தமிழ் என்றும் அமிழ்தே/அழகிய சிறகுகளை உடைய தும்பியே, ஒன்று கூறுவேன்

தமிழ் என்றும் அமிழ்தே
குறுந்தொழியின் இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் தும்பிசேர்க் கீரனார்.
” அம்ம வாழியோ வணிச்சிறைத் தும்பி
நன்மொழிக் கச்சமில்லை யவர் நாட்
டண்ண னெடுவரைச் சேறி யாயிற்
கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினைத்
துளரெறி நுண்டு கட் களைஞர் தங்கை
தமரிற்றீரா ளேன்மோ வரசர்
நிரை செல னுண்டோல் போலப்
பிரசந் தூங்கு மலை கிழ வோர்க்கே “.
தலைவன் வரைவு நீட்டித்தானாக அவன் சிறைபுறத்தே நிற்குங்கால் தோழி, தும்பியை நோக்கி கூறுவாளாகி, “தலைவி இன்னும் தன் வீட்டிலே இருக்கின்றாள் என என்று சொல்வாயாக என்பது போல் பாடல் அமைந்துள்ளது.

/ கேட்பாயாக:
நல்ல மொழிகளை ஒருவர் பால் கூறுந் திறத்தில் அச்சமில்லை : அத் தலைவருடைய நாட்டில் உள்ள தலைமையை உடைய உயர்ந்த மலைக்குச் செல்வாயாயின் அரசர்களது வரிசையாகச் செல்லுதலையுடைய நுண்ணிய கேடகங்களை போல தேனடைகள் தொங்குகின்ற மலையை உடைய தலைவரிடத்தில் கடமை மான்கள் நெருங்கிய தோட்டத்தில் உள்ள அழகிய சிறு தினையினிடத்தே களைக்கொட்டை எறிவதினால் உண்டாகிய நுண்ணிய புழுதியை யுடைய களையெடுப்பாரு டைய தங்கையாகிய தலைவி தன் சுற்றத்தாருடன் வீட்டில் இருக்கின்றாய் என்ற தகவலை தலைவனிடம் கூறுவாயாக.
என தும்பிடம் கூறி தூது விடுகிறாள் தலைவியின் தோழி.
