தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிறந்த தினம்

இன்று தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிறந்த தினம் .
நாடக நடிகனாக உருவாகி திரையுலகில் பிரவேசித்து, தமிழ் சினிமா வரலாற்றில் தன் மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடற் திறனாலும், தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களினாலும் தனி அத்தியாயத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அக்கால ரசிகர்கள் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன்
தியாகராஜ பாகவதர் மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை), விசுவகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் 1910-ம் ஆண்டும் மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி- மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார்.. சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக்கச்சேரி எங்கு நடைபெற்றாலும் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.
எப்.ஜி. நடேச அய்யர் தமது திருச்சி ரசிக ரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார்
. கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற அதே நேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார். கர்நாடக இசையில் தேர்ச்சி ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றதும் தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். பின்னர் மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன.
கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணா மூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு ‘பாகவதர்’ என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் ‘பாகவதர்’ என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.
இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும்.
நாடக நடிகராக 1926-ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் ‘பவளக்கொடி’ நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் ‘பவளக்கொடி’ வேடமேற்று பெண் வேடத்தில் டி.பி.ராமகிருஷ்ணன் நடித்தார்.
பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் ‘பவளக்கொடி’ வேடத்தில் எஸ். டி. சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர். 1934-ல் அவர்கள் நடித்த ‘பவளக்கொடி’ நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார்
. தமிழ் நாடெங்கும் தியேட்டர்களில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது.
சுப்புலெட்சமி – பாகவதரோடு ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பாகவதர் – சுப்புலெட்சுமி ஜோடி பிரபலமாயிற்று. தமிழகம் தாண்டி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கும் பாகவதர் புகழ் பரவியது. பாகவதரின் நவீன சாரங்கதாரா படப்பாடல்கள் முதன்முதலாக கிராமோஃபோனில் பதிவு செய்யப்பட்டன
.
1944-ல் வெளியான இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றைய கால கட்டத்தில் பெற்றது.
அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936,- பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திரு நீலகண்டர் (1939), அசோக்குமார் (1941), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக வெளிவந்தன.
எம்.கே.டி யின் பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். அவற்றில் சில, ”மன்மத லீலையை வென்றார் உண்டோ, தீன கருணாகரனே நடராஜா, ராஜன் மஹராஜன், வதனமே சந்திரபிம்பமோ” உன்னை அல்லால்,
நீலகண்டா,
அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்),
சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன்,
ஞானக்கண் இருந்திடும் போதினிலே,
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
போன்ற பல பாடல்கள் இவரின் புகழுக்கு சான்றாக உள்ளன.
தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய எம்.கே.டி.யின் பாடல்கள், ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது- அவரது சிகை அலங்காரம், “பாகவதர் கிராப்” என்று புகழ்பெற்றது- அந்தக்கால இளைஞர்கள் பலர் பாகவதரைத் தழுவி சிகை அலங்காரம் அமைத்துக் கொண்டனர்- பாகவதரின் தாக்கம் அந்தகால சினிமா ரசிகர்களை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
அவர் நடித்த கடைசி திரைப்படம் சிவகாமி.
இவர் நடித்த திரைப்படங்கள்: பவளக்கொடி (1934) சாரங்கதா (1935) சத்தியசீலன் (1936) சிந்தாமணி (1937) அம்பிகாபதி (1937) திருநீலகண்டர் (1939) அசோக்குமார் (1941) சிவகவி (1943) ஹரிதாஸ் (1944) ராஜமுக்தி (1948) அமரகவி (1952) சியாமளா (1952) புதுவாழ்வு (1957) சிவகாமி (1959)