ஆன்மீகம்

காஞ்சி பெரியவர்

காஞ்சி பெரியவர் அவதார தினமின்று💐

🌈காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியும், காஞ்சி பெரியவர், பரமாச்சாரியார் என போற்றப்படுபவருமான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) பிறந்த தினம் இன்று (மே 20).

🌈விழுப்புரத்தில் (1894) பிறந்தார். இயற்பெயர் சுவாமிநாதன். மாவட்ட கல்வி அதிகாரியான தந்தையிடம் 8 வயது வரை கல்வி பயின்றார். திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்ந்தார். பள்ளியில் நடந்த பைபிள் ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு வென்றார். பள்ளி நாடகங்களிலும் பங்கேற்று சிறப்பாக நடித்தார்.

🌈காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இவரது தாய் வழி உறவினர் 1907-ல் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு தாயுடன் சென்றிருந்தார் சுவாமிநாதன். உறவினர் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால், சுவாமிநாதனை ஆச்சாரியராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது இவருக்கு வயது 13.

🌈‘சந்திரசேகரேந்திர சரஸ்வதி’ என்று இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. சமஸ்கிருதம், வேதங்கள், சாஸ்திரங்கள், புராணம், இதிகாசம், உபநிடதங்களை ஆழமாக கற்றார். இயல்பான அறிவுக் கூர்மையும், ஆன்மிக நாட்டமும் கொண்டிருந்த சிறுவனை ஆன்மிகப் பயிற்சிகளும் அனுஷ்டானங்களும் ஆன்மிக ஞானியாக மறுவடிவம் பெற வைத்தன. நாடு முழுவதும் ஏராளமானோர் இவரது பக்தர்களாக மாறினர்.

🌈பிரமிக்கத்தக்க நினைவாற்றல் கொண்டவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராட்டி, ஜெர்மன், பார்சி உள்ளிட்ட 14 மொழிகள் அறிந்தவர். எளிய, இனிய, சரளமான சொற்களில் வேத சாஸ்திரங்களில் உள்ள அரிய உண்மைகளை எடுத்துக் கூறினார். இவரது ஆன்மிக உரைகள் பாமர மக்களையும் எளிதில் கவர்ந்தன.

🌈வேத, சாஸ்திரங்களை மக்களிடம் பரப்பவும், வளப்படுத்தவும் பல மாநாடுகளை நடத்தினார். மடத்தில் அறக்கட்டளை தொடங்கி வேதம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். பல இடங்களில் வேத பாடசாலைகள் தொடங்கப்பட்டன.

🌈வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஏழை, எளியவர்கள் என யார் வந்தாலும் அனைவரிடமும் சமமான கருணையும் நேசமும் காட்டுவார். மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் அன்பு செலுத்தினார்.

🌈சீடர்கள், பக்தர்களால் சிவ ஸ்வரூபமாகவே வணங்கப்பட்டார். ‘நடமாடும் தெய்வம்’ எனப் போற்றப்பட்டார். கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற அரிய காவியம் படைக்க காரணமாக இருந்தார்.

🌈அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் சுதேசி இயக்கம் நடந்தபோது, தனது ஆடைகளை கடலில் எறிந்துவிடச் சொன்னார். கதர் ஆடைக்கு மாறினார். தன் சீடர்களையும் அவ்வாறே செய்யுமாறு அறிவுறுத்தினார்.

🌈உண்மையான துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வார். பாத யாத்திரையாக நாடு முழுவதும் சுற்றி ஆன்மிகக் கருத்துக்களைப் பரப்பினார். காஞ்சி மடத்தின் தலைவராக 87 ஆண்டுகள் இருந்தார்.

🌈பரமாச்சாரியார், பெரியவாள், காஞ்சி பெரியவர், காஞ்சி முனிவர், மகா பெரியவர் என்றெல்லாம் பக்தர்களால் பரவசத்துடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 100-வது வயதில் (1994) ஸித்தியடைந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button