அங்கீகாரம்

அங்கீகாரம்
——————-
*படைப்பாளன் மனத் திருப்திக காகத்தான் எழுத வேண்டும். அங்கீகாரத்திற்காக எழுதக் கூடாது* இப்படி ஒரு கருத்து சிலரிடம் உண்டு.. இப்படி கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
நாம் ஒரு கவிதை எழுதுகிறோம். ஒரு கதை எழுதுகிறோம். இதை நம்மைத் தவிர நண்பரிடமோ அல்லது இரண்டாவது ஒருவரிடமோ காட்டி * இது நல்லா இருக்கா ? * என்று கேட்கும் போதே அங்கே இரண்டாவது நபரின் அங்கீகாரம் நமக்கு தேவைப்படுகிறது.
இதழ்களுக்கு அனுப்புகிறோம். நூலாக வெளியிடுகிறோம். அதை *புத்தக வெளியீட்டு விழாவாக* வைத்து நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவரை விழாவுக்கு அழைக்கிறோம்..
பிரபல்யமானவரை யாரையாவது அழைத்து வெளியிடுகிறோம். இவை எதற்காக? அந்த நூலை பலர் வாங்குகிறார்கள் என்றால் மகிழ்கிறோம். நூல் மதிப்புரைக்காக நம் படைப்பை இதழ்களுக்கு அனுப்புகிறோம். அவற்றை முகநூலில் போடுகிறோம். எதற்காக?
இன்னும் புகழ் பெற்றவருக்கு அல்லது நண்பர்களுக்கு அனுப்பி , அவர்களை முகநூலில் எழுதும்படி வேண்டுகிறோம். எதற்காக?
ஓர் இதழில் நம் படைப்பு வெளி வந்து விட்டால் அதை எடுத்து முகநூலில் போடுகிறோம். எதற்காக?
விருதுகளுக்கு அனுப்புகிறோம். விருது பெற்றால் கொண்டாடுகிறோம்
*ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம் * என்பது ஒரு மாயையான சொல்லாடல்
இயற்கையாகவோ, மற்றவர் படைப்பை பார்த்தோ படைப்பாற்றலை வளர்த்தோ ஒரு படைப்பை உருவாக்குகிறோம். அது வெளி வர வேண்டும் என்ற ஆவலாதி ஏற்படுவதே அங்கீகாரத்தை நாடித்தான்.
ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதுகிறோம் என்றால் அந்த படைப்பை எழுதி பீரோ லாக்கரில் வைத்து பூட்டி வைத்து விடலாம். அல்லது * ஆகா நல்லா
எழுதி இருக்கிறோம்* என்ற ஆத்ம திருப்தி வந்தவுடன் அதை கிழித்து கூடையில் போட்டு விடலாமே. எதற்காக அவற்றை சேகரித்து வைக்க வேண்டும்..
அலைபேசியில் டைப் செய்து , திருப்தி வந்தவுடன் அதை அழித்து விடலாமே.. எதற்காக Save பண்ணி வைக்க வேண்டும்?
நம்மை தாண்டி அதை இரண்டாவது நபருக்கு கடத்தும் போதே நாம் ஏதோ ஒரு அங்கீகாரத்தை நாடித்தான்.
ஆத்ம திரு்ப்திக்காகத்தான் எழுதுகிறோம் என்ற கருத்து காற்றில் கவிதை எழுதுவது போல…
இது தான் என் தீர்க்கமான கருத்து .
——–
– ஜெயதேவன்