பெண்ணுரிமையை முதலில் வீட்டில் செயல்படுத்தியிருக்கிறேன்.

அன்னையாக, ஆசிரியராக, காவலராக, காக்கும் மருத்துவராக, தொழில் முனைவராக தனக்கு கிடைத்த அனைத்து பொறுப்புகளையும் திறம்பட செய்து, தாங்கள் காலடி எடுத்து வைத்த அத்தனை துறைகளிலும் காலடித்தடங்களை ஆழப்பதித்து வருகின்றனர் 21 ஆம் நூற்றாண்டின் பெண்கள்.
பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு, சமூக எதிர்ப்புகளை கடந்து அனைத்து துறைகளையும் கற்றுத்தேர்ந்து இன்று வாழவே முடியாது என்ற சிலரது எண்ணங்களை தவிடுபொடியாக்கு முன்னோடிகளாக திகழ்ந்து வருகின்றனர் பெண்கள்.
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண் சாதனையாளர்களை கௌரவப்படுத்தி பெருமை கொள்கிறது நியூஸ் 18 உள்ளூர் செய்தித்தளம். அந்த வகையில் ஆண்கள், அரசியல்வாதிகள், காவலர்கள், கலவரம், போராட்டம், ஆர்ப்பாட்டம் என களேபரம் சுழந்திருக்கும் களத்தில் நின்று சாதித்து வருகிறார் கோவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் சுகன்யா.
பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத ஊடகத் துறையில் கடந்த 2012ம் ஆண்டு நுழைந்த இந்த பெண், ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையை துவங்கியுள்ளார். வெயில், மழை இயற்கைச்சீற்றம், தீவிரவாத தாக்குதல்கள் என எந்த சோதனை வந்தாலும் தனது கேமிராவை எடுத்து களத்தின் எதார்த்தத்தை பதிவு மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறார் இவர்.
தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் சுகன்யா கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் விஷூவல் கம்யூனிகேசன் இளங்கலை பட்டம் முடித்தார். குடும்ப சூழலை கடந்து ஊடகத்துறையின் மீது உள்ள ஆர்வம் காரணமாக கேமிராவை பிடித்த சுகன்யா இன்று வரை ஓயவில்லை.
ஆண்கள் அதிகமாக பணியாற்றும் துறையை எப்படி எதிர்கொள்ள முடிகிறது..? இதில் சிரமங்கள் உள்ளதா? இல்லையா? என்று கேட்டால், என்னுடன் எனது கேமிராவும் அதனுடன் டிரைபாடும் உள்ளது. இவை இரண்டும் எனக்கு என்னுடனேயே யாரோ துணைக்கு இருப்பதைப்போன்ற உணர்வைக் கொடுக்கின்றன என்று நெகிழ்கிறார்.
தனது பயணம் குறித்து சுகன்யா கூறுகையில், இந்த துறைக்கு வரும் போது என்னால் முடியுமா என்பது போன்ற பல கேள்விகளை இந்த சமூகத்தினர் கேட்டனர். நான் இப்போது செயலில் காட்டி வருகிறேன். தொடர்ந்து பயணிப்பதை பார்த்து தற்போது உற்சாகப்படுத்தி வருகின்றனர். பெண்ணுரிமையை முதலில் வீட்டில் செயல்படுத்தியிருக்கிறேன். இதனை எனக்குக் கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன் என்றார்.
மேலும் எனது செய்திகள் மூலமாக நலிவடைந்த ஒருவருக்கு உதவிகளும், நலத்திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறேன். எனது முகத்தை காட்டாமல் மக்களுக்கு உதவும் தளமாக ஊடகத்துறையை கருதுகிறேன். அதன்வழியே நடக்கிறேன். கேமிராவும், டிரைபாடும் எனது நண்பர்களாக உள்ளனர். நலிந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது தற்போதைய இலக்கு என பெருமையாக கூறினார் சுகன்யா.
நன்றி: நியூஸ் 18 தமிழ்