தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகை புலவர் கோழிக்கொற்றன்.

குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் கோழிக்கொற்றன்.
.
தமிழ் என்றும் அமிழ்தே – (
குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் கோழிக்கொற்றன்.
” பணைத் தோட் குறுமகள் பாவை தை இயும்
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும்,மற்று இவள்
உருத்து எழு வனமுலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர்
அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற்கடவின் யாங்கு ஆவது கொல்?
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே- இவ்வழுங்கல் ஊரே”.
இந்த இனிய பாடலுக்கு விளக்கத்தினை டாக்டர் கலைஞர் அய்யா அவர்கள், சங்கத் தமிழில் கவிதையாகவே புனைந்துள்ளார்.
மணப்பதற்கு மறுப்பெதற்குச் சொன்னாள்?
மடலேறி வந்து மாமன்றத்தில் கேட்கவா?எனை
(மணப்பதற்கு)
நெஞ்சார்ந்த காதலுடன் நெடுந்தொலைவு தேடி,
நீர் சூழ்ந்த பள்ளங்களில் விழுந்தெழுந்து ஓடி, பஞ்சாய்க் கோரைகளை பறித்தெடுத்து வந்தேன்!
பாவையொன்று அவளைப் போல் நான் செய்து வந்தேன்.

மூங்கிலனைய தோளும் முழு நிலவு முகமும் முல்லையினால் பல்லும் முத்துதிர்க்கும் சொல்லும்
பாங்கியுந்தன் தலைவியாம் எந்தன் காதலியைப் போல்
பாவையினைப் படைத்த விதம் சொல்கிறேன் கேள்!
பருவமயில் அருகமர்ந்து அவள் மேனியெழில் படித்தேன்
உருவமொன்று அவளைப் போல் செய்துடனே முடித்தேன்!
பாவையவள் பெயரையே நாளெல்லாம் துதித்தேன்
படமாக உள்ளத்தில் அவளைத்தான் பதித்தேன்
மங்கையவள் மடிமீது சாய்ந்ததென்ன பொய்யா?
மலரணையில் இன்பத்தில் தோய்ந்த து தான் பொய்யா? – அவள் மீது சாய்ந்து தொய்யில் எழுதியது தான் பொய்யா?
மற்றவர்க்குத் தெரியாமல் நடந்ததெல்லாம் பொய்யா?
அடலேறு நான் மடலேறி வருவேன் அவள்
உடலோடு உறவாடியது அனைத்தையும் சொல்வேன்
உலகத்தை ஈடாக தருகின்றார் எனினும்
உள்ளத்தினிலே இருப்பவளை இழப்பதற்குத் துணியேன்!
செங்கோன்மை நியாயத்தைக் கூறட்டும் – அந்தச் செந்தமிழாள் எனக்கென்றே ஆகட்டும்.
சில சொற்களுக்கு பொருள் விளக்கம் : மடலேறுதல் = காதல். தலைவியை அடைதல் வேண்டிப் பனை மடலினால் ஆன குதிரையின் காதல் தலைவன் ஏறி ஊர்தல்.
பஞ்சாய்க் கோரை= ஒரு வகையான கோரைப்புல்
தொய்யில் = மகளிர் தனங்களில் சந்தன குழம்பால் எழுதுகிற கோலம்
பணை = மூங்கில்
தை இயும் =செய்து தந்தும்
யான் தற் கடவின் = நான் அவளைக் கேட்டால்..
