கசடறல் (To err and correct)

அடித்து எழுதுங்கள்
குழந்தைகளே
அழித்து எழுதுங்கள்
தவறெனத் தெரிந்தவுடன்
திருத்தி எழுதுங்கள்
தவறுகள் நிரம்ப வருமென்று
எழுதத் தயங்கி ஒதுங்காதீர்
தவற்றைச் சுட்டிக் காட்டியதும்
சரியாய் எழுதி வெல்லுங்கள்
முதல் முறை எழுதும்போதே
தவறின்றி எழுதிய தெல்லாம்
மனதில் தங்காது
தவறாய் எழுதிக் குட்டுப் பட்டுத்
திருத்திக் கொண்டால்
எளிதில் மறவாது
பிறரும் தவறுகள் செய்யலாம்
ஒருமுறை பரிவாய்ச் சொல்லுங்கள்
பெரிதாய் அதையே முன்வைத்து
பலமுறை குறையாய்ப் பேசாதீர்
உலகம் வியக்கும் உண்மைகள் கண்ட
அறிவியல் அறிஞர் பல்லோரும்
தவறு செய்து சருக்கிய பின்பு
திரும்ப முயன்று வென்றவரே
தவற்றை ஒப்புக் கொள்ளாமல்
படிப்பினை பெற்றுத் திருந்தாமல்
தவற்றில் உழல்வார் சிலருண்டு
அவர்களை விட்டு விலகுங்கள்
அறியாத் தவறுகள் குறையில்லை
தவறி விழுவது பிழையில்லை
விழுந்த பின்னர் துவளாமல்
எழுந்து நிமிர்வதே வெற்றி
கவிதை .வெ.பெருமாள்சாமி