிப்பாய்ந்தது வேறோர் கிளைக்கு!
தடம் பிறழ்ந்து தடுமாறி விட்டதாலே “தடால்” என வீழ்ந்தது தரையின் மீது!
கணவன் குரங்கு வீழ்ந்த இடத்திற்குக் கைக்குழந்தையுடன் கடுகி விரைந்தது தாய்க் குரங்கு!
மரக்கிளை விட்டு விழுந்த ஆணோ: மலை முகடு தட்டி மண்டை பிளந்து மரண மடிதனில் ஆழ்ந்து கிடந்தது. மனம்
எரிதழலாக மந்தி தவித்தது. கனவிலும் தான் பிரியாக் கடுவனைப் பிரிந்து கணமும் உயிர் வாழ்தல் இயலாது என்று கண்ணீர் பெருக்கி கதறி துடித்து கைகளால் முகத்தில் அறைந்து கொண்டது.
பெற்ற குழந்தையோ காட்டில் வாழும் விதம் கற்றிடவில்லை எனினும் என்ன: என் உற்றார் உறவினர் அதைப் பழகுவார் எனவே ஒப்படைப்பேன் உடனே அவரிடம் என ஓடி உறுதுணையாய் இருப்பீர் என் மகவுக்கென உரைத்தோர் முத்தம் குட்டிக்கு ஈந்தது.
அதன்பின்னர் மனைவியாய்த் தனையேற்று மரக்கிளையில் மஞ்சம் கட்டி மக மகவொன்றும் கையில் தந்த மணவாளன் தனைப் பிரிந்து துடிக்கின்ற வாழ்வுதனை விரும்பாத அக்குரங்கு துணைவனுடன் போய்ச் சேர முடிவு கட்டி உச்சிமலை மீது வேகமாய் ஏறிச் சென்று உருத் தெரியாமல் கீழே விழுந்து உயிர்தனை விட்டதம்மா!.
அழகு கொழிக்கின்ற மாந்தரிடம் அன்பின் நிழல் கூட இல்லாத நிலையும் உண்டு.
அழகென்றால் என்ன விலை கேட்கும் குரங்கின் அன்புப் பெருக்கு கண்டு உருகி விட்டான அக் கவிஞன்!
”சங்கத்தமிழ்” என்னும் நூலில் கலைஞர் அய்யாவின் உரையில் இருந்த பதிவு.
ஐந்தறிவு படைத்த உயிரினம், குரங்கு என்றாலும் தனது அன்பின் வெளிப்பாட்டை, இலக்கிய பாடல்களாய் எழுதி வைத்து படிக்கும் போது நெகிழ வைத்து மிக அற்புதமாக ஒரு புலவர் பாடல் எழுதியுள்ளது சங்கத் தமிழுக்கு பெருமைதானே
