ஒரே ஸ்மார்ட் டிக்கெட்.. சென்னை பஸ், மெட்ரோ, புறநகர் ரயிலில் ஈஸியா பயணிக்கலாம்! ஸ்டாலின் அதிரடி பிளான்

சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தற்போது விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இன்னொரு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ சேவை உள்ளது.
சேவை இன்னொரு பக்கம் கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி செங்கல்பட்டு முதல் பீச் வரை, தாம்பரம் முதல் பீச் வரை, வேளச்சேரி முதல் பீச் வரையும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது போக பேருந்து சேவையும் சென்னையில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இந்த மூன்று ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும்.
இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுண்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
கடந்த 2020ம் ஆண்டில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது. இந்த குழு சார்பாக தற்போது இது தொடர்பான திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் ரயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரிடம் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை செய்து உள்ளார். இதன் மூலம் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை விரைவில் அரசு ஏற்படுத்த உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.