“இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, கமலஹாசன் தயாரித்த “ஹேராம்” உள்பட 4 படங்களில் நடித்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் நடித்த படங்களுக்கும், அந்தக் காலகட்டத்தில் உருவான மற்ற படங்களுக்கும் இரவு – பகலாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தபோது, படங்களில் நடிப்பதற்கு வந்த அழைப்புகளை வாலி ஏற்கவில்லை.
பிற்காலத்தில், நண்பர்களின் அழைப்பின் பேரில், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
கே.பாலசந்தர் இயக்கிய “பொய்க்கால் குதிரை”, கமலஹாசனின் “ஹேராம்”, “சத்யா”, “பார்த்தாலே பரவசம்” ஆகிய 4 படங்களில் நடித்ததுடன், “கையளவு மனசு”, “அண்ணி” ஆகிய டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்.
ஏராளமான கவிதை நூல்கள் எழுதியிருப்பதுடன், “அவதாரபுருஷன்” (ராமாயணம்), “பாண்டவர் பூமி” (மகாபாரதம்), ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.
“நானும் இந்த நூற்றாண்டும்” என்ற தலைப்பில் தன் சுய சரிதையை எழுதியுள்ளார்.
1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது “ஒளிவிளக்கு” படத்தில் வாலி எழுதியிருந்த “இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-
“எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.
அண்ணியார் ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, நான் அண்ணியாருக்கு ஆறுதல் சொன்னேன்.
“உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை” என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க என்னிடம் சொன்னார்கள்.
என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும் அண்ணியாரிடம், “அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்” என்று சொன்னேன்.”
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
வாலி -திலகம் தம்பதிகளுக்கு ஒரே மகன் வி.பாலாஜி. “எம்.ஏ” பொருளாதாரம் படித்தவர். சொந்த தொழில் செய்கிறார்.
நன்றி: மாலை மலர்