கட்டுரை

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டின் இடைத்தேர்தல்கள்!

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டின் இடைத்தேர்தல்கள்!

இடைத்தேர்தல் மீதான மதிப்பீடு என்பது மாறி, இப்போது எடைத்தேர்தல் என அழைக்கப்படுகிறது. இடைத்தேர்தல்களின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்கலாம்.

திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவை தொகுதி மற்றும் அடுத்து வந்த கோயம்புத்தூர் மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் வென்றது அதிமுகவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் திருப்பு முனையானது.

1989 சட்டமன்ற தேர்தலுக்கு பின், அதிமுக அணிகள் ஒன்றானது. சட்டமன்றம் கூடிய பின்பு தனியாக நடைபெற்ற மருங்காபுரி, மதுரை கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல், இடைத்தேர்தல் போலவே பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சியான அதிமுக வென்றது. ஆளும் கட்சியான திமுக தோல்வியடைந்தது. அது ஜெயலலிதாவின் தலைமைக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலோடு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் வென்றார். இப்போது நத்தம் விஸ்வநாதனாக அதிமுகவில் முக்கிய தலைவராக உருவாகியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதா டான்சி வழக்கால் பதவி இழந்தார். வழக்கில் வென்ற பின் 2002 ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் பதவியை ராஜினாமா செய்தார். ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வென்ற ஜெயலலிதா, மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். அதிமுக வேட்பாளரான ஜெ.ஜெயலலிதா 78,437 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் வைகை சேகர் 37,236 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 41,201.

2006 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் மறைவுக்கு பின் நடைபெற்ற மதுரை மத்தி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் , திமுகவின் சையத் கவுஷ் பாஷா 50,994 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் ராஜன் செல்லப்பா 19,909 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 31,085.

2007 ஆம் ஆண்டு, மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசின் ராஜேந்திரன் 60,933 வாக்குகளுடன் வென்றார். அதிமுகவின் எஸ்.ராஜு 29,818 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 31,115.

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் நடைபெற்ற திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் லதா அதியமான் 79,422 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் எம்.முத்து ராமலிங்கம் 40,156 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 39,266.

இந்த திருமங்கலம் இடைத்தேர்தல் தேசிய அளவில் பேசு பொருளானது. வாக்காளர்களுக்கு விருந்து, பரிசுப்பொருட்கள் என அமர்க்களப்படுத்தியது திருமங்கலம். இத்தேர்தலுக்கு பின் திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, திமுகவின் தென் மண்டல அமைப்பு செயலாளர், மதுரை எம்.பி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சர் என பொதுவாழ்வில் உச்சம் தொட வழி வகுத்தது திருமங்கலம்.

ஸ்ரீவைகுண்டம் , தொண்டாமுத்தூர், ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வென்றனர். பர்கூர், கம்பம், வந்தவாசி ,கம்பம், திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வென்றனர். பெண்ணாகரம் இடைத்தேர்தலில் திமுகவின் இன்பசேகரன் வென்று எம்.எல்.ஏ ஆனார். அதிமுக வேட்பாளர் டெபாசிட்டை இழந்தார். தொண்டாமுத்தூர் தொகுதியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி வென்றார்.

2014 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதலமைச்சர் பதவியை இழந்தார் ஜெ.ஜெயலலிதா. அதனையடுத்து நடைபெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி இடைதேர்தலில் அதிமுகவின் வளர்மதி 1,51,561 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ வாக சட்டமன்றம் சென்றார். திமுகவின் என்.ஆனந்த் 55,045 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 96,516.

வழக்கில் மேல்முறையீட்டில் வென்றார் ஜெயலலிதா. 2015 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா 1 லட்சத்து 60 ஆயிரத்து 432 வாக்குகள் பெற்று வென்றார். இந்திய கம்யூனிஸ்டின் மகேந்திரன் 9,710 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் மிக அதிக அளவாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 702 ஆக இருந்தது. தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியசத்துடன் வென்ற தேர்தல் இது.

2016 ஆம் ஆண்டு -திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வின் ஏ.கே.போஸ் 1,13 ஆயிரத்து 32 வாக்குகளை பெற்று எல்.எல்.ஏ வாக சட்டமன்றம் சென்றார் போஸ். திமுகவின் பி.சரவணன் 70,632 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 42,607.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு மறைந்தார். பின் ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் வென்றார். திமுக டெபாசிட் இழந்தது. அதிமுக டெபாசிட்டை தக்கவைத்து கொண்டது. வாக்கு வித்தியாசம் 40,707.

இப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு லட்சத்து ,10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 66,575 .

39 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார். தந்தை மகற்காற்றும் உதவி என்பதைப் போல, மறைந்த மகன் திருமகன் ஈ.வெ.ரா விட்டுச் சென்ற பணியை, அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடர இந்த பெரிய வாக்கு வித்தியாசம் உத்வேகம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button