இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 69 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவாகவே பதிவாகி உள்ளன. இந்தியாவில் இதுவரை 5,31,300 பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ள நிலையில் இறப்பு விகிதம் 1.18% என்ற குறைந்த விகிதத்திலேயே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 42 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
குறைவான உயிரிழப்புகள் தொடர்பாக ஸ்விட்சர்லாந்து, பிரேசில், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியர்களின் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாகவே கொரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இட்லி உண்பது, மேற்கத்திய மக்களைவிட 4 மடங்கு அதிகமாக காய், கனிகளை சாப்பிடுவது, நாளொன்றுக்கு 1.2 கிராம் அளவுக்கு தேநீர் குடிப்பது, தினசரி சுமார் 2.5 கிராம் அளவுக்கு மஞ்சளை உணவு வகைகளில் சேர்ப்பது உள்ளிட்ட காரணங்களால், இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் அதனால் கொரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.