புகழ், துரோகம், போராட்டம், தனிமை

“புகழ், துரோகம், போராட்டம், தனிமை…” – நடிகை காஞ்சனா ஷேரிங்
“நல்லா வாழ்ந்த குடும்பம்தான். ஆனால், அப்பாவின் தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட அதிகமான கடன் சுமைகளும் பாரங்களும் என்மேல் விழுந்தன. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, இண்டியன் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸ் பணியில் இருந்தேன். அப்போதுதான் சினிமா வாய்ப்புகளும் தேடிவர, புகழுடன் நிறைவான பணமும் சம்பாதித்தேன். எல்லாக் கடன்களையும் அடைத்தேன்.
பெரிய இடங்கள் பலவற்றிலிருந்தும் என்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால், சொந்த உறவுகளுக்குள் இருந்த சிலரே அதையெல்லாம் தடுத்தார்கள். என் சினிமா வருமானம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. என் பணத்தை எனக்கே தராமல், மீண்டும் கடன் சுமைகளைத்தான் கொடுத்தார்கள். என் பெற்றோர்கூட அந்தச் சூழ்ச்சிகளை உணரவில்லை. நிம்மதியில்லாமல் இருந்தேன்.
‘மனசுக்குள்ள இவ்வளவு வேதனைகளை வெச்சுக்கிட்டு எப்படி மகிழ்ச்சியா நடிச்சே?’ன்னு பின்னாள்களில் பல ஜாம்பவான்கள் என்னிடம் கேட்டார்கள். நானே கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்பேன் என்று எம்.ஜி.ஆர், சிவாஜி, நடிகர் சங்கத்தினர் உட்பட பலரும் எதிர்பார்த்தார்கள். அப்படிச் செய்திருந்தால் உடனே தீர்வும் கிடைத்திருக்கும். ஆனால், குடும்ப விஷயம் பொதுவெளிக்கு வருவதை நான் விரும்பவில்லை. என்மேல் அன்புகொண்ட பிரபலங்கள் பலரும், ‘நல்ல பையன் யாரையாச்சும் காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டு மகிழ்ச்சியா இரு’ என்று சொன்னார்கள். அதற்கு என் மனம் பக்குவப்படவில்லை. ஒருகட்டத்தில் அதுதான் சரியான தீர்வு என உணரும்போது எனக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டது.
உரிய பருவத்தைத் தாண்டிக் கிடைக்கும் விஷயங்கள் பயன்தராது. குடும்பத்திலும் பிரச்னைகள் குறையவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போய் வீட்டிலிருந்து வெளியேறி பெங்களூரில் தங்கை வீட்டுக்குச் சென்றேன். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகமாகி, கோயில் கோயிலாகச் சுற்றினேன். மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், சட்டப் போராட்டத்தில் அதிக கவனம் செலுத்தினேன். வெற்றி கிடைத்தாலும் ஓரளவுக்குத்தான் சொத்துகள் கிடைத்தன. அதில் பல கோடி ரூபாய் சொத்துகளைத் திருப்பதி கோயிலுக்கு தானம் செய்துவிட்டோம்.
இப்போது என் தங்கையுடன் சென்னையில் வசிக்கிறேன். வீடும் என் அறையும்தான் எனக்கான உலகம். இனி வெளியுலகத்தோடு ஒன்றி இருக்கவோ, வெளியிடங்களுக்குப் போகவோ விருப்பமில்லை.
ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச், ரஷ்யன் உட்பட எட்டு மொழிகள் எனக்குத் தெரியும். எனவே, பல மொழி ஆன்மிகப் புத்தகங்கள் படிப்பது, இசை கற்றுக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என்று என் அன்றாடப் பணிகளுக்கு நேரம் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இதனால் தனிமை வாழ்க்கை நிறைவையும் நிம்மதியையும் தருகிறது!”
நன்றி: சினிமா விகடன்