அன்பிலும் ஆனந்தத்திலும் திளைத்த பகவான் ரமண மஹரிஷி

அன்பிலும் ஆனந்தத்திலும் திளைத்த பகவான் ரமண மஹரிஷி
பிலிப்ஸ் என்கிற ஆங்கிலேயர் தன் மகனை போரில் இழந்து வாடி பகவானிடம் வந்தார்.
“பகவானே, அவனுக்கு ஏதாவது உய்யும் வகை இருக்கிறதா?”
பகவான் அவரை அமைதியாய்ப் பார்த்தபடி பேசினார்:
“பதட்டம், சோகம்லாம் உங்க இயல்பு இல்லை. அமைதி, ஆனந்தம் தான் உங்க சொரூபம். இழப்பு வந்துடுத்துன்னு உங்க மனசு தான் சொல்லறது. உங்க சொரூபம் சொல்லலை. சொரூபம் தான் சர்வ சாட்சி. அது சொல்லாத எதையும் நம்பாதீங்க; எங்க ஜனங்க அடிக்கடி சொல்ற ஒரு கதையைக் கொஞ்சம் கேளுங்க..
“இரண்டு இளைஞர்கள் ஒரு தூர தேசத்திற்குப் புனித பயணம் மேற்கொள்கிறார்கள். முன்ன எல்லாம் ஒரு பயணம் போய்ட்டு வர்றதுக்குக் கொஞ்ச மாதங்கள் ஆகும் இல்லையா. ஒன்றிரண்டு மாதம் போன பின் ஒரு செய்தி வந்து சேருது. அதாவது முதல் இளைஞன் வழியில காட்டுல விபத்து ஏற்பட்டு இறந்துட்டான்னு. முதல் வாலிபன் அம்மா ஒப்பாரி வெச்சு அழறா. சோறு தண்ணி சாப்பிடாம நோயில் விழுந்து படுத்த படுக்கை ஆயிடறா. இப்படி சில வாரம் ஆனதுக்கப்புறம் இறந்ததா அவங்க நினைச்ச பையன் வீட்டுக்கு வந்து நிக்கறான். இப்ப புரியறது இரண்டாவது வாலிபன் தான் புலி தாக்கி இறந்துட்டான்னு. இப்ப முதல் தாய் எழுந்து உட்கார்ந்துக்கறா. ரெண்டாவது தாய் சுருண்டு விழறா. பையன் இறந்ததுக்கு அப்புறமும் அவளை அந்த இறப்பு செய்தி வர்ற நொடி வரை தெம்பா வெச்சிருந்தது எது? தெம்பா இருந்த முதல் தாயை நோயில் தள்ளினது எது? எல்லாம் மனசு தான். நீங்க தூக்கத்திலே நிம்மதியா தூங்கறப்ப மனசு இல்லாததுன்னால தானே ஏழை பணக்காரன், படித்தவன், படிக்காதவன், அறிவாளி, முட்டாள் எல்லாம் ஒண்ணா ஆனந்தமா தூங்க முடியறது?
அதனால மனசை தூக்கிப்போட்டுட்டு பரிபூரணத்திடம் சரணம் அடையுங்க. ஒரு சாட்சியாக மட்டுமே இருங்க. “ என்று பகவான் ஆறுதல் சொன்னார்.
மனதை தூக்கிப் போடும் கலையைக் கற்பது சிரமம் தான். தாயுமானவ சுவாமி இதைப் [பற்றிச் சொல்கையில்
‘கந்துக மதக்கரியை வசமா
நடத்தலாம்,
கரடி, வெம்புலி வாயையும்
கட்டலாம், ஒருசிங்கம்
முதுகின்மேல் கொள்ளலாம்,
கண்செவி எடுத்து ஆட்டலாம்,
வெந்தழலின் இரதம்வைத்து
ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்,
வேறொருவர் காணாமல் உலகத்து
உலாவலாம்,
விண்ணவரை ஏவல் கொளலாம்,
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்,
மற்றுஒரு
சரீரத்தினும் புகுதலாம்,
சலமேல் நடக்கலாம், கனல்மேல்
இருக்கலாம்,
தன்நிகர்இல் சித்திபெறலாம்,
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம்அரிது, சத்தாகிஎன்
சித்தம்மிசை குடிகொண்ட அறிவான
தெய்வமே,
தேசோமய ஆனந்தமே.’
என்கிறார்.
ஆனால் பகவான் நிலை வேறு. வாரக்கணக்கில் அவரால் உயிர் வாழத் தேவையான உணவு, நீர் போன்றவை இன்றி வாழ முடிந்தது. வெறும் சிறிய இடுப்புத் துணியுடன் குளிரிலும் வெயிலிலும் மழையிலும் காலம் தள்ள முடிந்தது. அத்தனை வசதிகளையும் புறந்தள்ளிவிட்டு அனைத்து ஜீவராசிகளிடமும் ஒரே மாதிரியான அன்பு காட்ட முடிந்தது.
வாயில்லா ஜீவராசிகளிடம் அவர் பேசவும் செய்தார். ஒரு சிறிய கருப்பு நொண்டி நாய் ஆஸ்ரமத்தில் காலையில் நாலைந்து இட்லி சாப்பிடும். சாப்பிட்டு விட்டு சர்வாதிகாரி அறை வாயிலில் வாந்தி எடுக்கும், மலம் கழிக்கும். பகவான்பார்த்தால் அதை அன்போடு அணைத்து தன வெள்ளை வெளேர் மேல் துண்டால் துடைத்து விட்டு விளையாடுவார்.. துடைத்த துண்டையும் தம் அக்கிளில் செருகிக் கொள்வார். ஏன் என்றால் மற்றவர்கள் கீழே போட்டால் அதை உடனே அப்புறப்படுத்தி தோய்க்கப் போட்டு விடுவர். பகவான் அசுத்தமும் பார்க்க மாட்டார், தன் துணியைத் தானே துவைக்க விரும்புவார். அந்த நாய்க்கு ஒரு காலை ஆஸ்ரமத்தினர் கோபப்பட்டு உணவிடாததை பகவானிடம் சொல்லி விடுகிறது. பகவானுக்குக் கோபமான கோபம். ” பெரிய சுத்தம். பொல்லா சுத்தம் உங்க சுத்தம். நீங்க அதிகாரம் பண்றது பண்ணிக்கோங்க. நொண்டிக்கு கிடைக்காத இட்லி எனக்கும் வேணாம்.” என்று சொல்லிவிட்டு சாப்பிடவே வரவில்லை. அனைத்து ஆஸ்ரம வாதிகளும் வந்து பகவான் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பிறகு தான் சாப்பிட சம்மதித்தார். இப்படி அனைத்து ஜீவன்களிடமும் அவர் அன்பைக் காட்டினார்.
(பகவான் ரமண மகரிஷி நினைவு நாள் 14-4-23)
தொகுப்பு ஸ்ரீதர் சாமா
annaroad @gmail.com
94443 92452