தனித்தன்மை வாய்ந்த தன்னிகரில்லாத வைரமங்கை தான் தாட்சாயினி வேலாயுதன்

இன்று மார்ச் 8 உலக மகளிர் தினம்.
இன்றைய தினத்தில் வரலாறு படைத்த வைர மங்கையர் ஒருவரைப் பற்றி பதிவிடுகிறேன்.
கேரளாவில் கொச்சி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள முலவுக் காட்டில் 1912 ஆண்டு ஜூலை மாதம் நான்காம் நாள் பிறந்தவர். இவரது தந்தையார் கல்லச்சம் மூரி குஞ்சன். தாயார் பெயர் மாரி. இவரது பெயர் கல்லச்சம்மூரி குஞ்சன் தாட்சாயணி.
இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். விடுதலை இயக்கமும் கேரளாவில் தோன்றிய சமுதாய சீர்திருத்த இயக்கங்களும் சிறு வயது முதலே தாட்சாயணியை ஒரு சீர்திருத்தவாதியாக உருவாக்கியது. முலவு காட்டில் இருந்த செயிண்ட் மேரி பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
பின்னர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளம் அறிவியல் பிரிவில் சேர்ந்து பயின்றார். கல்லூரியில் சேர்ந்த முதல் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவி. ஆனால் வகுப்பில் இவருக்கு ஏற்பட்ட நடைமுறை அனுபவங்கள் மிகவும் மோசமானவை. உயர் சாதியைச் சேர்ந்த பேராசிரியர், பரிசோதனை செய்ய இவருக்கு எந்த உபகரணத்தையும் தொட அனுமதிக்க வில்லை. சற்று தொலைவில் இருந்தபடியே அனைத்து பரிசோதனைகளையும் இவர் கண்டு அறிந்து கொண்டார்.
வாழ்க்கையில் கல்வி பயில பல சிரமத்தையும் தாங்கிக் கொண்டு படித்தார். இளம் அறிவியல் பட்டம் படித்த பின், சென்னையில் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். பின்னர் திருச்சூர் மாநிலத்தில் பெரிங்கோதிகாரா என்ற இடத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணித் தொடங்கினார்.
கேரளாவில் நிலவிய சமுதாய சீர்கேடுகள் எதிர்த்து சீர்திருத்த இயக்கங்களும் வலுப்பெற்றன.
இவர் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்ட சமூக சேவகி, அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்மணிகள் மேலாடை அணியக்கூடாது என கட்டுப்பாடு இருந்த காலத்தில் மேலாடை அணிந்த முதல் பெண்மணி.
சமுதாயத்தை மேம்படுத்த வேண்டுமானால் தாம் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தார்.
1945 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்டு கொச்சி சட்டசபையில் உறுப்பினரானார்.
1952 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலித் மக்கள் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியான ராமன் கெலன் வேலாயுதன் என்பவரை மணந்து கொண்டார். இவர்களது திருமண வார்தா ஆசிரமத்தில் மகாத்மா காந்தியடிகள், கஸ்தூரிபாய் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய குடியரசுத் தலைவராக இருந்த திரு ஆர்.கே. நாராயணன் அவர்களது மாமா தான் ராமன் கலன் வேலாயுதன் என்பவர். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த முதல் தம்பதியினர் என்ற பெருமை தாட்சாயணி வேலாயுதன் தம்பதியினருக்கு உண்டு.
இவர்களின் மகன் ரகு என்பவர் இந்திரா காந்தி அம்மையாரின் மருத்துவராகப் பணி புரிந்தார்.
தாழ்த்தப்பட்ட அடிமைகளாக நடத்தப்படும் மக்களின் சுதந்திரம் வெள்ளையர் அரசாங்கத்திடம் இருந்து மட்டுமல்ல, சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியர்களிடமிருந்தும் பெறப்பட வேண்டும் மிக அழுத்தமாக வாதமிட்டு நாடாளுமன்றத்தில் உரைத்தார்.
1948 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் நாள், டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் வரைவு அரசியலமைப்பை கலந்துரையாடலுக்கு இவரைப் பேச அழைத்தார்.
அதிகாரம் மைய அரசிடம் குவிக்கப்படாமல், மாநிலங்களுக்கு பரவலாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். மாநில ஆளுநர் பதவிகளை உருவாக்கப்படுவதில் தமது மறுப்பையும் பதிவு செய்தார். தாட்சாயினி வேலாயுதன் கருத்துக்களை டாக்டர் அம்பேத்கர் பாராட்டினார்
1940 மக்களில் மெட்ராஸ் இருந்து வெளிவந்த “காந்தி சகாப்தம்” மற்றும் “ஜெய் பீம் ” பத்திரிக்கைகளின் பொறுப்பாசிரியராகவும், “காமன் மேன்” என்ற பத்திரிக்கை நிர்வாக ஆசிரியராகவும் இருந்தார். தாம் எழுதிய சுயசரிதைக்கு “கடலுக்கு சாதி இல்லை” என்று பெயரிட்டார்.
2019 ஆண்டு முதல் கேரள அரசாங்கம் தாட்சாயணி வேலாயுதன் விருது ஒன்று ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
தடை கற்களை எல்லாம் உடைத்தெறிந்து சமூக நீதிக்காக பாடுபட்ட தனித்தன்மை வாய்ந்த தன்னிகரில்லாத வைரமங்கை தான் தாட்சாயினி வேலாயுதன் அவர்கள்.

முருக. சண்முகம்
சென்னை : 56