றாஜா ஸார்”

றாஜா ஸார்”
இளையராஜாவை “ராஜா ஸார்” என்று சொல்வோர் பலர் உண்டு. ஆனால் “றாஜா ஸார்” என்று வித்தியாசமாக விளிப்பது ஒரே ஒருவர்தான்.
அது ஜென்ஸிதான்.
அதென்னவோ ஜென்ஸிக்கு தமிழின் சின்ன “ர” வை விட பெரிய ‘ற ’ மீது ரொம்ப இஷ்டம்.
“ஆயிறம் மலற்களே, மலறுங்கள்…”
“இறு பறவைகள் மலை முழுவதும்…”
ஜென்ஸி பாடிய அந்த கால கட்டத்தில் “றாஜா ஸார்” அவருக்கு கொடுத்ததெல்லாம்
“தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்”கள்தான்.
“ஆயிரம் மலர்களே, மலருங்கள்”
“காதல் ஓவியம்
பாடும் காவியம்”
“இரு பறவைகள் மலை முழுவதும்…”
“என்னுயிர் நீ தானே
உன்னுயிர் நான் தானே”
“அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை”
“என் வானிலே ஒரே வெண்ணிலா”
“தம் தனனம் என தாளம் வரும்”
“இதயம் போகுதே”
சரி. இது எல்லாவற்றையும் விட்டு விட்டு எங்கே போனார் ஜென்ஸி ?
சொல்கிறார் ஜென்ஸி டீச்சர் : “எனக்கு அப்போ மியூசிக் டீச்சர் வேலை கிடைச்சது. அதனால அந்த வேலைய எடுக்க வேண்டி இருந்தது.
இன்னும் அந்த நேரம் சுசீலாம்மா, ஜானகியம்மா, வாணியம்மா நிறையப் பேர் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போ எனக்கு எவ்ளோ வாய்ப்புக் கிடைக்கும், எப்போது போகும்னு தெரியல. அப்போது கவர்ன்மெண்ட் டீச்சர் வேலை கிடைச்சதும் பெற்றோர்கள் அதை விடவேண்டாம்னு சொன்னாங்க. அதால சினிமாவுல பாட முடியாம போச்சு.”
சரி. இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன சொன்னார் இளையராஜா ?
“இந்த ஃபீல்ட்ல உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.
டீச்சர் வேலையெல்லாம் எதுக்கு? அதிலே வரும் ஒரு மாதச் சம்பளத்தை இங்கே ஒரு பாட்டுப் பாடினாலே வாங்கிவிடலாமே” என்று சொல்லியிருக்கிறார் இளையராஜா.
“அந்த வயசில எனக்கு எது சரின்னு முடிவெடுக்கிற முதிர்ச்சி இல்லை. டீச்சர் வேலையில சேர்ந்துக்கலாம். அப்பப்போ ரெக்கார்டிங்ஸ் வரும்போது லீவ் எடுத்துட்டு இங்கே வந்து பாடலாம்னு நினைச்சேன்.”
ஆனால் ஜென்ஸி நினைத்தது போல நடக்கவில்லை. தொடர்ந்து அவரால் பாட முடியவில்லை. அல்லது யாரும் அவரை அழைக்கவில்லை.
ஜென்ஸி எடுத்த அந்த முடிவு சரியா தவறா ?
பொதுவாக தவறான முடிவு எடுக்கும் நம்மில் பலரும் அதற்கான பழியை யார் தலையில் போடலாம் என்பதில் தெளிவான முடிவு எடுப்பார்கள்.
ஆனால் ஜென்ஸி யார் மீதும் பழி போடாமல், தெளிவாக சொல்கிறார் :
“நா(ஞா)ன் எடுத்த முடிவு தவறாகவே இருந்தாலும் சரி. அதன் பலனை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.”
இப்போதும் ஜென்ஸியின் அந்த மலையாள மண் வாசனைக் குரல் மனதுக்குள் ஒலிக்கிறது.
“கோடையில் மழை வரும்
வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ”
ஆம். விதி ஒருபோதும் மாறாது.
நான் சொல்வது
சந்தோஷ விதி.
(law of happiness).
நாம் இந்த பிரபஞ்சத்துக்கு எதை கொடுக்கிறோமோ,
அதையே இந்த பிரபஞ்சம் நமக்கு திரும்ப கொடுக்கிறது.
ஜென்ஸி இந்த பிரபஞ்சத்துக்கு தன் குரலின் இனிமையை கொடுத்தார்.
இந்த பிரபஞ்சம் அதற்கு ஈடாக இனிமையான இல்லற வாழ்க்கையை அவருக்கு கொடுத்திருக்கிறது.
1983 இல் தாமஸ் என்ற மலையாளத் தொழிலதிபரை மணந்தார் ஜென்ஸி.
“காலதேவன் சொல்லும்
பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ
யார் சேர்த்ததோ”
இப்போது நித்தின் என்ற அன்பு மகனோடும் நூபியா என்ற அருமை மகளோடும் இனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஜென்ஸி.
மே 13.
இன்று ஜென்ஸி என்ற
அந்த தேன் குரல் தேவதையின் பிறந்த நாள்.
வாழ்க வாழ்க !
“ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்.”
(மீள் பதிவு)
