ஆலயங்களிலும் சரி வீடுகளிலும் சரி வழிபாடுகளிலே அகல் விளக்குகள்

ஆலயங்களிலும் சரி வீடுகளிலும் சரி வழிபாடுகளிலே அகல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த விளக்குகளிலே அம்பாள் குடியிருக்கிறார் என்றும் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இந்து மதத்தில் மட்டுமின்றி வேறு மதங்களும் அகல் விளக்குகளைப் பயன்படுத்துகின்றன.
இவற்றின் சிறப்பு என்னவென்றால், களிமண் மற்றும் நீர் போன்ற இயற்கைப் பொருட்களைக்கொண்டு ஓர் குடியானவரின் முயற்சியில் உருவாகின்றன.
இந்தவகை விளக்குகளில் நெய் அல்லது எண்ணெய் இட்டு, பருத்திப் பஞ்சினால் ஆன திரியிட்டு எரிப்பது வழக்கம். இந்த முறை சூழலுக்கு உகந்ததாகும். ஆனால், சில இடங்களில் பிளாஸ்டிக்கினால் ஆனால் விளக்குகளைப் பயன்படுத்துவதைக் காணலாம்.
பிளாஸ்டிக் விளக்குகள் சூழலுக்கு ஒவ்வாதவை. மேலும் சிறிது நேரம் எரிந்த பின் ப்ளாஸ்டிக்கும் எரிவதைக் காணலாம். அதனால் பிளாஸ்டிக்கினால் ஆன
விளக்குகளைத் தவிர்ப்பது நல்லது.
அகல் விளக்குகளை ஏற்றுவதில் சில நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரு தடவை பயன்படுத்திய விளக்கை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று சிலர் நம்புகிறார்கள்.
இதில் எந்த உண்மையும் இல்லை. ஒரு தடவை ஏற்றிய விளக்கை மீண்டும் சுத்தப்படுத்தி அல்லது நீரில் கழுவி சற்று உலர வைத்து பின் புதிய திரியிட்டு விளக்கேற்றலாம்.
ஆலயங்களில் அல்லது பல விளக்குகளைப் பயன்படுத்துகின்ற இடங்களில் பார்த்தோமானால் எரிந்து முடிந்த விளக்குகளை அள்ளி குப்பையோடு சேர்ப்பதையும்
காணலாம். நாம் சில விடயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
வேண்டும்.
இவை இயற்கை வளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை; எவ்வாறு பித்தளை அல்லது வெள்ளியினாலான விளக்குகளைப் பயன்படுத்திய பின் தூக்கியெறிய மாட்டோமோ, அதேபோல தான் அகல் விளக்குகளும் மதிப்பு வாய்ந்தவை. எளிமையான விடயங்களே உலகில் மதிப்பு வாய்ந்தவை. மேலும் விளக்கொன்றின் தயாரிப்பிலே ஒருவரின் முயற்சியும் ஊக்கமும் இருக்கின்றது. நாம் அதையும் சேர்த்து வீணாக்குகிறோம்.
சிலர் தாம் இவ்விளக்குகளைத் தயாரிக்கும் ஏழை எளியவர்களின் பொருளாதாரத்தை புதிய விளக்குகளை வாங்குவதன் மூலம் வளப்படுத்துவதாகக் கூறுவர். சரி, அதற்கான விலையை ஏற்றிக்கொடுங்கள்; நிறைய விளக்குகளை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஆனால் அதற்காக இவ்விதம் வீண்செய்யலாம் என்று அர்த்தமல்ல.
வெவ்வேறு உடையும் பொருட்களை பணமதிப்பீட்டின் காரணமாக அலட்சியம் இன்றி கவனமாகக் பயன்படுத்துவோமோ அதே போல இவற்றையும் பயன்படுத்தலாம்.
இன்னும் ஒரு நம்பிக்கை பெரும்பாலான இந்துக்களிடம் உண்டு. அடுத்தவர் ஏற்றிய விளக்கின் சுடரில் இருந்து நாம் கொண்டு வரும் விளக்கை ஏற்றக் கூடாது என்பது தான்
அது. விளக்கின் தீச்சுடரானது எமது மன இருள் அகல இறைவனை வேண்டி ஏற்றப்படுகிறது.
இப்போது இந்த நம்பிக்கை எவ்வளவு விநோதமானது என்று உங்களுக்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மேலும் நெருப்பை பஞ்ச பூதங்களில் ஒன்றாக வணங்குவதோடு புனிதமான ஒன்றாகவே நாம் கருதுகிறோம். அவ்வாறு இருக்க எவ்வாறு மற்றவர் ஏற்றும் தீபத்தில் இருந்து நமது தீபத்தை ஏற்றக்கூடாது என்பதை ஏற்றுக் கொள்வது?
ஆலயம் வரும் அனைவருமே கடவுளின் பக்தர்கள். எமது செயல்களை சரியாக அமைத்துக் கொண்டு, எமது எண்ணங்களை வஞ்சகங்கள் இன்றி தூய்மையாக
வைத்துக்கொண்டு, எம்மையே அறியாமல் எழக்கூடிய தீய எண்ணங்களை எமக்குத் தந்து விடாமல் எனது பிறப்பை சரிவர அமைத்துக் கொள்ள உதவி செய்து என்னைக் காத்தருள்வாய் எம் ஆண்டவா…என்பதே எமது பிரார்த்தனை ஆகும்.
மேலும் இவ்வுலகில் எல்லா உயிர்களிலும் உறைந்திருப்பது இறைவனே; எல்லா உயிர்களும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. ஆகவே, இவ்வாறான நம்பிக்கைகளை விடுத்து, எல்லோருக்கும் நன்மையை வேண்டி விளக்கேற்றுவோம்; பிரார்த்திப்போம்.