ராஜா நடந்து வந்தாலும், தவழ்ந்து வந்தாலும் இவரின் இசை யானை மீதுதான் வரும்

வாலி சாரின் கோபம் தமிழ்க்கோபம் என்றால், ராஜாவினுடையது இசைக்கோபம். அவரின் ரெக்கார்டிங் தியேட்டர் போகும்போது, ‘பட்டர் என்ன பண்றார்?’ என்று கேட்டு விட்டுதான் உள்ளே போவேன். ஆமாம், ராஜா, அபிராமிபட்டர் மாதிரி. டக்கென ‘போடா’ என்று சொல்லிவிடுவார். அதைக்கேட்பதற்கே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். காதலியாக இருந்தால் இன்னொரு முறை சொல்லக் கேட்டு ரசிக்கலாம். இவர் ராஜாவாயிற்றே, கேட்டுவிட்டு அப்படியே ஓடிவந்துவிட வேண்டும்.
ஆனால், அது செல்லக்கோபம்தான். வாலி சாருக்கெல்லாம் இவ்வளவு மரியாதை தருபவர் இல்லை என்பேன். நான்கூட சமயங்களில் வாலி சாரை எதிர்த்துப் பேசுவேன். வாதாடுவேன். ஆனால் இவர், ‘ஏங்க சும்மாயிருங்க. அவர்ட்ட அப்படியெல்லாம் பேசக்கூடாது. பெரிய மனுஷன் சொல்றார். கேட்டுட்டுப் போறதை விட்டுட்டு, அவர்ட்டபோய் வாக்குவாதம் பண்றீங்க. நாமதான் பொறுமையா இருந்து வாங்கணும். இருங்க, நான் வாங்கித்தர்றேன்’ என்று என்னை சீனில் இருந்து ஓரங்கட்டிவிட்டு, எனக்காக அவர் வேலை செய்வார். ஒருமுறை பிரகாஷ்ராஜ், ‘உங்கப் பேச்சை எடுத்தால் அவருக்குக் கண் பளபளக்குதுங்க’ என்றார். உண்மைதான், இது இருவருக்குமான மியூச்சுவல் புரிந்துணர்வு.
எனக்கு அவரைத் தெரியும் என்பதையும் தாண்டி அவர் எனக்கு உறவாகவே மாறிவிட்டார் என்பதே எனக்குப்பெருமை. இளையராஜா என்கிற கலைஞனை நண்பராக்கி, பிறகு என் சகோதரராகவே ஏற்றுக்கொண்டவன். சந்திரஹாசன் அவர்களின் இழப்புக்குப் பிறகு, `அவரின் இடத்தை நாங்கள் நிரப்புகிறோம்’ என்று என்னுடன் நிற்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இளையராஜா. ஆம், சந்திரஹாசன் அவர்களின் இடத்தை நான் அவருக்குத் தந்திருக்கிறேன்.
இத்தனை ஆண்டுக் காலப் பயணத்தில்… எத்தனையோ பிசகுகள் நேர வாய்ப்புள்ள துறை. இருவருமே கோபக்காரர்கள். காசு, கருத்துவேறுபாடு… என்னென்னமோ இருக்கின்றன. நான் பகுத்தறிவு பேசுகிறவன். அவர் மிகத் தீவிர ஆன்மிகவாதி. ஆனாலும் அவரிடம் பேசும்போது என் கருத்தை அடக்கி வாசித்ததே கிடையாது. ஆனால், அதற்கு இருவருமே இடம் கொடுக்காத அளவுக்கான அன்பு எங்கோ அனைத்தையும் பூசி மெழுகிவிட்டது.
எப்படி பாலசந்தர் சார், சிவாஜி சார், கண்ணதாசன், வாலி, நாகேஷ், ஜெயகாந்தன்… பற்றிப் பேசும் போதெல்லாம் சந்தோஷத்தில் நெஞ்சு விம்முமோ, அப்படி இவரைப்பற்றி அழாமல் பேசுவது சிரமம். இவர்தான் இளையராஜா என்று தெரியாமல் ஆரம்பித்ததில் இருந்து, சின்ன கேசட் கடைகளில் இவரின் படத்தைப் போட்டு தமிழகமே கொண்டாடிக் கொண்டு இருப்பது கடந்து, அவருடனான என் 100 படங்கள், மொத்தமாக அவரின் ஆயிரம் படங்கள்… என்று அவரின் பயணத்தைப் பார்க்கையில் ஏதோ இவரை நானே கண்டறிந்தது போலவும் இசை கற்றுக்கொடுத்துக் கூட்டி வந்ததுபோலவும் எனக்கு அவ்வளவு பெருமை.
ஒரு விஷயம் சொல்லட்டுமா, 30 வருடம் முன்பு கேட்டு இருந்தாலும் இதையேதான் பேசியிருப்பேன். அன்று அப்படிப் பேசியிருந்தால், ‘இன்னும் படம் பண்ண வேண்டியிருக்கு. அதனால் காக்கா பிடிக்கிறான்யா’ என்றெல்லாம் நினைத்திருப்பார்கள். அதனால் 30 வருடங்கள் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்கிறேன். ஆம், எங்கள் ராஜா நடந்து வந்தாலும், தவழ்ந்து வந்தாலும் இவரின் இசை யானை மீதுதான் வரும் என்பது எனக்கு அப்போதே புரிந்திருந்தது. அதைத்தான் எனக்கான பெருமையாக நினைக்கிறேன்
– கமலஹாசன்
நன்றி: நவீனன் yari.com