உடுமலை நாராயணகவி காலமான தினம்: மே 23- 1981

உடுமலை நாராயணகவி காலமான தினம்: மே 23- 1981
பகுத்தறிவுக் கவிராயர் என்றழைக்கப்படுபவர். நாட்டுபுற மெட்டுகளுக்கு பாட்டெழுதி மண் மணத்தை திரைப்படங்களில் பரவவிட்டவர். திரையுலகப் பாரதியெனப் போற்றப்படும் இவர் 1899 இல் பிறந்து 1981 இதே நாள் அமரத்துவம் எய்தினார்.
கலைஞரின் கதை, வசனம், சிவாஜியின் நடிப்புடன் உடுமலையின் பாடல்களும் பகுத்தறிவு புகட்டி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியதுதான் பராசக்தி படம்.
ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
தம் காலத்தில் சிறந்த விளங்கிய மற்றொரு பாடலாசிரியரான பாபநாசம் சிவனைக் காட்டிலும் அதிக அளவில் பாடல்களை எழுதிக் குவித்த பெருமை நாராயணகவிக்கு உண்டு. நாராயண கவி எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலங்களாக இருந்தன. புதிய உத்திகளைக் கையாண்ட நாராயணகவி, உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த கவிஞர், நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டார்.
‘கா…கா…கா…சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க –
ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க.
உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளைப் போடுறாங்க பாருங்க…’ (பராசக்தி திரைப்படப்பாடல்)
‘அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ…
யாருமில்லா வேலையிலே இந்த வெட்கம் ஏனோ?…’ (காவேரி திரைப்படப் பாடல்)
‘தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி – குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே – குதம்பாய்
காசுக்குப் பின்னாலே. (1952 ல் வெளிவந்த பராசக்தி திரைப்படப் பாடல்)’
‘சைக்கிள் வண்டி மேலே ஒரு தங்கநிறப் பொம்மை போலே நீ தனியாய்ச் செல்லலாமா?’
‘ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், கொண்டாட்டம்!
தேதி ஒன்னுல இருந்து சம்பளத் தேதி
ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், கொண்டாட்டம்
இருபத்தொன்னுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்…
திண்டாட்டம் திண்டாட்டம்’
‘ என்று தான் திருந்துவதோ நன்றி கெட்ட ஆடவர் உலகம்…’
‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கனும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கனும்’ (விவசாயி திரைப்படப் பாடல்)
‘இன்னைக்கு காலையிலெழுந்திருச்சு கஞ்சித்தண்ணி இல்லாமே கஷ்டப்படுகுறேனே கடவுளே!
கொஞ்சம் கண்ணத் தொறந்து பாரேன் கடவுளே!
என்ன இப்பொறப்பு பொறக்க வச்சியே கடவுளே!’
‘மாலையிட்ட மங்கை யாரோ, என்ன பேரோ அந்த மானினியாள் எந்த ஊரோ!
உங்கள் மனம் நாடிய சுகமே தரும் அதி மேவிய வனிதாமணி’
‘கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி’
விடுதலை விடுதலை விடுதலை
அடிமை ஏழை என எவருமில்லை இனி விடுதலை!’
‘அன்பே கடவுளென்பது எதனாலே…
அதில் ஆன்மசக்தி இன்பம் இருப்பதாலே
சாத்திரங்கள் பொய்யென்பது எதனாலே…
ஏமாற்றுகிற வார்த்தைகளும் இருப்பதாலே
ஜாதி மதம் இல்லையென்பது எதனாலே
மனம் சமத்துவம் கொள்வதென்பது அதனாலே!
நாடு செழிக்க வேண்டும்
ஆமடி தங்கம்
நாகரீகம் ஆக வேண்டும்
ஆமடி தங்கம்
பாடிபட்டு வாழ வேண்டும்
ஆமடி தங்கம்
பசியாற உண்ண வேண்டும்
ஆமடி தங்கம்’
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது (இரத்தக் கண்ணீர் திரைப்படப் பாடல்)
இவையெல்லாம் உடுமலை நாராயண கவியின் பாடல்கள் தாம். அவரது சிறந்த 40 பாடல்களின் திரட்டு யூடியூபில் கிடைக்கிறது (. அவைகளை முதன்முறை கேட்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அனைhttps://www.youtube.com/watch?v=bXfPcFwACuE )த்துப் பாடல்களிலும் ஏதோ ஒரு சமூகப் பங்களிப்பு இருக்கிறது. வெற்று வார்த்தைகளின் குட்டைகளாக அவரது எந்தப் பாடல்களுமே இல்லை என்பது தான் உடுமலை நாராயணகவி பாடல்களின் தனிச்சிறப்பு.
ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர். அன்னாரின் நினைவு நாளில் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் நினைவஞ்சலிகள்
from the Desk of கட்டிங் கண்ணையா!