தமிழ் என்றும் அமிழ்தே -குறுந்தொகை/ புலவர் பரணர்

குறுந்தொகை
தமிழ் என்றும் அமிழ்தே –
குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் பரணர்
” குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்டவிருக்கை முடவன்
உட் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்குக் காதலர்
நல்கார் நயவாராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக்கினிதே”
இப்பாடலுக்கான பொருள் டாக்டர் கலைஞர் அய்யாவின் சங்கத் தமிழிலிருந்து சுவைபட இருப்பதை பதிவிடுகிறேன்.
பொருள் :நெஞ்சம் இனிக்கிறது – உன் பால் தஞ்சம் புகத் துடிக்கிறது!
வெஞ்சமரில் வெல்லும் உன் தடந் தோள் கண்டு அஞ்சும் பகைவர்: என பெரும் புலவர், கொஞ்சு தமிழில் உன் கொற்றம் வாழ்த்துதல் கேட்டு மிஞ்சுது காதல் :
அதனால் நெஞ்சம் இனிக்கிறது – உன் பால் தஞ்சம் புகத் துடிக்கிறது.
வஞ்சி எனக்கோர் வரம் தர வேண்டுமென கெஞ்சியுன்னைக் கேட்கின்றேன் – என்பால் எஞ்சியுள்ளது உயிர் ஒன்று தான்: எனினும் வஞ்சமின்றி வணங்குகிறேன் உனக்காகக் கண்ணா! – உன் மஞ்சத்து மயிலாக என்னை ஆக்கிடுக மணிவண்ணா!அதை நினைத்தாலே – கனவில் வந்து நீ என அணைத்தாலே:
நெஞ்சம் இனிக்கிறது
மலைச்சாரல் காட்டோரம் ஒரு நாள் – மனம் மயங்குகின்ற மாலை நேரம் சென்றேன். குலையாக பழம் தொங்குகின்ற மரத்தின் கிளையொன்றில் பெருந் தேன் கூடு கண்டேன். கிட்டாதோ தேன் துளிகள் என்று முற்றாக முடமான ஒருவன் அடிமரத்தின் வேரின் மேல் அமர்ந்து அகங்கையில் தேன் சொட்டுமென்று ஆவலாய் முகம் வைத்துக்கொண்டு அந்தோ: வெறுங்கையைச் சுவைத்துக்கொண்டிருந்தான்!
அவன் நிலை தான் என் நிலையோ கண்ணா?
‘ஆம்’என்று நீ சொல்லிவிட்டால் பெண் நான் முடவன் போல் செயல்படத் தான் வேண்டும் : உன் அருகில் வரமுடியாமல் ஏங்கத்தான் வேண்டும் ! எட்டாத பழமெனினும் எனக்கு நீ கிட்டிடுவாய் என்று தவம் கட்டாயம் இருக்கத்தான் வேண்டும் : உன் கரம்தனில் ஒரு நாள் தவழத் தான் வேண்டும் அதை நினைத்தாலே கனவில் வந்து நீ என்னை அணைத்தாலே:
நெஞ்சம் இனிக்கிறது
செய்த தவம் பலிக்கவில்லையெ னில் என் சிந்தை கவர்ந்திட்ட சிங்கம் நீ! என் மெய் தழுவி கிடக்கின்ற கற்பனையில் மிதந்திடுவேன் அதை எண்ணி மகிழும்போது என் நெஞ்சம் இனிக்கிறது உன் பால் தஞ்சம் புக துடிக்கிறது
