Uncategorized

யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்தவர்!

மூத்த பத்திரிகையாளரான சின்ன குத்தூசி என்கிற தியாகராஜனின் நினைவுநாள் – மே 22 ஆம் தேதி.

15.06.1934 ல் பிறந்து ‘சின்ன குத்தூசியார்’ என்று சக நண்பர்களால் அழைக்கப்பட்ட அவரைப் பற்றி, ‘நக்கீரன்’ கோபால் வெளியிட்ட சின்ன குத்தூசியார் நினைவு மலரில், பத்திரிகையாளர் இரா.ஜவஹர் எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு :

என் தோழமைத் தந்தை!

“நீங்கள் கற்பனை கூடச் செய்ய முடியாது.

அந்த அளவுக்கு உயர்ந்த மனிதர் என் தோழமைத் தந்தையான சின்ன குத்தூசியார்.

ஒரு சம்பவம்.

1999 ஆம் ஆண்டில் நடந்தது.

‘நக்கீரன்’ இதழில் குத்துசி சாரின் கட்டுரை ஒன்று வெளியானது.

அதைக் கடுமையாக மறுத்து நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதை எடுத்துக் கொண்டு நேரே குத்தூசி சாரின் அறைக்குச் சென்றேன்.

அவரிடமே எனது கட்டுரையைக் கொடுத்தேன். அவர் உடனே அதை முழுமையாகப் படித்தார்.

படித்து முடித்ததும் என்ன சொன்னார் தெரியுமா?

“ரொம்ப நல்லா இருக்கு ஜவஹர். ‘நக்கீரனில்’ இதைப் போடச் சொல்றேன். காமராஜூக்குப் போன் போடுவோம்” என்றார்.

அதற்கு நான் “ஏற்கனவே பேசி விட்டேன். காமராஜ் இப்போது வந்து விடுவார்” என்றேன்.

காமராஜ் வந்தார். பேசினோம். ‘நக்கீரனில்’ எனது கட்டுரை வெளியானது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அவரை மறுத்துக் கட்டுரை எழுதுகிறேன். அதை அவரிடமே கொடுக்கிறேன். அவர் அதைப் படித்துப் பாராட்டுகிறார். அதை ‘நக்கீரனில்’ வெளியிட வேண்டும்’ என்று அவரே சொல்கிறார்.

‘நக்கீரனில்’ கட்டுரை வெளியாகிறது.

என்ன மனிதர் இவர்! எப்படி இந்த அளவுக்குப் பெருந்தன்மையாகவும், நேர்மையாகவும் இவரால் இருக்க முடிகிறது!

அவர் தான் சின்ன குத்தூசியார்!

மிகச் சிறந்த பத்திரையாளர். அவர் தொடாத துறையே இல்லை எனலாம்.

அவருடைய அரசியல் விமர்சனக் கட்டுரைகள் மிகவும் பிரபலமானவை. அவை மட்டுமல்ல, சாதி, மதம் போன்ற சமூகவியல் பிரச்சினைகளாகட்டும், தமிழ், தமிழிசை போன்ற பண்பாட்டுப் பிரச்சினைகளாகட்டும், எதையும் அவர் விட்டு வைத்தது இல்லை.

ஏன், அருமையான அறிவியல் கட்டுரை கூட எழுதியிருக்கிறார்.

அடிப்படையில் அவர் பெரியாரிஸ்ட். எந்தப் பத்திரிகையில், எந்த அமைப்புக்கு ஆதரவாக அவர் எழுதினாலும், ‘பிராணர் அல்லாதார் நலன்’ என்ற கண்ணோட்டத்தை விட்டு விலகியதே இல்லை.

எனினும் தனிப்பட்ட முறையில் அவர் யாரிடமும் பகைமை பாராட்டியதில்லை. அனைவரையும் நேசித்தார். அனைவருக்கும் உதவினார், எனக்கும்.

அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தது 1987 ஆம் ஆண்டில்.

பத்திரிகை வேலை வாங்கித் தருமாறு கேட்டு அவரைச் சந்தித்தேன்.

உடனே ‘அதிர்ஷ்டம்’ நாளிதழில் செய்திப்பிரிவில் உதவி ஆசிரியராக எனக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார்.

அன்று முதல் சுமார் கால் நூன்றாண்டு காலமாக அவரது மறைவு வரை, எங்களது ஆழமான நட்பும், தோழமையும், பரிவும், பாசமும் இடையறாது நீடித்தன.

கம்யூனிசத்தின் தீவிர ஆதரவாளன் நான். அவரிடம் பழகத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் எனக்கே உரிய துடுக்குத்தனத்தோடு திராவிட இயக்கத்தைப் பற்றி அவரிடம் விமர்சனம் செய்தேன்.

சரமாரியாகத் திருப்பிக் கொடுத்தார், அமைதியாக, நிதானமாக, ஆதாரபூர்வமாக, வரலாற்று ரீதியாக!

திகைத்துப் போனேன். இவ்வளவு விவரங்களை அறியாமல் இருந்திருக்கிறோமே என்ற குற்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

அதன்பிறகே திராவிட இயக்க நூல்களைத் தேடிப் பிடித்துப் படிக்கத் தொடங்கினேன். குணம் நாடி, குற்றம் நாடி, அதனின் மிகை நாடும் பக்குவமான விமர்சனப் பார்வையை வந்தடைந்தேன்.

ஆனால் அவரிடமிருந்து கற்றுக் கொண்டு பின்பற்றி நடக்க வேண்டும் என்று நான் விரும்பிய இரண்டு விஷயங்களில், எனக்கு இன்று வரை தோல்வி தான்.

ஒன்று: ‘பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே’ என்றபடியே அவர் வாழ்ந்தார்.

என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும். அதுவரை மனசு நிம்மதி பெறாது.

இரண்டு: யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் வாழ்ந்தார்.

அப்படியும் என்னால் இருக்க முடியவில்லை.

ஒருவருக்கு உதவி செய்கிறேன். பிறகு அவரிடம் இருந்து எனக்கு ஓர் உதவி தேவைப்படுகிறது.

அவரால் அதைச் செய்ய முடியும். செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். செய்யாவிட்டால், ஏமாற்றமும், கோபமும் ஏற்படுகின்றன. மற்றொரு வாய்ப்புக் கிடைக்கும்போது, அவரைப் போட்டுப் பார்த்து விடுகிறேன்.

குத்தூசி சாரிடம் பழகத் தொடங்கிய பிறகு, என்னுடைய இந்த இரண்டு கெட்ட குணங்களையும் விட்டுவிட 25 ஆண்டு காலமாகப் போராடி வருகிறேன். கால்வாசி தான் வெற்றி! முக்கால் வாசி தோல்வி!

அவர் உறுதியான தி.மு.க ஆதரவாளர். கலைஞரைத் தனது உயிருக்கு மேலாக நேசித்தவர். எனினும் அவரைச் சந்திக்க அனைவருமே ஆர்வத்துடன் வந்து கொண்டு இருந்தார்கள்.

அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள், அரசியல் ஆர்வம் இல்லாதவர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஆண்கள், பெண்கள், முதியோர், இளையோர் என்று எத்தனை வகை!

அவரிடம் உதவி கேட்ட அனைவருக்குமே அவர் உதவினார். அவ்வாறு உதவி பெற்றவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் என்பதா ஆயிரக்கணக்கானவர்கள் என்பதா? அத்தனை பேருக்கும் அவர் உதவினார். ஆனால் தனக்காக யாரிடமும் அவர் உதவி கேட்டதில்லை.

அவருடைய இறுதிக்காலத்தில் பல ஆண்டுகளாக உடல் நலிவுற்று இருந்தார்.

அப்போது கூட பலர் உதவ முன்வந்தும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

நக்கீரன் கோபால் மற்றும் ஓரிருவர் மட்டுமே விதிவிலக்கு.

அவரது இறுதி நாட்களில் படுத்த படுக்கையாகிப் போனார். தாங்க முடியாத உடல் வேதனையும், உள்ள வேதனையும் அவரை வாட்டி எடுத்தன.

“தயவு செய்து என்னை முடித்து விடுங்கள்” என்று மருத்துவரிடம் அவர் மன்றாடினார்.

அதற்கு உதவுமாறு என்னிடம் உரிமையோடு வலியுறுத்தினார்.

ஏனென்றால் கருணைக் கொலையை, கண்ணியமாகச் சாவதற்கான உரிமையை ஆதரித்து, அவரும் நானும் நீண்ட காலமாகப் பேசி வந்திருக்கிறோம்.

ஆனால் அவர் என்னிடம் இந்த உதவியைக் கேட்டபோது, ஏதும் செய்ய இயலாத கையறு நிலையில் நான் மிகவும் வேதனைப் பட்டேன்.

அருகில் அமர்ந்து அவருடைய கால்களை மென்மையாகப் பிடித்துவிட்டபடி “முயற்சி பண்றேன் சார்” என்று வெற்று வார்த்தைகளைத் தான் என்னால் சொல்ல முடிந்தது.

அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. உடன் இருந்த என் மனைவியும் கண்ணீர் விட்டார்.

எனது நெஞ்சு கனத்தது.

கடைசியில், யாரும் காட்டாத கருணையை இயற்கை காட்டிது.

என் தோழமைத் தந்தையே, போய் வாருங்கள்!”

நன்றி: சின்ன குத்தூசியார் நினைவு மலர், 2011

நன்றி: தாய்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button