தமிழுக்கு வணக்கம்/குறுந்தொகை/புலவர் பாண்டியன் பன்னாடு தந்தான்.

தமிழுக்கு வணக்கம்
பொதுவாக சில சமயங்களில், இயற்கைக்கு ஏற்ப, நமது எண்ணங்கள் வெளித் தோன்றும். நேற்று நான் இந்தக் குறுந்தொகைப் பாடலை பதிவிடும் போது கூட நாளை இயற்கை நமக்கு நல்லது செய்யும் என்று நினைக்கவில்லை. தமிழகத்தில் மழை பொழிந்தது. பூமி குளிர்ந்தது. வறட்சி தணிந்தது..
காரணம் இன்றைக்கு பதிவிடும் அந்த இலக்கியப் பாடலில் அப்படி ஒரு செய்தி நாம் இயற்கைக்கு உறுதுணையாக நின்றது போல அமைந்துள்ளது.
நம் சங்கத் தமிழ் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றும், இந்தப் பதிவு என்னை சிலர்க்க வைக்கிறது.
நெடுநாட்களுக்கு பிறகு இன்று 19,6,2023 அன்று நல்ல மழை பொழிவு தமிழகத்தில்
சங்கத்தமிழ் இன்று நமக்கு மழையை தர எங்கும் ஆனந்தம்.
குறுந்தொகைப் பாடல் படித்தால் எல்லோருக்கும் புரியும்.
குறுந்தொகை தரும் இன்றைய செய்தி மழையை வாழ்த்தும் தலைவன்m….
குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் பாண்டியன் பன்னாடு தந்தான்.
” தாழ் இருள் துமிய மின்னித் தன்னென
வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து இடித்துப்
பெய்து இனி வாழியோ பெருவான் யாமே
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
இவளின் மேவினம் ஆகி குவளைக்
குறு தாள் நாள் மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அனையேமே”.
( வினைமுற்றி மீண்டும் தலைவியோடு இன்புற்ற தலைமகன், மழையை நோக்கி “நீ நன்றாகப் பெய்வாயாக என வாழ்த்தியது ).
செய்வினை முற்றுவித்ததனால் நிறைவையுடைய உள்ளத்தோடு, இத்தலைவியோடு விரும்பிப் பொருந்தி னேமாகி,சூடிய குவளையினது குறிய காம்பையுடைய அலர்ந்த செவ்வியையு டைய மலர் மணக்கின்ற, நல்ல மெல்லிய கூந்தலாகிய மெல்லிய பாயலின் கண்ணேயி ருந்தேம் : ஆதலின் பெரிய மேகமே இப்பொழுது தங்கிய இருள் கெடும்படி மின்னுதலைச் செய்து குளிர்ச்சி உண்டாகும் படி வீழுகின்ற துளிகளுள் இனியவற்றைத் துளித்து முறைமையினால் குறுந்தடியால் அடிக்கப்பெறும் முரசைப் போல் முழங்கி பன்முறை இடித்து மழையைப் பெய்து வாழ்வாயாக!.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிப் பொருள் தேடச் சென்றான். அவன் கூறியது போலவே, அவன் கார்காலத்தில் பொருளோடு திரும்பிவந்தான். தான் பொருள் தேடுவதில் வெற்றி அடைந்ததால் மகிழ்ச்சியுடன், அவன் தன் மனைவியோடு படுக்கையில் இருக்கிறான். அப்பொழுது மேகம் மின்னலோடும் இடியோடும்கூடி மழை பெய்கிறது. தான் பொருள் தேடுவதில் வெற்றி பெற்றதாலும், கார்காலத்திற்கு முன்னரே திரும்பி வந்ததாலும், மனைவியோடு கூடி இருப்பதாலும் மகிழ்ச்சி அடைந்த தலைவன் மேகத்தை நோக்கி, “மழையே நீ நன்றாகப் பெய்வாயாக” என்று வாழ்த்துகிறான்.
உரை: நாம், பொருள் தேடுவதில் வெற்றி பெற்று நிறைவுடன் கூடிய உள்ளத்தோடு, தலைவியோடு விரும்பிக் கூடி , மலர்ந்த குறுகிய காம்பை உடைய அன்றலர்ந்த குவளை மலர் மணக்கும் தலைவியின் அழகிய கூந்தலாகிய மென்மையான படுக்கையில் உள்ளேம். ஆதலின், பெரிய மேகமே! இப்பொழுது, தங்கிய இருள் கெடும்படி மின்னி, குளிர்ச்சி உண்டாகும்படி விழுகின்ற துளிகளுள் இனியவற்றைச் சிதறி, முறையாக குறுந்தடியால் அடிக்கப்படும் முரசைப் போல முழங்கி, பலமுறை இடித்து, மழையைப் பெய்து வாழ்வாயாக!
சிறப்புக் குறிப்பு: பொருள் தேடுவதில் வெற்றி அடைந்த தலைவன், தான் மேற்கொண்ட இல்லறத்துக்குரிய பொருள் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்தான். மேலும், தலைவியோடு கூடியிருப்பதால் இன்பமும் அடைந்தான். ஆகவே, மன நிறைவினால் மழையை வாழ்த்துகிறான்.
murugashanmugam
