கல்விக்கூடமாக மாற்றிய ஐஏஎஸ் அதிகாரி: களைகட்டும் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள்

மதுரையைச் சேர்ந்த கேரள ஐஏஎஸ் அதிகாரி, கிராமப்புற ஏழை மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சாதித்து அரசு உயர் பதவிகளுக்கு வருவதற்காகவும், அவர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காகவும் தனது மூதாதையர், பெற்றோர் வாழ்ந்த வீட்டை கல்விக்கூடமாக மாற்றி உள்ளார்.
திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அவதரித்த ஊரான மதுரை மாவட்டம் திருவாதவூரைச் சேர்ந் தவர் எம்ஜி.ராஜமாணிக்கம். கேரள மாநில ஐஏஎஸ் அதிகாரியான இவர், பள்ளிக்கல்வியை மதுரை சவுராஷ்ட்டிரா பள்ளியிலும் இளநிலை, முதுநிலைப் படிப்பை மதுரை, கோவையில் முடித்து குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சிபெற்றார்.
இதையடுத்து கேரள மாநிலம், திருச்சூரில் உதவி ஆட்சியராக தனது பணியைத் தொடங்கி னார். மூணாறு உதவி ஆட்சியராகப் பணி யாற்றியபோது பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கி ரமித்திருந்த 6 ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை மீட்டு கேரள மாநிலத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
அதன்பிறகு கொச்சி மாவட்ட ஆட்சியராகவும், சிறப்புப் பொறுப்பாக 14 மாவட்டங்களின் சர்வே இயக்குநராகவும் அடுத்தடுத்து கேரள அரசு இவரை நியமித்தது. தற்போது கேரள மாநில உள்ளாட்சித் துறை முதன்மை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார் ராஜமாணிக்கம். இவரது மனைவி ஆர்.நிஷாந்தினி திருவனந்தபுரம் காவல் துறைத் துணைத் தலைவராக உள்ளார்.
அரசுப் பணியை மட்டும் பார்ப்பதோடு தனது கடமை முடிந்துவிட்டது என்று இல்லாமல் பணியாற்றச் சென்ற மாவட்ட மக்களோடும், அந்த ஊரின் சமூக அமைப்புகளோடும் இணைந்து இயற்கை பேரிடர் பணிகளை முன்நின்று மேற்கொண்டு, அம்மாநில அரசின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் சென்னை தத்தளித்தபோது ‘அன்போடு கொச்சி’ என்ற கேரள அமைப்பின் மூலம் சென்னைவாசிகளுக்கு உதவினார்.
இதற்கிடையே, மதுரையில் தான் பிறந்த, பெற்றோர் வசித்த திருவாதவூரில் உள்ள வீட்டை, ஏழை மாணவர்களும் தன்னைப் போன்று அரசு உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்பதற்காக போட்டித் தேர்வுப் பயிற்சி அளிக்க 7 ஆண்டுகளுக்கு முன் அதை கல்விக்கூடமாக மாற்றினார். மேலும், இந்த ஆண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கான கோடைகால விடுமுறைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை, அந்தக் கல்விக்கூடத்தில் நடத்தி வருகிறார்.
வசதிபடைத்த மாணவர்கள், பணம் செலுத்தி கோடை காலப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வார்கள். ஆனால், ஏழை மாணவர்கள் ஏக்கத்துடன் வீட்டி லேயே முடங்கி விடுவார்கள். அவர்களுடைய ஏக்கத்தைப் போக்கும்வகையில் ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு தனது பூர்வீக வீட்டில் இலவசமாக எழுத்துத் திறன், ஓவியம், சிலம்பம், வளரி, யோகா, தையல், தட்டச்சு உள்ளிட்ட 12 வகையான பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

மேலும், பயிற்சிக்குத் தேவையான சிலம்பக் கம்புகள், தட்டச்சு இயந்திரம், பேனா, பென்சில், நோட்டுகளையும் இவரே இலவசமாக ஏற்பாடு செய்து வழங்கியுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசிகள்கூட தற்போது இவரது மையத்தில் பயிற்சி பெற்று சுய தொழில் தொடங்கி சொந்தக் காலில் நிற்கத் தொடங்கி உள் ளனர்.
ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்துக்கு உதவியாக எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் இந்தப் பயிற்சிகள் அனைத்தையும் முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி செல்வராஜ், பேரா சிரியர் சத்தியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தர்மலிங்கம், ஆசிரி யர்கள் திருநாவுக்கரசு, தென்னவன் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
தான் பெற்ற கல்வியையும், பயிற்சியையும் பிறரும் பெற்று வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டும் ராஜமாணிக்கத்தை இந்தக் காலத்தில் இப்படியொரு மனிதரா? என்று சொல்லும் அளவுக்கு மதுரை திருவாதவூர் பகுதி மக்கள் நெகிழ் கின்றனர்.
ராஜமாணிக்கத்தின் நண்பர் மணி கண்டன் கூறியதாவது: ஆண்டுக்கு ஓரிரு முறை சொந்த ஊரான திருவாதவூருக்கு ராஜ மாணிக்கம் வரும்போதெல்லாம், மதுரை மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு ஏதாவது உதவிகளைச் செய்வார். குறிப்பாக ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவார்.

போட்டித்தேர்வுப் பயிற்சிமையத்தை தொடங்கி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி வருகிறார். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக தனது வீட்டி லேயே தனியாக நூலகமும் அமைத்துள்ளார். கல்லூரி, பல்கலைக்கழக, பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு போட்டித்தேர்வு மாணவர்களுக்கு இல வசமாகப் பயிற்சி வழங்குவதோடு, ஊருக்கு வரும்போது பயிற்சிமையத்துக்குச் சென்று அவரும் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக் கிறார்.
திருவாதவூர், பொருளாதாரத்தில், வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கிய கிராமமாக இருப்பதால் தன்னைப் போல் ஊர் மக்களும் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத் தோடு, அவர் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர்களில் சிலர் அரசுப் பணிகளுக்குச் சென்று அவரது நோக்கத்தை நிறைவேற்றும் பணியைத் தொடங்கி இருக்கி றார்கள். இவ்வாறு அவர் கூறினார்.