சினிமா

எம்.ஜி.ஆர். – மறக்க முடியாத சம்பவம்/நடிகை சச்சு நேர்காணல்

எம்.ஜி.ஆர். – மறக்க முடியாத சம்பவம் ஒன்று கூறுங்களேன்…

‘மதுரை வீரன்’ படத்தின் நூறாவது நாள் விழா. ஏதாவது ஒரு தியேட்டரில் அந்த விழாவை வைக்கலாம் என்றால், எம்.ஜி.ஆர். போன்ற நடிகர்கள் விழாவுக்கு வருகை தருவதால் கூட்டத்தை சமாளிக்க முடியாது என்ற காரணத்தால் மதுரை தமுக்கம் மைதானத்தில் பெரிய மேடை போட்டு அந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார் கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார். ‘மதுரை வீரன்’ படத்தில் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளும் விழா மேடையில் தோன்றி மக்களைச் சந்தித்து நேரிடையாக நன்றி சொல்ல வேண்டும் என்பது அந்த விழாவின் ஏற்பாடு. நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், நானும் அந்த விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். மிகப்பெரிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த மாதிரி ஒரு பெரிய விழா கூட்டத்தை இதுநாள் வரை நான் பார்க்கவில்லை. இன்று நினைத்தாலும் கனவு போல் உள்ளது.

விழாவுக்கு கார்களில் தொடர்ந்து நடிகர்களும், நடிகைகளும் வந்தவண்ணம் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் முதலில் எம்.ஜி.ஆர். கார் போனபோது, அருகில் புளிய மரத்தின் மீது அமர்ந்திருந்த நிறைய ரசிகர்கள் அப்படியே அவரது காருக்கு அருகில் குதித்துவிட்டனர். அதைப் பார்த்த போலீஸ்காரர்கள், உடனே அவர்களை அடிக்க லத்திகளை உயர்த்தினர். அப்போது எம்.ஜி.ஆர். போலீஸ்காரர்களின் கையை பிடித்துக் கொண்டு, ‘ரசிகர்கள் யாரையும் அடிக்கக் கூடாது. அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் பாதுகாப்புக்கு மட்டும் இருந்தால்போதும்’ என்று கூறினார்.

அதோடு, தன்னைத் தொடர்ந்து லலிதா, பத்மினி, ராகினி போன்ற முன்னணி நடிகைகளும் வருகை தருவதால், ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர்., ‘‘நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் மேடைக்குப் போய் அமரட்டும். அதுவரை நான் உங்களோடுதான் இருப்பேன். அவர்கள் போவதற்கு வழி விடுங்கள்’’ என்று கூறினார். அதைக் கேட்ட ரசிகர்கள் அத்தனை பேரும், அந்த வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடனே நூறு அடி தொலைவுக்குப் பின்னால் போய் நின்றார்கள். இது எனக்கு மனதில் பதிந்த மறக்க முடியாத ஓர் அனுபவம். ஒரு பெண் தைரியமாகப் பொது நிகழ்ச்சிகளுக்குப் போக முடியும் என்றால் அது எம்.ஜி.ஆரோடு மட்டும்தான் முடியும்.

இதை விட ஒரு நெகிழ்ச்சிகரமான சம்பவம் இதே நிகழ்ச்சியின்போது நடைபெற்றது. விழாவை முடித்துவிட்டு நாங்கள் வரும் வழியில் சிலர் நிறைய கழுதைகளை பொதி மூட்டைகளோடு சாலையில் நிற்க வைத்து வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். போலீஸ்காரர்கள் அவர்களைக் கலைந்து செல்லும்படி கூறியும் அவர்கள் கேட்கவில்லை. வண்டிகள் சாலையில் நிற்பதற்கான காரணத்தை அறிய எம்.ஜி.ஆரும் காரிலிருந்து இறங்கி, அவர்களிடம் சென்று காரணத்தைக் கேட்டபோது அவர்கள், ‘‘தலைவரே, உங்களை தமுக்கம் மைதானத்தில் பார்க்க முடியவில்லை. வாத்தியாரே, உங்கள் பேச்சை எங்களால் கேட்க முடியவில்ல’’ என்று கூறினார்கள்.

அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு, ‘‘இங்கு நான் மட்டும் இல்லை, கலைவாணர், பாலையா போன்றவர்களும் கூட இருக்கிறார்கள். நீங்கள் அனைவரையும் இப்போதே, இங்கேயே பார்க்கலாம்’’ என்று சொல்லிவிட்டு, அனைவரின் கார்களிலும் உள்ள லைட்டை போடும்படி கூறினார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் எங்கள் அத்தனை பேரையும் பார்த்துவிட்டு விடைகொடுத்து அனுப்பினர். அந்த நிகழ்ச்சியை நிச்சயமாக என்னால் மறக்கவே முடியாது.

-நடிகை சச்சு நேர்காணல்

நன்றி: கல்கி இணைய இதழ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button