எம்.ஜி.ஆரின் பிம்பத்தை எனக்குள் மேலும் உயரச் செய்தஅவரது கோணம்

– ஏவிஎம் சரவணன் .
சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரை, எனக்கு மிகவும் பிடிக்கும். ஏவி.எம்.மில் அவரது படத்தின் ஷூட்டிங் எப்போது நடைபெற்றாலும், தவறாமல் என் அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் போவார். அதே போல நானும் அவர் படத்தின் ஷூட்டிங் வேறு இடங்களில் நடைபெறும்போது, குறிப்பாக எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்றால், அந்த படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று வருவேன். படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் கொஞ்ச நேரம் பேசி அரட்டை அடித்து விட்டு வீடு திரும்புவேன். இது எனக்கு ரொம்ப நாள் பழக்கமாக இருந்தது.
எம்.ஜி.ஆர். எங்கள் நிறுவனத்துக்காக ‘அன்பே வா’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு ஒரு நாள், தேவர் பட ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆரை வழக்கம் போலவே போய் சந்தித்தேன்.
அப்போது அவர் என்னிடம், ‘உங்களிடம் ஒரு வேண்டுகோள். இனிமேல் நான், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது நீங்கள் என்னை வந்து பார்க்க வேண்டாம்’ என்றார்.
நான் ‘எதற்காக அப்படிச் சொல்கிறார்?’ என்பது புரியாமல், குழப்பத்துடனேயே அவர் முகத்தைப் பார்த்தேன்.
எம்.ஜி.ஆர். தொடர்ந்தார். ‘நமது நட்பு பற்றியோ, நான் உங்கள் படத்துக்கு ஒழுங்கா கால்ஷீட் தேதிகள் கொடுத்திருப்பது பற்றியோ யாரும் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் அடிக்கடி நான் நடிக்கும் வேறு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து என்னைப் பார்த்தால், ‘பாரு… எம்.ஜி.ஆர்., ஏவி.எம். நிறுவனத்துக்கே சரியாக தேதி தரவில்லை போலிருக்கு.. சரவணனை இப்படி அலைய விடறாரே..’ என்று பேசக்கூடும். அதுக்கு நாம் ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரணும்?. உங்களுக்கு என்னைப் பார்த்து பேசணும்னு இருந்தா, தோட்டத்துக்கு வாங்க. எப்ப வேணும்னாலும் வாங்க. அரட்டை அடிப்போம். இல்லையா… போன் பண்ணுங்க, நான் உங்க இடத்துக்கு வர்றேன்’ என்றார்.
நான் அசந்து போய்விட்டேன். அவரது கோணம், எனக்குத் தோன்றவே இல்லை. அந்தக் கோணம், எம்.ஜி.ஆரின் பிம்பத்தை எனக்குள் மேலும் உயரச் செய்தது.
– ஏவிஎம் சரவணன் .