மற்றவை

ஜீன்ஸ் தயாரித்த லெவி ஸ்ட்ராஸ் பிறந்த நாள் இன்று.

லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) பிறந்த நாள் இன்று!

இன்றைய அவசர உலகில் ஆண்களின் முதல் தேர்வு ஜீன்ஸ் வகை டிரஸ்கள்தான். இந்தியாவை பொறுத்தமட்டில் ஆரம்ப நாட்களில் ஜீன்ஸ் என்பது ஆடம்பர உடையாக கருதப்பட்டுச்சு. ஆனால் காலப்போக்கில் ஆண்களும் பெண்களும் விரும்பி உடுத்தும் உடையாக மாறிடுச்சு. இப்போல்லாம் பள்ளி செல்லும் குழந்தைகள் கூட ஜீன்ஸ் உடுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களை நேர்த்தியாக வெளிப்படுத்துவதில் ஜீன்ஸ் உடைக்கு முக்கிய பங்கு உண்டு என்று கருதுகின்றனர்.

ஆனால் இன்று இந்தியாவில் ஜீன்ஸ் ஆடையை வைத்தே ஒரு பெரிய அரசியல் நடந்து வருது. சில மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், உள்ளிட்ட பகுதியில் ஜீன்ஸ் உடுத்த தடை விதிக்கப்பட்டிருக்குது. குறிப்பாக பெண்கள் ஜீன் ஆடை உடுத்துவதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஒருபடி மேலேபோய் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாமியா உலமா இ இஸ்லாமி பஸ்ல் கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் சில ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட பெண்கள் ஜீன்ஸ் அணிவது தான் காரணம் என்றார்.

இவ்வாறு மனித குலத்தின் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒரு சேர சம்பாதித்த ஜீன்ஸ் தயாரித்த லெவி ஸ்ட்ராஸ் பிறந்த நாள் இன்று.

ஆம்.. பேஷன் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜீன்ஸ் வகை ஆடையை உருவாக்கியவர் லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss). இவர் 1829 பிப்ரவரி 26ல் ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள பட்டன்ஹேம் நகரில் பிறந்தார். சிறு வயதிலேயே தையல் பயிற்சி பெற்றார். தந்தை இறந்ததும், அம்மா, சகோதரிகளுடன் அமெரிக்காவில் குடியேறினார். நியூயார்க் நகரில் சகோதரர்களின் துணிக்கடையில் ஒர்க் பண்ணிவந்தார்.

அன்றைய நாட்களில் கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கப் பணி மும்முரமாக நடந்தது. பல இடங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து வேலை பார்த்தனர். அங்கு துணி வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும் என்று எண்ணி ‘லெவி ஸ்ட்ராஸ்’ என்ற பெயரில் வியாபாரம் தொடங்கினார். நகரில் உள்ள சிறு கடைகளுக்கு மொத்தமாக துணிகளை சப்ளை செஞ்சார். அப்போது கூடாரம் அமைக்கப் பயன்படும் கேன்வாஸ் துணியையும் அதிகம் இருப்பு வைத்திருந்தார். மற்ற துணி வகைகள் விற்றுத் தீர்ந்தன. கேன்வாஸ் துணி மட்டும் தேங்கியதால் கவலை அடைந்தார்.

அப்போது அவரது பிரதான வாடிக்கையாளர்களான தொழிலாளர்கள் இயந்திரங்கள் மற்றும் கரடுமுரடான கருவிகள் மத்தியில் வேலை செய்வதால் அவர்களின் பேன்ட் அடிக்கடி கிழிந்துவிடுவதாக வருத்தம் தெரிவித்தனர். அப்போது அது வரை உலகில் இல்லாத புது முயற்சியாக ‘கேன்வாஸ் துணியில் பேன்ட் தைத்தால், தொழிலாளர்களின் பிரச்சினையும் தீரும்; தேங்கிக் கிடக்கும் தனது துணியும் தீரும்’ என்று புதுமையாக யோசித்தார். அப்போது தன்னோடு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த டேவிட் ஸ்டென் என்ற தையல்காரருடன் இணைந்து கேன்வாஸ் பேன்ட் தைக்கும் வேலையில் இறங்கினார்.

சுரங்கத் தொழிலாளிகள் கனமான கருவிகளை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதற்கு ஏற்ப, பழைய பித்தளை நட்டுகளை பாக்கெட் ஓரம் வைத்து தைத்தார். இந்த உறுதியான பேன்ட் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. காலப்போக்கில் பிரான்ஸிலிருந்து ‘நீம்’ எனப்படும் கனமான துணியை வாங்கி தைத்தார். இது ‘டெனிம்’ என பெயர் மாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவியது. பின், இத்தாலியிலிருந்து ‘ஜென்னொஸ்’ என்ற நீல நிறத் துணியை வாங்கி பேன்ட் தைத்தார். நாளடைவில் இதன் பெயர் ‘ப்ளூ ஜீன்ஸ்’ என்று மாறி உலகம் முழுவதும் பரவிச்சு

iதை அடுத்து ‘லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கம்பெனி’ தொடங்கப்பட்டது. கேன்வாஸ் துணியில் பேன்ட் மட்டுமின்றி, சட்டைகள் உட்பட பல்வேறு ஆடைகளும் வெளிவந்தன. இப்படி உருவான ஜீன்ஸ் அன்றைய பேஷன் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. துணி வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் தனது வியாபார உத்தியாலும், கடின உழைப்பாலும் மாபெரும் வளர்ச்சி பெற்றார். வெற்றிகரமான வியாபாரியாக சாதனை படைத்த லெவி ஸ்ட்ராஸ் 73-வது வயதில் (1902) மறைந்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button