எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே

எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.
* வரம்பு கடந்த ஆற்றல் கொண்ட இறைவனை தூய்மையான மனதோடு பற்றிக் கொள்ளுங்கள். அவரைச் சார்ந்து நின்று வாழுங்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது.
* கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பையும், உதவியையும், சேவையையும் மற்றவர்களுக்கு கொடுத்துப் பழகுங்கள். இதற்காக எதையும் எதிர்பார்க்கவேண்டாம்.
* எதைப் பிறருக்கு கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது மட்டுமே.
* கைகள் இருப்பது பிறருக்கு உதவி செய்யத் தான். பட்டினியாய்க் கிடந்தாலும் கடைசிப் பருக்கையையும் பிறருக்கு கொடுப்பது தான் நல்லது. கொடுப்பவன் முழுமை பெற்று முடிவில் கடவுளாகிறான்.
*ஒருவருக்கு உதவி செய்ய எண்ணி, யாருடைய கை முன்னே நீளுகிறதோ, அவனே மக்களில் சிறந்தவன்.
\* பரந்த இந்த உலகத்தில், கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கு நன்மை செய்வதை கடமையாகக் கொள்ளுங்கள். மற்றவர்களின் நன்மைக்காக நரகத்திற்குக் கூடச் செல்ல தயாராகுங்கள்.
* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.
* சேவை செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. தன் குழந்தைகளில் யாராவது ஒருவருக்கு உதவி செய்யும் வாய்ப்பை கடவுள் அளித்தால் அதன் மூலம் நீங்கள் பாக்கியம் பெற்றவராகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
* நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.
* பாமரர்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க சொற்களையும் வழங்குவது தர்மங்களில் சிறந்த தர்மமாகும். ஒருவன் கல்வி பெறுவதால் அவனுடைய குடும்பமே முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்கும்.
உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளே குடி கொண்டு இருக்கின்றன.
* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன்றைக் கொடுங்கள்.
* நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சூட்சுமத்தன்மையை அடைகிறது.
* மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.
* எழுந்து தைரியமாக நின்றால், உன் விதியை நீயே நிர்ணயிப்பாய்.
* கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர், அன்பைக் கொள்ளாமல் பொருளை மட்டும் கொள்ளும் விலைமகள் போன்றவர் ஆவார். அவருடைய நட்பினை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
நம்மைப் பற்றிச் சிந்திக்காமல், மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைத்தால் கூடப் போதுமானது. இந்தச் சிந்தனை சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தரும்.
* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும் போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். அறிவால் அடையமுடியாத உயர்ந்த இடத்திற்கு நல்லமனநிலை ஒருவனை அழைத்துச் செல்லும்.
* உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள்.
* மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது.
* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.
* கர்மயோகம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு அவர் யார், எப்படிப்பட்டவர் என்ற சிந்தனையோ கேள்வியோ இல்லாமல் கூட அவருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது தான்.
* சிங்கங்களே! எழுந்து வாருங்கள். வீணான மயக்கங்களை உதறித்தள்ளுங்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.
* பலவீனத்திற்கான பரிகாரம், அந்த பலவீனத்திற்கான காரணத்தை சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
* உலகம் வேண்டுவது ஒழுக்கமே. கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும் யாரிடம் இருக்கிறதோ அவரை இம்மண்ணுலகமே வேண்டி நிற்கிறது.
* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடையவராகுங்கள். உங்கள் மீதே முழுப்பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப்பழகுங்கள்.
* சிரத்தை தான் நமக்குத் தேவை. மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணமே இந்த சிரத்தை தான். சிரத்தை உடையவன் வெற்றி பெறுகிறான். சிரத்தை இல்லாதவன் தாழ்ந்தவனாகிறான்.
* ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே கனவு காணுங்கள். அதன் நோக்கியே வாழ்க்கை நடத்துங்கள். அந்த கருத்தை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
* வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும், எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும், இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்.
* நம்புங்கள். இறைவனின் கட்டளை வந்துவிட்டது. பாமரமக்களும், எளியவர்களும் நலம் பெற வேண்டும் உழைத்திடுங்கள். இறைவனின் கையில் நீங்கள் ஒருகருவி என்ற உணர்வுடன் பிறருக்கு சேவை செய்யுங்கள்.
* உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.
* இறைநம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்தச் சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது.
* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.
* உலகவாழ்வுக்குள் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் அடையாளத்தினை விட்டுச் செல்லுங்கள். எழுந்திருங்கள், உழையுங்கள். இல்லாவிட்டால் நாம் பூமியில் பிறந்ததில் ஒருபயனும் இல்லை.
* அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும். அமைதியையும் ஆசியையும் கொண்டுவராத அன்புச்செயல்கள் உலகத்தில் எதுவுமே இல்லை.
* கடவுள் பற்றில்லாமல் இருக்கிறார். ஏனென்றால் உலகம், உயிர்கள், அண்டசராசரங்கள் அனைத்திடமும் அவர் அன்பு செலுத்துகிறார்.
* இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான். அதற்குப் பணிந்து போவதற்காக அல்ல.
* இங்கேயே, இப்போதே நிறைநிலையை அடைய முடியாதென்றால் வேறெந்த மறுவாழ்க்கையிலும் அடைவோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
* பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. நம்மிடம் உள்ளதெல்லாம் அறியாமை மட்டுமே. கடவுளை உணர்வதால் அறியாமை விலகுகிறது.
* முதலில் நீ செல்ல வேண்டிய பாதையைக் கண்டுபிடி. அதன் பிறகு செய்யவேண்டியது எதுவும் இல்லை. கைகளைக் குவித்தபடியே கடவுளைச் சரணடைந்துவிடு. பாதையின் போக்கிலேயே லட்சியத்தை அடைந்து விடுவாய்.
* ஓய்வு ஒழிவில்லாமல் வேலை செய்து கொண்டே இரு. ஆனால், செய்யும் வேலையில் நீ கட்டுப்பட்டு விடாதே. அதற்குள் சிக்கிக் கொள்ளாதே. இதுதான் கீதையின் வழி.
* எழுந்திருங்கள், எழுந்திருங்கள். நீண்ட இரவு கழிந்துவிட்டது. பகல்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது. என் அன்பான இளைஞர்களே! உங்களுக்கு வேண்டுவதெல்லாம் உற்சாகம்… உற்சாகம் மட்டுமே.
* சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒருவர் இல்லாதிருக்கும் போது அவரைப் பற்றி, பிறர் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்.
* மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பது கூட சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமக்கு தந்துவிடும்.
* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.
* மரணம் என்பது நமக்கு உறுதியாக ஒருநாள் வந்தே தீரும். அதற்குள் சிறிதளவாவது பிறருக்கு பயன்பட்டு அழிந்து போவது நல்லது.
*கோழைகளுடனோ அல்லது பொருளற்ற அரசியலுடனோ எந்தவிதத் தொடர்பும் எனக்கு இல்லை. கடவுளும் உண்மையும் தான் உலகிலுள்ள ஒரே அரசியல். மற்றவை எல்லாம் வெறும் குப்பை.
* அன்பின் மூலமாகச் செயல்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
* மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்றுவிதமான இயல்புகளால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். இதில் தெய்வீக இயல்பை வளர்ப்பது ஒழுக்கமாகும். * மரணம் என்பது மிக உறுதியாக இருக்கும்போது, நல்ல ஒரு செயலுக்காக நம் உயிரைத் தியாகம் செய்வது மேலானது.
* நமக்கு கிடைப்பது வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். தன்னலம் கருதாமல் சேவையில் ஈடுபடுங்கள்.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகப்பணியாகும்.
* ஒரு லட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள். அதன் வழியே மனதைச் செலுத்தி உங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்துங்கள். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த கருத்து நிறைந்திருக்கட்டும்.
* ஆன்மிகம் நமக்கு சோறு போன்றது. மற்றவை எல்லாம் கறி, கூட்டுப் போலத்தான்.
* நன்மை செய்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் மரணமடைந்து விடலாம்.
* நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சூட்சுமமாக நம்மிடமே திரும்புகின்றன.
* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர். முடியுமானால் இன்னொரு நல்ல நம்பிக்கையை அவனுக்குள் செலுத்துங்கள்.
* இயற்கைக்கு கீழ்ப்படியாமல் இருப்பது தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியாகும். வரலாற்றைப் பார்த்தால் மனிதவளர்ச்சி இதனால் தான் உண்டாகிறது.
*மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத்தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்படத் தேவையில்லை.
* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார்.
* தொடங்கப்பட்ட முயற்சியில் தடை உண்டானால், மனவலிமையை மேலும் அதிகப்படுத்தி பாடுபடுங்கள். விடாமுயற்சியுடன் செயலை நிறைவேற்றி மகிழ்வதே உயர்வாழ்விற்கான அறிகுறியாகும்.
* பெரியவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.
* நமக்கு மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது, நல்ல ஒரு செயலுக்காக உயிரை விடுவதே மேலானது.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களை கீழானவர்களாக மாற்றிவிடும்.
* சண்டை போடுவதிலும், குறைகூறிக் கொண்டிருப்பதிலும் கூட என்ன பயன் இருக்கிறது. நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.
* நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன.
* ஒருவன் நெருப்பினுள் கூட தூங்கி ஓய்வெடுக்க முடியும். ஆனால், வறுமையில் ஒருவனால் கண்மூடித் தூங்குதல் என்பது முடியாது.
* குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.
உங்களுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளியில் பரவச் செய்யுங்கள். அந்த தெய்வீக இயல்பே நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒழுங்குள்ளதாக மாற்றிவிடும்.
* எல்லா உயிர்களும் கோயில் என்பது உண்மைதான். ஆனால், மனிதவுயிரே மகத்தானகோயில். அதை வழிபட இயலாதவன் வேறு எதையும் வழிபட முடியாது.
* யாருடைய மனம் ஏழை எளியவர்களுக்காக இரக்கம் கொள்கிறதோ, அவரே மகாத்மா.
* உடலில் உள்ள குறைபாடுகளை நினைத்து துயரப்படுவதால் பயன் ஏதும் உண்டாகாது. மாறாக, அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் மனதில் ஊக்கத்தை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் உயர முடியும்.
* மலைபோல தடைகள் குறுக்கிட்டாலும், மனவுறுதியை மட்டும் கைவிடாதீர்கள். உங்களுக்கு சரியெனப் பட்டதை இலக்காக கொண்டு முன்னேறுங்கள்.
* உழைப்பில் உறுதி கொண்டு வாழ்நாளைப் பயனுள்ளதாக்குங்கள். உலகில் பிறந்ததற்கு அறிகுறியாக ஏதாவது நல்லசெயலைச் செய்து உங்கள் அடையாளத்தை உலகில் விட்டுச் செல்லுங்கள்.
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
* இறைவனுக்காகவே ஒவ்வொரு செயலும் நடைபெறட்டும். உண்பதும், உறங்குவதும், காண்பதும் ஆகிய அனைத்தும் அவனுக்காகவே.
* நமக்கென உள்ளதை பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரதிபலன் எதிர்பார்த்து செயலாற்றினால் நன்மை உண்டாவதில்லை.
* உங்களை உலகம் தூற்றினாலும், கொண்ட லட்சியத்திலிருந்து விலகாமல் உறுதியுடன் செயல்படுங்கள். நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.
* எஜமானனைப் போல செயல்படுங்கள். அடிமை உணர்வை கைவிட்டு சுதந்திரமாக பணிபுரியுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மை படைத்திருக்கிறான். உயர்வான செயல்களைச் செய்தால் வாழ்க்கை பயனுடையதாகும்.
* நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் உங்களுக்குள்ளே இருக்கின்றன.
உழைப்பே வடிவெடுத்த சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள்.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும்.
* நம்மிடம் உள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வது தான்.
* கல்வியின் அடிப்படை லட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான்.
* ஒரு செயலில் வெற்றி பெறவேண்டுமானால், விடாமுயற்சியும், மனவுறுதியும் ஒருவனிடம் பெற்றிருக்கவேண்டும்.
* நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும், பூரணத்துவமும் பெற்றவர்கள்.
* அரிய பெரிய விஷயங்களை தியாகமனம் படைத்தவர்களால் மட்டுமே சாதிக்க முடியும்.
* நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை.. இதுவே உங்கள் தாரக மந்திரமாகட்டும்.
* சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். ஒழுக்கத்தின் இலக்கணம் இது தான்.
-விவேகானந்தர்