தஞ்சை ப்ரகாஷ்

தஞ்சை வட்டார எழுத்தாளர்கள் என அறியப்பட்ட ஜாம்பவான்கள் எவருக்கும் இல்லாத வரலாற்றுணர்வைக் கொண்டவர் ப்ரகாஷ். தஞ்சை மண்ணில் பதிந்த அத்தனை கால்தடங்களையும் தன் தீட்சண்யமிக்க கண்களால் கண்டவரும் இம்மண்ணின் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய குதிரைகளின் குளம்படிகளையும் பெண்களின் இறுதிக்கதறல்களையும் பீரங்கிச் சத்தங்களையும் செவிகொடுத்துக் கேட்டவர் ப்ரகாஷ்.அவர் பறக்கத்துவங்கும்போதே காலத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
அவர் ஒரு தனிமனிதராக இலக்கிய உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளம். நிறைய மொழிகளைக் கற்றுக் கொண்டவர். இலக்கியவாதிகள் சந்திப்புக்கென்றே தஞ்சையில் ‘யுவர் மெஸ்’ என்ற உணவு விடுதியை நடத்தியவர். பல சிறுபத்திரிகைகளையும் நடத்தியவர். ‘ஒளிவட்டம்’, ‘சும்மா இலக்கியக் கும்பல்’, ‘கதைசொல்லிகள்’, ‘தளி’, ‘தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை’, ‘தனிமுதலி’, ‘தாரி’, ‘கூடுசாலை’ என ஏராளமான இலக்கிய அமைப்புகளை நடத்தினார் ப்ரகாஷ் .
ப்ரகாஷ் நிறைய இதழ்களை நடத்தியிருக்கிறார். இதழ்களையும் ஓர் இயக்கம்போலவே நடத்துவார். இதழ்களின் செலவுக்கென எவரிடமும் போய் நிற்க மாட்டார். ‘குயுக்தம்’ இதழின் இரண்டாவது அட்டையில் கொட்டை எழுத்தில் இப்படி அறிவிப்பு இருக்கும்: “நீங்கள் துணிச்சல் மிகுந்த கலைஞரா? உங்கள் படைப்புகளை பத்திரிகைகள், புத்தக நிலையங்கள், பண்டித, புலவ, வித்வ சிரோன்மணிகள் மறுக்கின்றனரா? இதோ, குயுக்தம் அதற்கென வெளியிடக் காத்திருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். யாருடைய எழுத்தும் எந்தப் புரட்சியையும் எந்தக் காலத்திலும் செய்ததில்லை. செய்வோம் நாம். மறுப்பவர்களை மறுப்பதே அடுத்த கட்டத்துக்கு நம்மைக் கொண்டு செல்லும். மறுப்போம், எதிர்ப்போம். எந்தத் தலையாட்டி மாடுகளுக்கும் நாம் துணை அல்ல. குயுக்தமாய் தவறு செய்வதில்லை. ஜெயிப்போம்!”
அவரைப்பற்றி விகடன் இதழில் வெ.நீலகண்டனுக்கு அளித்த நேர்கணலில், “எந்த இழப்பும் அவரைப் பாதிக்காது. இந்த வீடு மட்டும்தான் மிச்சம். தொடக்கத்துல அவரைப் புரிஞ்சுக்கிறதே கஷ்டமா இருந்துச்சு. அதுக்கப்புறம் அவர் போக்குல விட்டுட்டேன்.
எப்பவும் இந்த வீட்டுல ஏதாவது ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருக்கும். அவர் இறந்த பிறகு என்னால இந்த அமைதியைத் தாங்க முடியலே…ரொம்பச் சிரமப்பட்டேன். காலப்போக்குல பழகிடுச்சு. பல நேரங்கள்ல வீட்டுல விளக்குகளைக்கூட போடத் தோணாது. இருட்டும் அமைதியும் பழகிடுச்சு. அவரோட மூக்குக் கண்ணாடியை மட்டும் எப்பவும் என் கைக்குப் பக்கத்துல வெச்சிருப்பேன். அவரே கூட இருக்கிற மாதிரி தோணும்.
சிகரெட், தண்ணினு எந்தக் கெட்டப் பழக்கமும் அவருக்கு இல்லை. எந்தச் செலவும் பண்ணிக்க மாட்டார். நல்லா சமைப்பார். மீன் பிரியாணி, இறால் பிரியாணி ரொம்ப ருசியா செய்வார். உருண்டைக் குழம்பு பிரமாதமா வைப்பார். ஏதாவது ஸ்பெஷலா சமைச்சார்னா, நண்பர்களுக்கெல்லாம் டிபன் கேரியர்ல எடுத்துக்கிட்டுப் போய்க் கொடுப்பார். அவர் எழுதியதைவிட, அவருடைய கதைகளைப் பதிப்பித்ததைவிட, நண்பர்களை எழுதத் தூண்டி அவற்றை இவருடைய முனைப்பிலேயே புத்தகங்களாக்குவார். அதனால்தான் இன்றைக்கும் அவருடைய பெயரை எங்கோ, யாரோ உச்சரிச்சுக்கிட்டே இருக்காங்க…” என்று தன் கணவரைப் பற்றிய நினைவுகளைப் பல்வேறு உணர்வுகளினூடாகப் பகிர்ந்துகொண்டார் மங்கையற்கரசி.
அவரை ஒரு செக்ஸ் எழுத்தாளர் என்று இலக்கிய உலகம் புறக்கணித்தது. காமத்தைப் பிரதான பாடுபொருளாக எழுதியது உண்மைதான். அதில் சில கதைகளில் கலை வெற்றியும் பலவற்றில் தோல்வியும் அடைந்திருக்கிரார். ஆனால் எல்லா எழுத்தாளர்களும் அந்த விஷயத்தில் நாசூக்கான எல்லையில் நின்றுவிட ப்ரகாஷ் இன்னும் ஆழமாக அதனுள் ஊடுறுவிச் சென்றார். சமூக வாழ்வு என்கிற முழுமையின் பகுதியாக காமத்தை வைத்துப் பார்க்காமல் அதையே முழுமைபோலச் சித்தரித்தார் என்று அவரை விமர்சிக்கலாம். அப்படி அவரை விமர்சிக்கவும் வேண்டும். பல கதைகள் ஆண்மையப்பார்வை கொண்டிருந்தன என்றும் விமர்சிக்கலாம்.
ஆனால் காமம் தாண்டி, பன்முகக் கலாச்சார அடையாளங்களைக் கொண்ட தஞ்சை மண்ணை அதன் அத்தனை அழகுகளோடும் சிதைவுகளோடும் முழுமையாகக் கண்டுணர்ந்த முதல் தமிழ்ப்படைப்பாளி அவர்தான் என்பது உண்மையிலும் உண்மை. அதை எவரும் மறுக்க முடியாது.
-ச.தமிழ்ச்செல்வன்
நன்றி: விகடன்