கல்லாப்பெட்டி சிங்காரம் என்னும் கலைப்பொக்கிஷம்….

கல்லாப்பெட்டி சிங்காரம் என்னும் கலைப்பொக்கிஷம்….
கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் சிறு சிறு கதாபத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் கல்லாபெட்டியின் முறைப்படியான அறிமுகம் அமைந்தது 1979 -ல் வெளிவந்த ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் தான்.இது பாக்யராஜ் இயக்குனராக அவதாரம் எடுத்த முதல் படம்.அந்தப் பட டைட்டில் இதைத் தெளிவாக சொல்கிறது. ஆனால் இதற்கு முன்பே 1966 -ல் வெளிவந்த ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’ படத்தில் நகை திருடும் வியாபாரி வேடத்தில் நாகேஷ் உடன் நடித்திருப்பார்.
கல்லாபெட்டியின் பிரத்யேகமான அந்த ‘ வாய்ஸ் ‘ சுவரில்லாத சித்திரங்கள் படத்திலே காணலாம். “அடேய்..அடேய்…அழகப்பா…இது ஆண்டவனுக்கே அடுக்காதுடா…” என்று தன் மகன் பாக்யராஜுடன் கோபிப்பதாக இருக்கட்டும், கவுண்டமணியின் தையல்கடையில் உர்கார்ந்து கொண்டு “கண்ணடிச்சா வராத பொம்பளை…கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா..?” என்று திரும்பத் திரும்ப கேட்டுவிட்டு, பின்னால் நிற்கும் காந்திமதியைப் பார்த்தவுடன் வழிவதாக இருக்கட்டும், பாக்யராஜ் திரை வாரிசுகளின் திருட்டு முழி சரித்திரம் அனேகமாக இவரிடமிருந்துதான் ஆரம்பித்திருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.அதிலும் அவர் “லட்சுமி அக்கா”-வின் கதை சொல்லும் அழகே தனி…!
கல்லாப்பெட்டியின் நடிப்பில் மகுடமாய் அமைந்தது ‘இன்று போய் நாளை வா’..திரைப்படம். சராசரியை விட குள்ளம், மெலிந்த தேகம்,பார்த்த உடனே ‘ பக் ‘என்று சிரிப்பை வரவழைக்கும் முகம், ஆடு அடிதொண்டையில் பேசுவதுபோல் குரல் என நகைச்சுவைப் பாத்திரத்திற்கேற்ற உருவ அமைப்புடைய ஒருவர் பயில்வானாக நடிப்பதென்பது சாத்தியப்படுமா..?. அவரது உடல் மொழியும்,வசன உச்சரிப்பும் அத்தனை குறைகளையும் ஒட்டுமொத்தமாகத் தூக்கி சாப்பிட்டு விடும். காமா பயில்வானின் ஒரே சிஷ்யனான சோமா பயில்வானாக வருவார். “வெரிகுட்..வெரி குட்…வெரி குட்…”, “கமான்..கமான்.. கமான்..குயிக்..குயிக்..”, “தேங் யு…தேங் யு…”, “ஓக்கே பை..ஓக்கே பை ” என்று ஷோல்டரை உலுக்கி, கண்களை உருட்டி அவர் சொல்லும் ஸ்டைல் அலாதியானது.
ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள் என தொடர்ந்து பாக்கியராஜ் படங்களில் படம் முழுக்க வியாபித்திருப்பார் கல்லாப்பெட்டி.
‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் பாக்யராஜுக்கு அப்பா வேடம். பணக்கார வேஷம் போடும் ஏழை வாட்ச்மேன். கேட்கவா வேண்டும்…? ஒரு கட்டத்தில் முதலாளியின் மகள் பூர்ணிமா மனது மாறி பாக்யராஜை திருமணம் செய்ய சம்மதித்து விடுவார். அதை பாக்யராஜின் அப்பாவாகிய கல்லாபெட்டியிடம் தெரியப்படுத்துவது போல் காட்சி. அவரின் காலில் விழுந்து, “என்னை ஆசீர்வாதம் செய்யுங்க மாமா….” என பூர்ணிமா சொல்லும்போது, ” மாமா.. நான் மாமா..” என்று வார்த்தைகள் வராமல் சந்தோசத்தில் நெஞ்சுவலியே வந்து சாய்ந்து விடுவார். இன்னமும் நினைத்துப் பார்த்து சிரிக்கத் தூண்டும் காட்சி அது. அந்தக் காட்சியில் கல்லாபெட்டியைத் தவிர யார் செய்திருந்தாலும் இவ்வளவு அற்புதமாக அமைந்திருக்காது. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு கல்லாப்பெட்டியை ஏன் பாக்யராஜ் பயன்படுத்தவில்லை என்பது மட்டும் புரியாத புதிர். “எடுத்து ஊத்திக்கிட்டா என்ன..எறங்கி முங்குனா என்ன.. எப்படியும் குளியல் ஒன்னுதானடா..!” இந்தப் படத்தில் கல்லாப்பெட்டி உதிர்க்கும் தத்துவமுத்துக்களில் இதுவும் ஓன்று.
பாக்யராஜ் காம்பினேசன் தவிர்த்து அவர் நடித்த மற்றப் படங்களிலும் நகைச்சுவையோடுக் கலந்த குணச்சித்திர வேடங்களில் கச்சிதமாகக் கலக்கியிருப்பார். காக்கிச்சட்டை படத்தில் கமலைப் போலிஸ் வேலைக்குத் தயார் செய்யும் ஒரு பொறுப்புள்ள அப்பாவாக நடித்திருப்பார். உதயகீதம் படத்தில் திருட்டு தொழில் செய்யும் கவுண்டமணியின் அப்பாவாக நடித்து அவரையே காமெடியில் ஓவர்டேக் செய்திருப்பார்.
நன்றி: மனதினில் உறுதி வேண்டும்.காம்