காதல் நோயால்
எரிந்திருக்கப் போவதில்லை இந்த மேனி
தமிழ் என்றும் அமிழ்தே – )
சங்கத்தமிழ் என்னும் நூலில், ஒரு குறுந்தொகைப் பாடலுக்கு கலைஞர் அய்யா எழுதிய முன்னுரையை பார்க்கலாம் முன்னே
”குறுந்தொகை”பாடல் அதன் உரையும் பார்க்கலாம் பின்னே.
கண்ணல்லவோ, கனியல்லவோ – எழுதாத பண்ணல்லவோ- என் நெஞ்சம்,
விண்ணல்லவோ! அதில் நீ வெண்ணிலவல்லவோ! என்றென்னை
அழைத்திட்ட போது, அவள் வடித்திட்ட வார்த்தைகளோ: அருவி தவழ்ச்சோலை அழகு மலர் கூட்டம்!
புதுச்சுவையை இதழுக்கு அளித்த போது,புவி முழுதும் தலைகீழாய்க் சுழலக் கண்டேன்.
உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உன்னை “இச்”சென்ற ஒலியோடு உதட்டால் சுவைக்க தடையெ ன்று இருக்கலாமா? அன்பே!
அந்தப் படை முகத்து பெருவீரன் பேச்சுக்குப்
பதில் பேச்சுப் பேசவில்லை நானும்!
அதனால் பஞ்சு பஞ்சாய் போனதுவே மஞ்சம்!
“இகல்”என்றால் “பகை” என்று பொருளாம்:
பகல் வந்தால் நமக்கு இகல் தானே அன்று!
“அகல்விளைக்கே! ஆருயிரே! புகல்வது கேள்: பூங்குயிலே!
போர் முனையில் வில், வேல்,வாள் எனும் ஏர்பூட்டி வெற்றி விளைச்சல் நடத்திவிட்டு
வாடை நாள் தொடங்கும் முன்னர் வடிவழகே!
ஓடை மலர் உனைக் காண ஓடி வருகின்றேன்” – என
நாள் குறித்து நான் மகிழ உறுதிமொழி வாள் மீது ஆணையிட்டு அடித்துச் சொன்னார்.
“நாக்கு நுனியிரண்டும் பிணைந்து மீண்ட பின்னர் வாக்குத் தவறாதீர் அத்தான்” என்று
கண்ணிரண்டின் கடை விழியும் மின்னுகின்ற துளிகளுடன்- அவனை
வழியனுப்பி வைத்த காட்சிக்கு: வான் பிறை போல் வடுக்களாய் நிலைத்து விட்ட அவன் நகக்குறியே சாட்சி!
சாட்சிகள் இத்தனை இருந்தென்ன: சத்தியம் அத்தனை செய்தென்ன:
கோடையில் இளநீர் போன்றவளை கூடிக் களித்திட்ட கோமகனும்,
வாடை நாள் வந்தும் வரவில்லை – அவளோ அழுது புலம்புகிறாள்
பிரிந்திருக்க அவன் நாள் குடித்த போதே,பிடிவாதமாய் மறுத்துரைத்துத் தடுத்திருந்தால்:
காதல் நோயால்
எரிந்திருக்கப் போவதில்லை இந்த மேனி- அது தெரிந்திருக்க வேண்டாமோ அப்போதே என் கண்களுக்கு?
இவ்வாறு
தங்கச் சிலையாள் தன் கண்கள் சினந்ததை சங்கத் தமிழாய் இங்கே காண்போம்
” நாண்இல மன்ற எம் கண்ணே- நாள் நேர்பு
சினைப் பசும் பாம்பின் சூல் முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண்ணுறை அழிதுளி தலைஇய
தன்வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே “..
இந்தக் குறுந்தொகை பாடலை இயற்றியவர்:
புலவர் கழார்க் கீரன் எயிற்றிஅவர்கள்.
இப்பாடலின் பொருள்” சங்கத் தமிழ்” கலைஞர் அய்யா எழுதிய உரையிலிருந்து.
விழியிரண்டுக்கும் வெட்கமில்லை என்பேன்
விரல் விட்டு நாள் எண்ணி வரும் வேளைகுறித்து – அவன் விடை கேட்டபோது
சரியென்று சொல்லி விட்டு: இன்று – இமயகிரி விட்டு வழிகின்ற நதி போல அழுதென்ன பயன்?
குறித்த நாளுக்கு வருவேன் என்றும் – குளிர் வருத்தும்
வேளையில் கூடியிருப்பேன் என்றும் – நீரில்
பதித்த வார்த்தைகள் நிற்காததாலே –
பிரிவில் கனத்தது நெஞ்சம்!
கருக்கொண்ட பச்சை பாம்பின் உடல் போன்று- பருத்த கணுக்கொண்ட கரும்பின் அரும்பு மடல் அவிழ
துகில் போல வானமங்கையின் மேலாடும் முகில் கூட்ட மழைத்துளிகள் படைக்கின்ற
வாடையெனும் குளிர்காற்றால் வாடுகின்றேன் –
அவன் அருகிருந்தால் வெப்பம் மூளும்
அவ்வாறு
இல்லாமல் அவன் பிரிந்திருப்பதற்கு என் பொல்லாத கண்களே விடையளித்தன அன்று!
நில்லாத அருவி போல அழுவதேனோ இன்று?
கல்லாத கண்களே!
கவிழ்ந்திடுக நாணத்தால் பூமி நோக்கி”
மொழியழகி – விழியழகி-
முத்துநகைப் பேரழகி பொழிலழகை வெல்லுகின்ற புவியழகி:
அழுதழுது முகம் வீங்கியதால் விழுதனைய நீர் இறங்கும் கன்னத்தில் கைவைத்துக்
கண்களே! நாணம் கொள்க எனக் கடுமையாய்ச் சொல் உதிர்த்த நிகழ்ச்சிக்குக்
கவிதை வடித்திட்ட புலவர் நெஞ்சம் கற்பனையின்
ஊற்றன்றோ!
செந்தமிழின் மணம் பரப்பும் இளம் தென்றல் காற்றன்றோ.
