உன்னத இலக்கியத்தைப் படைக்கிறேன் என்று சொல்கிறவர்கள் சாதியைப் பற்றிப் பேசுவதுதான் விநோதமானது.

ஜெயமோகன் எப்போதெல்லாம் எழுத்தாளர்களின் பட்டியலைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம் பிற சமூகத்து எழுத்தாளர்களை ஒரு பட்டியலாகவும், தலித் எழுத்தாளர்களை ஒரு பட்டியலாகவும் எழுதுவார், பேசுவார். தவறிக்கூடப் பிற சமூகத்து எழுத்தாளர்களின் எழுத்துகளோடு, தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை ஒப்பிட்டுப் பேச மாட்டார். இதுதான் அவருடைய இலக்கியக் கோட்பாடு. எனக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டபோது, ஆங்கில இந்து நாளிதழில் என்னைப் பற்றி எழுதியபோது, முதல் வரியே ‘தலித் எழுத்தாளர்களுக்குத் தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றுதான் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியிருந்தார். ஆரம்பிக்கும்போதே இப்படி எழுத வேண்டும் என்று எப்படித் தோன்றுகிறது. வண்ணநிலவனோ, ஜெயமோகனோ, ஆ.இரா. வேங்கடாசலபதியோ திட்டமிட்டுச் சொல்கிறார்கள், திட்டமிட்டு எழுதுகிறார்கள் என்று சொல்வதைவிடவும், அவர்களுடைய மனம், வாழ்க்கை முறை அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்குத் தனிமனிதர்களைக் குற்றம் சொல்வதா, சமூகக் கட்டமைப்பைக் குற்றம் சொல்வதா?
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், சாதிய அரசியல் கட்சித் தலைவர்கள், சாதியவாதி என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், சாதியை முன்னிலைப்படுத்திப் பேசுவது இயல்பானது, மன்னிக்கத் தக்கது. புரட்சி செய்கிறேன், புரட்சியாக எழுதுகிறேன், அன்பை, கருணையை, மனித நேயத்தை எழுதுகிறேன், உன்னத இலக்கியத்தைப் படைக்கிறேன் என்று சொல்கிறவர்கள் சாதியைப் பற்றிப் பேசுவதுதான் விநோதமானது. இதுதான் நம்முடைய தமிழ் இலக்கியச் சூழலின் நிலைமை.
– எழுத்தாளர் இமயம்
நன்றி: விகடன்.