Uncategorized

பாடகர் டு பௌலர்’

`பாடகர் டு பௌலர்’- பியானோ; சமிந்தா வாஸ்; தோனி; பதிரனா CSK -வுக்கு வந்த கதை!

பதிரனாவின் திறமையை ஒரு வீடியோவின் மூலமாக உணர்ந்த தோனி, 2021 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட அழைத்தார். அப்போது பதிரனாவுக்கு வயது 18 தான்.

இந்த 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனாக விளையாடி வருகிறார் மதிஷா பதிரனா. பிராவோவிற்குப் பிறகு, சிஎஸ்கே அணியின் டெத் ஓவர்களில் தோனியின் ஒற்றை பிரம்மாஸ்திரமாக பதிரானா செயல்பட்டு வருகின்றார்.

`சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ஆர்யா முதல் முறையாக ஸ்டேஜில் ஏறி, டான்சிங் ரோஸுடன் சண்டை செய்வார். அப்போது மைக்கில் பேசும் தங்கதுரை, ” என்னப்பா இந்த பையன் முதல் தடவ, சண்ட போடுற மாதிரியே தெரியலப்பா! பாக்குற பார்வையும் அடிக்குற அடியும், ஏடாகுடமா இருக்கே ப்பா!” என கூறுவார். பெரிய அளவில் அனுபவமில்லாத ஒரு வீரரான மதிஷா பதிரானாவின் பந்து வீச்சை பார்க்கும்போது, நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்த தொடரில் பல நட்சத்திர வீரர்கள் மற்றும் சர்வதேச வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திவரும் பதிரனாவின் கதை கொஞ்சம் ஆச்சர்யமளிக்கக் கூடியது.

தற்போது 20 வயதான பதிரனா, 2002 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 தேதி பிறந்தார். இவரின் சொந்த ஊர், இலங்கை கண்டியில் உள்ள ஹரிஸ்பத்துவா. பதிரனாவுக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகம். நர்சரி பள்ளிக்கு செல்வதற்கு முன்பே, கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டார். இவரது குடும்பம், இசையின் மீது அதீத ஆர்வம் கொண்ட குடும்பம். மதிஷா பதிரனா பியானோ வாசிப்பதிலும், பாடுவதிலும் நல்ல திறமையைப் பெற்றவர். ராயல் காலேஜ் ஆஃப் மியூசிக் என்ற இசைக் கலைஞர்களுக்கான தேர்வில், ஆறாவது கிரேடைப் பெற்றிருக்கிறார். இவரின் தாயார், இசைக் கச்சேரிகளில் ரிதம் கிட்டார் வாசிக்கும் கலைஞர். இவரின் தந்தையும் பல இசைக் கச்சேரிகளில், இசைக் கலைஞராக பணிபுரிந்து வருகின்றார். பதிரனாவுக்கு இரு சகோதரிகள். மூத்த சகோதரி பியானோவும், இரண்டாவது சகோதரி கிட்டாரும் வாசித்து வருகின்றனர். பதிரனாவும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடல்களும் பாடியிருக்கிறார்.

இப்படி பாடல், இசையில் மட்டுமல்லாமல் பள்ளியில் தனது தனித்துவமான பந்துவீச்சின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். மலிங்காவைப் போல பந்து வீசும் இவரின் வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகின.

பதிரானா பந்துவீசும் திறன், இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான மலிங்காவையும் வெகுவாகக் கவர்ந்தது. பதிரானாவின் திறமையைக் கண்ட மலிங்கா, அவருக்கு பயிற்சியையும் அளித்து வந்துள்ளார். பள்ளிகளுக்கு எதிரான போட்டிகள், சிறிய அளவிலான கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக பந்துவீசி வந்துள்ளார்.

மலிங்காவின் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல், முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் பௌலரான சமிந்தா வாஸின் கவனமும், இந்த சிறுவன் மீது விழுந்தது. பதிரனாவின் அபாரமான திறமையைப் பார்த்த இவர், அவரின் தந்தையிடம் கொழும்புக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அப்போது பதிரனா சிறுவனாக இருந்ததால், வெகு தொலைவில் உள்ள கொழும்புக்கு அனுப்ப அவரின் தந்தை ஆர்வம் காட்டவில்லை. அப்போதுதான், கண்டியில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பதிரனாவால் இதை மறுக்க முடியவில்லை. (இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா, இதே கல்லூரியில் தான் படித்தார்.)

பதிரானாவின் புகழ், விரைவிலேயே இலங்கை கிரிக்கெட் வாரியம் வரை பரவியது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த அண்டர்-19 டி20 உலக கோப்பைத் தொடரில், மதிஷா பதிரனா விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசிய இவர், 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வங்கதேச நாட்டிற்கு இலங்கை அண்டர்-19 அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. வங்கதேச அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது, இலங்கை அணி. இதிலும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில், இவர் பந்து வீசும் வீடியோவை தோனி பார்க்கும் அளவிற்கு வைரலாகி இருந்தது.

“தோனி பார்த்த வீடியோ, முதல்தர கிரிக்கெட் போட்டியோ அல்லது சர்வதேச போட்டியோ அல்ல. மாறாக, பள்ளிகள் அளவிலான கிரிக்கெட் தொடரில் பதிரானா விளையாடிய வீடியோ தான் அது. இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யாவின் பள்ளிக்கு எதிரான போட்டியில், பதிரானா பந்து வீசியதைத் தான் தோனி பார்த்துள்ளார்.” என டிரினிட்டி கல்லூரியின் கிரிக்கெட் பயிற்சியாளர் பிலால் ஃபாஸி, ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பதிரனாவின் திறமையை ஒரு வீடியோவின் மூலமாக உணர்ந்த தோனி, 2021 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட அழைத்தார். அப்போது பதிரானாவுக்கு வயது 18 தான். 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரானா தொற்று உச்சத்தில் இருந்ததால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றன. பதிரனாவுக்கு கடிதம் எழுதிய தோனி, “உடனே தடுப்பூசி போட்டுக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு வா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீ விளையாட வேண்டும். வந்து அணியில் இணைந்து கொள்.” என தெரிவித்திருந்தார். ஆனால், நெட் பௌலராக தீக்ஷனாவையும் பதிரனாவையும் எடுக்கும் சிஎஸ்கே முயற்சி தோல்வியில் முடிந்தது. இருவருக்குமே இலங்கை கிரிக்கெட் வாரியம் என்.ஓ.சி (No Objection Certificate) வழங்கவில்லை. இதனால் 2021 ஐபிஎல் தொடரில் இருவருமே சென்னை அணியில் இணையமுடியாமல் போனது.

அடுத்ததாக, அதே 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இலங்கையில் நடைபெற்ற SLC டி20 தொடரில் விளையாடினார். இவர் விளையாடிய முதல் டி20 போட்டி இதுவே. அடுத்ததாக, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற அண்டர்- 19 (50 ஓவர்கள்) உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக விளையாடி அசத்தினார். பின்னர், 2022 ஆசியக் கோப்பைக்கான இலங்கையின் அணியில் இடம் பெற்றார். பதிரனா தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினார்.

பதிரானா பற்றி பேசிய அவரின் தந்தை, “பதிரனாவின் பந்துவீச்சு மலிங்காவைப் போல உள்ளது என்று சொல்கிறார்கள். ஆனால், பதிரனா மலிங்காவைப் போல பந்துவீச முயற்சி செய்யவில்லை. கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதிலிருந்தே அவர் அப்படித்தான் பந்து வீசுவார். கடுமையான பயிற்சி அவரது பந்துவீச்சு திறனை மேம்படுத்த உதவியது,” என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த முறை 2022 ஐபிஎல் சீசனில் நியூசிலாந்து அணி வீரரான ஆடம் மில்னேவுக்கு மாற்றாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 லட்ச ரூபாய்க்கு பதிரனாவை ஒப்பந்தம் செய்தது.

இந்த 2022 ஐபிஎல் சீசனில், CSK vs GT இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் மூலமாக முதன்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார், பதிரனா. இவர் வீசிய முதல் ஒவரின் முதல் பந்திலேயே சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதே ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதிரடியான பந்து வீச்சின் மூலம் தனது முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தவர், மதிஷா பதிரனா. இந்த 2023 ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

‘குட்டி மலிங்கா’ என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், தோனியின் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்டார். 150 கி.மீ வேகத்தில் அதிரடியாக யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய மதிஷா பதிரனா, சி.எஸ்.கே ரசிகர்களின் மனதில் அரியாசனமிட்டு அமர்ந்துள்ளார். கிட்டத்தட்ட மலிங்காவையே, மஞ்சள் ஜெர்ஸியில் பார்ப்பது போன்ற உணர்வு நமக்குள்ளாக தோன்றுகிறது.

நன்றி: விகடன்

பெ.ரமண ஹரிஹரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button