பொன்னுத்தாய். தமிழகத்தின் பிரபலமான முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர்

நாதஸ்வரத்தின் எடை, அதை கையாளும் ஆற்றல், அனைத்தும் ஆண்களுக்கே சாத்தியம். எனவே, ஆண்களால் மட்டுமே நாதஸ்வரம் வாசிக்க முடியும்” என்ற வாதத்தை உடைத்தெறிந்தவர் பொன்னுத்தாய். தமிழகத்தின் பிரபலமான முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் இவர். தனது நாதஸ்வர இசையால் பல கோடி உள்ளங்களைக் கட்டிப்போட்டவர். மறக்கப்பட்டு விட்ட அல்லது மறைக்கப்பட்டு விட்ட தமிழ் இசைக் கலைஞர்களின் வரலாற்றுப் பட்டியலில் ஒன்று தான் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத்தாயின் வரலாறும்.
அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நாதஸ்வர இசைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இவர் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது 83 வது வயதில் இறந்தார். மிகப்பெரிய சாதனையாளரின் சகாப்தம் சத்தமில்லாமல் முடிந்தது. அதன் பின்னரும் அவர் குறித்து சிலாகிப்பவர்கள் இல்லை.
இவரது தந்தை ஸ்ரீபதி. தாய் சுப்புத்தாய். இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள புது ஆயக்குடியில் 1929-ம் ஆண்டு சூலை மாதம் பிறந்தார் பொன்னுத்தாய். பொன்னுத்தாயின் குடும்பம் ஒரு இசைக் குடும்பம். இவரது அம்மா பாட்டும் அக்கா பரதநாட்டியம் கலையிலும் சிறந்தவர்கள். மாமா நடேசபிள்ளை மிருதங்க வித்துவான். புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தியிடம் மிருதங்கம் பயின்றவர். மற்றொரு மாமா வேலுச்சாமி பிள்ளை புல்லாங்குழல் வித்துவான்.
பொன்னுத்தாய் பிறந்தது ஆயக்குடி என்றாலும் இவரது வாழ்க்கை மதுரையை மையமாகக் கொண்டே அமைந்தது. அதாவது, பொன்னுத்தாய் நாதஸ்வரம் பயிலவேண்டும் என்பது அவரது அப்பாவின் ஆசை. “பெண்கள் நாதஸ்வரம் பயில்வது சிரமம். இசையோ நாட்டியமோ பயிலட்டும்” என மகள் நாதஸ்வரம் பயில்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார் தாய். இறுதியில் அப்பாவின் விருப்பமே வென்றது. பொன்னுத்தாய் நாதஸ்வரம் பயிலத் தயாரானார். அப்போது, பெண்கள் நாதஸ்வரம் பயில்வதற்கான முயற்சிகள் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. ஆனால் “பெண்கள் நாதஸ்வரம் வாசிக்கக்கூடாது” என தஞ்சாவூரில் பெரிய எதிர்ப்பு வலுத்திருந்தது. ஆனால் ஸ்ரீபதி இதை பொருட்படுத்தவில்லை. தனது முயற்சியிலிருந்தும் பின்வாங்கவில்லை. மகள் நாதஸ்வரம் கற்றே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் குடும்பமே மதுரைக்குக் குடிபெயர்ந்தது. பொன்னுதாய்க்கு ஒன்பது வயதானது. அவரை மதுரை பொன்னுசாமி பிள்ளை மகன் நடேசபிள்ளையிடம் நாதஸ்வரம் கற்க சேர்த்துவிட்டார் அவரது தந்தை. பின்னர் மதுரையே அவருக்கு எல்லாமாயிற்று.
நடேசபிள்ளையிடம் பொன்னுத்தாய் பயிற்சி பெற்றார் என வெறும் வார்த்தைகளால் சொல்லமுடியாது. காலை நான்கு மணிமுதல் ஆறு மணி வரையும் காலை ஒன்பது மணி முதல் ஒரு மணிவரையும் மதியம் மூன்று முதல் நான்கு வரையும் மாலை ஆறு முதல் ஒன்பது வரையும சாதகம் செய்தார். இது பல ஆண்டுகள் தொடர்ந்தது.
மதுரை சித்திரை திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சி தான் விழாவின் உச்சகட்டம். அந்த நிகழ்ச்சியில் தான் பொன்னுத்தாயின் நாதஸ்வர அரங்கேற்றம் நடத்துவது என முடிவாகியிருந்தது. அப்போது அவருக்கு பதிமூன்று வயது. தசாவதார காட்சிகளைக் காண கூட்டம் அலைமோதியது. அதற்கிடையே நாதஸ்வர இசை காற்றில் பரவத் துவங்கியது. “ஏதோ சிறுமி நாதஸ்வரத்தை தூக்க முடியாமல் தூக்கி வாசிக்கிறாள்..” எனக் கூட்டம் முதலில் “உச்” கொட்டி பரிதாபப்பட்டது. ஆனால். அவர் வாசிக்க வாசிக்க கூட்டம் பிரமித்தது. வாசிப்பது யார்.. என கூட்டம் முண்டியடித்து வந்துப் பார்த்தது. அதன் பின்னர் பொன்னுத்தாய்க்கு ஏறுமுகம் தான். செகந்திராபாத் ராமநவமி கலாசார விழாவும் பம்பாய் சண்முகானந்தா சபையும் இலங்கை, மலேசிய இசைச் சபைகளும் பொன்னுத்தாயை எங்கோ கொண்டு போய் நிறுத்தின. நாதஸ்வர பயிற்சியையும் அவர் விடவில்லை. சேத்தூர் ஜமீனின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவானான ராமையா பிள்ளை, பாடகர் செல்வரத்தினம் பிள்ளை, இசையமைப்பாளர் சீனிவாசராவ், ஜி. ராமநாதன், மன்னார்குடி குருமூர்த்தி பிள்ளை, சம்பந்தமூர்த்தி ஆச்சாரி.. என பலரிடம் பயிற்சி தொடர்ந்தது.
துவக்ககாலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை அழைப்புக்கு நாதஸ்வரம் வாசிக்க பொன்னுத்தாயைக் கூப்பிட்டார்கள். பெண் நாதஸ்வரம் வாசித்தவாறு நடந்து வருவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாத காலம் அது. “பிரச்னை வருமே” என பலர் பயந்தார்கள். “எதுவும் வராது நீ வாசிம்மா..” மகளை உற்சாகப்படுத்தினார் தந்தை. வாசித்தார் பொன்னுத்தாய். இப்படி, பெண்கள் நாதஸ்வரம் வாசிப்பதற்கு இருந்த தடைகள் ஒவ்வொன்றையும் தந்தையின் உதவியுடன் தகர்த்தார் பொன்னுத்தாய்.
மதுரை நாதஸ்வர சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். திருச்சி வானொலியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நாதஸ்வர ஆர்ட்டிஸ்டாகப் பணியாற்றியிருக்கிறார். தமிழகத்தில் அவரது நாதஸ்வர இசை ஒலிக்காத கோயில்கள், பிரபல மன்றங்கள் இல்லை. அதுபோல இந்தியாவில் பல மாநிலங்களில் இவர் நாதஸ்வர இசை ரீங்காரமிட்டிருக்கிறது. புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளையோடு இணைந்து அவர் கடம்பூர், சென்னை ஆகிய இடங்களில் நாதஸ்வர நிகழ்ச்சி நடத்திய நாட்களை தன் வாழ்நாளின் பாக்கியமாக கருதியவர். மதுரையில் 1960-ல் காந்தி மியூசியம் திறப்பு விழாவுக்கு ஜவஹர்லால்நேரு வந்தபோது இவரது நாதஸ்வர இசையைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனார். “எப்படியம்மா.. இவ்வளவு அழகாக.. வாசித்தாய்” என வியந்து பாராட்டினார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சியளித்து அங்குள்ள தமிழர்களின் மனங்களிலும் நிறைந்தார்.
இவரது கணவர் சிதம்பரமுதலியார் மதுரை நகராட்சி தலைவராகவும் எம்.எல்.சியாகவும் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்குழு தலைவராகவும் இருந்தவர். 1972-ம் ஆண்டு அவரது மறைவுக்குப்பின்னர் பொது நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிப்பதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார் பொன்னுத்தாய்.
இவரைப் பற்றி மூத்த நாதஸ்வரக் கலைஞர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், “கச்சேரியின்போது மூச்சு வாங்கும் என்பதால், இரண்டு கலைஞர்கள் மாற்றி மாற்றி நாதஸ்வரம் வாசிப்பதுதான் வழக்கம். ஆனால், ஆண் கலைஞர்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில் தனி ஆளாகவே வாசித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் பொன்னுத்தாய். மேடையைக் கையாளும் ஆளுமைப் பெற்றவர். அவரது இளம் வயதில் மாதத்திற்கு இருபத்து மூன்று நாட்கள் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதிக ஆசைப்படாதவர். நாதஸ்வர கலைஞர்களுக்காக நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கம் வீட்டுமனை ஒதுக்கிய போது “என்னிடம் போதுமான இடம் இருக்கிறது. நலிந்த கலைஞர்களுக்குக் கொடுங்கள்.” என பெருந்தன்மையாகச் சொன்னவர்.. யாரிடமும் வாய்ப்பு கேட்டு போகாதவர்.
“அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சிக்கு மூவாயிரம் ரூபாய் வாங்கினார். இவரது இசை நிகழ்ச்சிக்கு தேதி கேட்டு பணத்துடன் பலர் காத்திருந்தனர்.. 1953-ல் இவருக்கு திருமணமானது இவரது கணவர் மறைவுக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிப்பதை நிறுத்திக் கொண்டார். அதனால் வருமானம் குறைந்தது. அவரிடமிருந்த சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தது. தனது பெண்களின் திருமணத்துக்காக அவருக்குப் பரிசாகக் கிடைத்த 23 தங்கப்பதக்கங்களையும் விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். ஒரு கட்டத்தில் அரசு கொடுத்த ஐநூறு ரூபாய் மாத பென்ஷனை நம்பி வாழ்ந்தார். ஆனால் கடைசி வரை யாரிடமும் உதவி கேட்டு அவர் போய் நின்றதில்லை…” என்றார்.
இவரை நான் இருமுறை நேர்காணல் கண்டிருக்கிறேன். அப்போது அவர் ஏழ்மை நிலையில் இருந்தார். சொந்த வீடில்லாமல் புறக்கூடுகள் போன்றிருந்த வரிசை குடியிருப்பில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவரது உடலும் உள்ளமும் ஒரு சேர சோர்ந்திருந்தது. கேள்விகளுக்கு சுருக்கமாகவே பதில் சொன்னார். அதுவும் வார்த்தைகள் சுரத்தில்லாமல் வந்துவிழுந்தன.
‘நான் ருதுவாவறதுக்கு முன்னால நாதஸ்வரத்தை தூக்கிட்டேன். என்னோட முதல் குரு மதுரை சேதுராமன், பொன்னுசாமியின் அப்பா நடேசப்பிள்ளை. நான், சேதுராமன், பொன்னுசாமி, திருமோகூர் முனியாண்டி, மீனாட்சி கோயில் வித்வான் அழகுசுந்தரம் எல்லோரும் சேர்ந்து நடேசப்பிள்ளைகிட்ட நாயனம் கத்துக்கிட்டோம். ஒம்பது வயசுல நாயனத்தை எடுத்த நான் ஒன்பது மாசக் கர்ப்பிணியா இருக்கறப்பவும் சிரமப்படாம விடிய விடியக் கச்சேரி வாசிச்சிருக்கிறேன்.. தங்க மெடல்களை அழிச்சு நகை செஞ்சு, ரெண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்தேன். மதுரை காந்தி மியூசியம் திறப்பு விழா. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு போன்றவற்றிற்கு நாதஸ்வரம் வாசிச்சிருக்கேன். எம்.எஸ்.விஸ்வநாதன் கல்யாணத்துக்குக்கூட என் கச்சேரிதான். நான் நாதஸ்வரக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரா இருந்தப்போ, பல கலைஞர்களுக்கு அரசாங்கத்தோட வீட்டுமனை கிடைக்கச் செய்தேன். எனக்கும் குடுத்தாங்க. அப்போ நான் வசதியா வாழ்ந்ததால, வேண்டாம்னு திருப்பிக் கொடுத்துட்டேன்” என அவர் சொல்லிவிட்டு விரக்தியோடு முறுவலித்தார்.
அவர் பெற்ற விருதுகளைப் பற்றி கேட்டபோது “பிரதமராக இருந்த நேருவும் அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் என் வாசிப்பை ரசித்து பதக்கம் வழங்கியிருக்காங்க. அதுபோல முதல்வராக இருந்த பக்தவசலம் தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டியிருக்காங்க. முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோரிடமும் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.. நாதகான அரசி, நாதகான ரத்தினம், நாதகான நிதி,, நாதகலாவாணி, நாதஸ்வர வித்வாம்சினி, கலைமாமணி, முத்தமிழ் பேரறிஞர், கலைமுதுமணி உள்ளிட்ட பல பட்டங்களை அரசு, பல்கலைக்கழகங்கள், தமிழிசை மன்றங்கள் தந்து பெருமைப்படுத்தின.
கலைமாமணி விருது 1990-ல் கிடைச்சது.. அந்த வருசம் கவிஞர் வைரமுத்து.. நடிகர்கள் ராதாரவி, பிரபு, எஸ்.எஸ். சந்திரன், நடிகை சீதா, மலேஷியா வாசுதேவன், எம்.எஸ். ராஜேசுவரி. என நிறைய பேர் வாங்கினாங்க..” என நினைவில் இருந்ததைச் சொல்லி மெல்லியதாகச் சிரித்தார். கொஞ்சம் நாதஸ்வரம் வாசித்துக் காட்டுங்களேன் என்றேன். வீட்டில் நாதஸ்வரத்தை வைக்க இடமில்லாமல் அருகிலுள்ள கோயிலில் நாதஸ்வரத்தை வைத்திருந்தார், கோயிலுக்குக் கூட்டிச் சென்றார். சம்மணமிட்டு உட்கார்ந்தார். வாசிக்க ஆயத்தமானவுடன் நிமிர்ந்து உட்கார்ந்து நாதஸ்வரத்தை கையிலேந்தி லாவகமாக வாசித்தார். வயதைத் தாண்டிய கம்பீரம் தெரிந்தது. தனது ஏழ்மையை வாய்விட்டு அவர் சொல்லவில்லை. ஆனால் சூழல் காட்டியது. கனத்த இதயத்துடன் தான் திரும்பினேன்.
பொன்னுத்தாயின் பேரன் (மகன் தங்கவேல் முருகனின் மகன்) விக்னேஸ்வரன் தனியார் பள்ளியில் மிருதங்க ஆசிரியராக இருக்கிறார். “பொன்னுத்தாய் இசையாலயா” என்ற இசைப்பள்ளியை நடத்தி வருகிறார். பொன்னுத்தாயிடம் நாதஸ்வரம் பயின்றவர். இவரிடம் பேசியபோது மேலும் சில தகவல்களைச் சொன்னார்..
“சபரிமலையில் புதிய ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யும் முன்னர் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அதனுடன் நாதஸ்வரம் வாசித்துச் செல்லும் பேறு பெற்றவர் எங்க பாட்டி பொன்னுத்தாய். உலகத்தமிழ் மாநாடு உள்ளிட்ட சிறப்பு மாநாடுகள், பெரிய அரசியல் மாநாடுகள், போன்றவற்றில் பாட்டியின் நாதஸ்வரம் ஒலித்திருக்கிறது. புட்டப்பர்த்தி சாயிபாபா முன்பாகவும் தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஆதீனங்களிலும் வாசித்திருக்கிறார். கடைசியாக பொது நிகழ்ச்சியென்றால் சில ஆண்டுகளுக்கு முன்னர் உழவர் சந்தை திறப்பு விழாவில் வாசித்தார். ஒன்பதாவது வயதில் துவங்கி 77 வயது வரை விடாது வாசித்தார். அதன் பிறகு குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் மட்டுமே வாசித்தார். பாட்டியிடம் பயிற்சி பெற்றவர்கள் பலர். அமெரிக்க பல்கலைக்கழக மாணவி கரிஷ்மாகிங் என்பவர் இங்கு வந்து பாட்டியிடம் நாதஸ்வரம் பயின்று மதுரையில் அரங்கேற்றம் நடத்தினார்.
பாட்டி யாரிடமும் எதையும் கேட்டுப் பெறாதவர்.. மதுரை சோமு தான் பாட்டிக்கு கலைமாமணி விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர். அப்போதுகூட வேண்டாம் என்று தான் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியில் அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பாட்டியிடம், “நீங்கள் ஒரு மனு கொடுங்கள் நான் உங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.” என வலியுறுத்தினார். “அதுவாக வந்தால் வரட்டும்.. நான் தேடிப்போகமாட்டேன்.”” எனச் சொல்லிவிட்டார்.” என்றார் விக்னேஸ்வரன்.
ஆண்கள் மட்டுமே சாதிக்கமுடியும் என்ற துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் சாதித்திருக்கிறார் என்றால் பெருமிதப்படவேண்டிய ஒன்று. ஆனால் அவர் தகுதிக்கேற்ற அளவு நினைவுக் கூரப்படவில்லை என்பது வேதனையானது.
– சஞ்சனா மீனாட்சி
நன்றி: அந்தி மழை