அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்

நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
காதலில் விழுந்த பெண்களினால் மட்டுமே, சிறப்பான முக பாவனைகளை வெளிப் படுத்த இயலும் என்று நாம் இது வரை நம்பி இருந்தோம். ஆனால் இதையெல்லாம் தவிடு பொடியாக்கி விடும் படியான, ஒரு ஆணின் காதல் முக பாவனையை நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது!
நைட் க்ளப் டான்ஸராக வரும் செளகார் ஜானகி
‘ பார்த்த ஞாபகம் இல்லையோ…’
என்று புதிர் விடுவது போல, பொடி வைத்துப் பாடி, சிவாஜியின் இதயத்தை அசைத்துப் பார்க்கிறார்.
‘அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் …
என்று ஆரம்பித்து,
‘அந்த நிலவைக் கேளது சொல்லும்
இந்த இரவைக் கேள் அது சொல்லும் … ‘
என்று கேட்டு அவரைக் கிறு கிறுக்க வைத்து,
‘எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் அந்த நிலவை … ‘
என்று அதிர வைக்கிறாள்.
அந்தப் பாடகியின் பாடல் வரிகளில் இருக்கும் அர்த்தங்கள் சிவாஜியை காதல் மயக்கத்திற்கும், கிறக்கத்திற்கும் கொண்டு செல்கின்றன. இதழ்கள் வியப்பால் மெல்ல விரிகின்றன. கண்களிலோ காதல் கனவு! முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் பல்பின் ஒளி மிளிர்கிறது! அவரது குண்டு கன்னங்களை விட்டு விடுவோம். ஆனால் செர்ரிப் பழம் போல் சிவந்திருக்கும் அந்த இதழ்களில்தான் எவ்வளவு சேஷ்டைகள் செய்கிறார்!
பற்களால் மெல்ல, ஆள் காட்டி விரலைச் செல்லமாகக் கடிக்கிறார். இடது கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க, விரல்களால் தனது கீழ் உதட்டை
வெட்கத்துடன் அழகாக வருடுகிறார். நாக்கை லேசாக துருத்திக் கொண்டு நடு விரலால் மேல் உதட்டை லேசாகத் தட்டுகிறார். அந்த பாவனை, நமக்குப் புதுசாக இருந்தால் கூட அவர் ஒரு கைதேர்ந்த புகை பிடிப்பாளர் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். சிகரெட் புகை, உலைக் களத்தில் இருந்து வெளியேறுவது போல் அவர் வாயில் இருந்து அவ்வப்போது வெளியேறுகிறது. கனன்று கொண்டிருக்கும் அவர் இதயத்திற்கு ஒத்தடம் கொடுத்தார் போன்று மது ஸிப், ஸிப் பாக உள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. சூழ் நிலை புரிந்த எம். எஸ். வி, நம்மையும் சேர்த்து ஏதோ ஓர் இனம் புரியாத உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.
செளகார் ஜானகி நம் இதயத்தைக் கொள்ளை கொண்டாலும், நடிகர் திலகத்தின் முக வெளிப்பாடுகள் நம்மை ஈர்க்கின்றன. காரணம் எந்த ஒரு ஆணும் திரையிலோ அல்லது நிஜ வாழ்க்கையிலோ இப்படி ஒரு எக்ஸ்பிரஷனைக் கொடுத்தது இல்லை. சற்று மிகையோ என்று எண்ணினாலும், ரசிக்காமல் இருக்க முடிய வில்லை. ஒரு பெண்ணால் மட்டுமே காதல் உணர்வுகளை அப்பட்டமாக முகத்தில் கொண்டு வரமுடியும் என்கிற நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்து எறிகிறார் நடிகர் திலகம்.
நிஜ வாழ்க்கையில் ஆண்கள் (அதாவது காதல் விஷயத்தில் ) தங்களை ஒரு போரிங் பெர்சனாலிட்டிகளாகவே வெளிப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். முக நூல் ரீல்ஸ்களில் கூட இப்பொழுது இருக்கும் ஒரு சில இள வட்டப் பையன்கள் காதல் பாவனைகளைக் காட்டுகிறேன் என்கிற பேரில் ‘ஆடு திருடியக் கள்வனைப் போல … ‘ பேந்த பேந்த விழிக்கிறார்கள்!
அவர்கள் சிவாஜியின் முக பாவனைகளைக் கற்றுக் கொண்டால் வருங்காலத்தில் நல்ல பலன்களை அடையலாம்
/தென்காசி திலகா
