அலெக்சாண்டரும் இந்திய யோகியும்

அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தபோது அவர் இந்தியர்கள் மிகுந்த வீரமுடையவர்களாகவும் பயம் என்பதையே அறியாதவர்களாயும் இருப்பதை கண்டார். அவர்களுடன் நட்புறவுடன் பழகினார்.
அவர் தன்னுடைய நாட்டுக்கு திரும்ப வேண்டிய தருணத்தில், அவரது நாட்டு மக்கள் அவரிடம் இந்திய யோகி ஒருவரை கொண்டுவந்து அவரது அறிவுரைகளையும் ஆசியையும் வேண்டி பெறுவதற்கு ஆவலாய் இருப்பதை நினைவு கூர்ந்தார். அத்தகைய யோகிகள் காட்டில் வாழ்வதை கேள்விப்பட்டு அருகிலிருந்த அடர்ந்த கானகத்திற்கு பயணம் செய்தார். ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் ஒரு யோகி அமைதியாக ஆழ்ந்த தியானத்தில் ஒளியுடன் விளங்கி அமர்ந்திருப்பதை கண்டார். உடனே அவர் அருகில் சென்று பொறுமையுடன் அந்த யோகி கண் திறக்கும் வரை காத்து நின்றார். யோகி கண் விழித்தவுடன் அவரை பணிவுடன் வணங்கி, அந்த யோகிக்கு என்னவெல்லாம் தேவையோ அல்லது எதையெல்லாம் விரும்புகிறாரோ, அவை அனைத்தையும் அவருக்கு கொடுப்பதாக கூறி, தன் நாட்டு மக்கள் பார்க்க விரும்புவதால் தன்னுடன் கிரீஸ் நாட்டுக்கு வருமாறு அழைத்தார். யோகியோ தனக்கு தேவை என்று எதுவும் இல்லை என்றும், இங்கேயே ஆனந்தமாக இருப்பதாகவும் அமைதியாக கூறி அலெக்சாண்டரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். தன் வாழ்வில் முதன் முறையாக தன் கோரிக்கை ஒருவரால் நிராகரிக்கப்படுவதை தாங்காமல் அலெக்சாண்டர் மிகுந்த கோபம் கொண்டு தன் உடைவாளை எடுத்து உயர்த்தி “நீங்கள் யாரிடம் பேசிக்கொண்டிருக்கீர்கள் என்று தெரியுமா? நான்தான் பேரரசன் அலெக்சாண்டர். நான் சொல்வதை கேட்காவிட்டால் உங்களை துண்டு துண்டாக வெட்டி கொன்று விடுவேன்” என்று முழங்கினார். யோகி அலெக்சாண்டரின் மிரட்டலை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் “நீங்கள் என்னை கொல்ல இயலாது. என் உடலை வேண்டுமானால் கொல்ல முடியும். என் உடல் என்பது நான் உடுத்தியிருக்கும் உடை போன்றது. நான் உடல் அல்ல. அதற்குள்ளும் மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் இருப்பவன்.
நீங்கள் உங்களை அரசன் என்கிறீர்கள். உண்மையில் நீங்கள் யார் தெரியுமா? என்னுடைய அடிமைக்கு அடிமை’. என்று உரைத்தார் .
இந்த பதிலை சற்றும் எதிர்பாராத அலெக்சாண்டர் திகிலுடன் “அது எப்படி உங்கள் அடிமைக்கு நான் அடிமையாக இருக்க முடியும்? என்று வினவினார். யோகி சாந்தமாக அன்புடன் விவரித்தார் “நான் கோபத்தை வென்று அதை என் அடிமையாக்கி விட்டேன். ஆனால் நீயோ கோபத்திற்கு ஆளாகி எளிதில் அடிபணிந்து அடிமை ஆவதை பார்க்கிறேன். கோபம் என் அடிமை. நீயோ கோபத்தின் அடிமை. எனவே நீ என் அடிமையின் அடிமை” என்று விளக்கவும், அலெக்சாண்டர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்தினார்.
நீங்கள் எதையும் எவரிடமும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எதிர்பார்க்காமல் இருக்கும் இடத்தில் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தால், கோபத்தை அது உங்களிடம் இருந்தால்தானே கட்டுப்படுத்த? அது இருந்த இடம் தெரியாமல் ஓடியே போய்விடும்.
இணையத்தில் இருந்து எடுத்தது