சினிமா

கப்பலோட்டிய தமிழன்’ டயலாக் ரைட்டர் சுந்தரம் நினைவு நாளின்று

🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥

‘கப்பலோட்டிய தமிழன்’ டயலாக் ரைட்டர் சுந்தரம் நினைவு நாளின்று…😢

‘மந்திரி குமாரி’ படத்தில் ராஜகுரு எம்.என்.நம்பியாரின் மகனாக தோன்றி ‘கொலை அல்ல, அது கலை…’ என்று மந்தகாச சிரிப்போடு ஹீரோ ரேஞ்சுக்கு பேசப்பட்ட வில்லன் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தயாரித்த ‘கோகிலவாணி’ படத்தில் இடம் பெற்ற பாடலிது. இசைமேதை ஜி.ராமநாதன் இசையில் ஒலித்த இந்த பாடலை எழுதியவரை பாடலாசிரியர் என்று மட்டும் சுருக்கிட முடியுமா?சுதந்திரப் போராட்ட வீரர், திரைப்பட இயக்குநர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், தமிழ் வித்வான், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இயல், இசை, நாடக மன்றச் செயலாளர், கவிஞர் என அவருக்கு இன்னும் பல அடையாளங்கள் உண்டு.

அவர் பெயர் எஸ்.டி.சுந்தரம்.

சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த எஸ்.டி.சுந்தரத்திற்கு சிறுவயதிலேயே நாடகத்தின் மீது கொள்ளைப் பிரியம். இதன் காரணமாக நவாப் ராஜமாணிக்கம் நாடகக்குழுவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அவரின் தமிழ்ப் பற்றைக் கண்ட ராஜமாணிக்கம், திருவையாறு அரசு கலைக்கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்.

எஸ்.டி.சுந்தரம் வித்வான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். சுதந்திர வேட்கை கொளுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த காலமது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற எஸ்.டி.சுந்தரம் ஒன்பது மாத காலம் தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கிடைத்த நேரங்களில் நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.

சிறையில் இருந்து வெளிவந்த பின்பு மீண்டும் நாடக மேடையை நோக்கி அவர் பயணித்தார். சக்தி கிருஷ்ணசாமியுடன் இணைந்து ‘சக்தி நாடக சபா’வை உருவாக்கினார். அவர் எழுதிய ‘கவியின் கனவு’ நாடகத்திற்கு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக இந்த நாடகம் ஆயிரக்கணக்கான முறை மேடை ஏற்றப்பட்டது. இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக திருச்சியிலிருந்து நாகப்பட்டினத்திற்கு ‘கவியின் கனவு ஸ்பெஷல் ரயில்’ விடப்பட்டது. தமிழறிஞர் மு.வரதராசன், எழுத்தாளர் கல்கி ஆகியோரால் இவரது நாடகங்கள் பாராட்டப்பட்டன.

நம் தாய்’, ‘காந்தியுகம்’, ‘கவியின் குரல்’, ‘சிரிப்பதிகாரம்’, ‘கவியின் கனவு’, ‘மகாபுத்திசாலிகள்’, ‘இந்தியா எங்கே’ உள்பட பல்வேறு நூல்களை எழுதிய எஸ்.டி.சுந்தரம் 1965ம் ஆண்டு சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருது பெற்றவர். இந்தியா சுதந்திரம் அடைந்து 25ம் ஆண்டு நிறைவை போற்றும் வகையில் இவருக்கு பிரதமர் இந்திரா காந்தி தாமிரபத்திர விருதை வழங்கியுள்ளார்.

தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1964ம் ஆண்டு முதல் 1968ம் ஆண்டு வரை செயல்பட்டுள்ளார். 1968ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும் எஸ்.டி.சுந்தரம் பணியாற்றியுள்ளார். தமிழக அரசு இவருக்கு 1979ம் ஆண்டு பாரதிதாசன் விருது வழங்கியதுடன் இவருடைய நூல்களை நாட்டுடமையாக்கியது.

1962ம் ஆண்டு இந்திய-சீன யுத்தத்தின் போது, தனது சொந்த செலவில் ‘சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது…’ என்ற ஆவணப்படத்தை எடுத்து தமிழகம் முழுவதும் திரையிட்ட பெருமகனார் எஸ்.டி.சுந்தரம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button