தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகையின் இப்பாடலை இயற்றியவர் : புலவர் குப்பைக் கோழியார்

குறுந்தொகையின் இப்பாடலை இயற்றியவர் : புலவர் குப்பைக் கோழியார்
: தமிழ் என்றும் அமிழ்தே –
குறுந்தொகையின் இப்பாடலை இயற்றியவர் : புலவர் குப்பைக் கோழியார்
” கண்தர வந்த காம ஒளிஎரி
என்புஉற நலியினும் அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங்காட் சியமே
வந்துஅஞர் களைதலை அவர் ஆற் றலரே:
உய்த்தனர் விடா அர் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலையான் உற்ற நோயே”.
உரைநடை:
காவலுக்கு நிற்கின்ற வீரனைப் போல் கழுத்துயர்த்திக் கம்பீரம் காட்டுகின்ற சேவலுக்குச் சினமூ ட்டிக் களத்திலிறக்கி – – ஊரார் சிரித்து மகிழ்ந்து சேவல் போர் கண்டிடுவர்.
சிற்றூர் முதல் பேரூர் நகரங்கள் வரை – இந்த சேவற் சண்டை காணும் வழக்கம், இன்று நேற்றல்ல: கற்றோர் ஏத்தும் கலியும் அகமும் புறமும் பிறந்த கடைச் சங்க காலத்துக்கு முன்பே தொடக்கம்!
ஆதாரங்களில் ஒன்று அழகு குறுந்தொகையில் உண்டு – அது அகத்துறைப் பாடல் ஒன்றில் காணும் அடிக் கரும்பின் துண்டு! பாதார விந்தம் வரை பருவத்தின் எழில் கொழிக்கும் பாவை: படையெடுத்த காதல் நோயால் படும் துயரம் பாரீர்!
அன்றந்த முல்லைப் புதரிடையே ஆணழகன்: இரு குன்றம் போல் தோளுடையான்: அரிமா நடை பயின் றான்! சென்றங்குச் சேர்ந்து தழுவ முடியாமல் எனைக் கொன்றிங்கு சிறைப்படுத்திப் போட்டாளே: தாய்!
கண்களால் கண்டவுடன் என் கண்ணுக்கு மணியானாள்! கண்மணி! என்றழைத்துக் கட்டித்தழுவிடவே கருணை மனம் கொண்டு அவன் தான் வந்திருக்கலாகாதோ? – என் கவலையெனும் நெருப்பாறு அவன் கைபட்டால் நீர்வீழ்ச்சி யாகாதோ?
என் செய்வேன் : என் நோய்க்கு தீர்க்கும் மருந்தாக அவனிருக்க எதை நினைத்து நான் அழுவேன்? காதல் எனும் வன்செயலால் கடுந்தொல்லைக்கு ஆளானேன்! மென் காற்றாம் என்னுள்ளம் புயலாக மாறியதே!
யார் தந்தும் வந்ததில்லை இத்து யரம் எனக்கு – இதனை யார் வந்தும் தடுத்தென்னை வாழ விடப் போவதில்லை!
தானாக வந்து தவிக்க விடும் இத்துயரம் : அதுவே தானாகப் போவதன்றி வேறு தடம் தெரியவில்லை!
சேவலைத் தயாரித்து சண்டைக்கு விடுவோர் ஆவலாய் அதனை ஒன்றோடு ஒன்று மோத விடுவர்! ஏவியவரே பின்னர் சண்டையை விலக்கி: தாவிடும் சேவல்கள் தணற்சினம் தணிப்பர்!
தூண்டி விட்டு போர் புரிய செய்திடவும் – எல்லை தாண்டுமிடம் இரண்டு சேவல் விலக்கிடவும் இடையிலே ஆட்கள் சிலர் இருப்பது போல் மடை திறந்த என் துயரம் தீர்ப்பதற்கு யார் உளர்?
குப்பையிலே மேய்கின்ற கோழிகளுக்குள் போர் மூளும்! கொக்கரித்து ஒன்றையொன்று கொத்திக் கொள்ளும். அந்தக் கோழிகளை தூண்டி விட்டோர் யாருமில்லை: அங்கே வந்துவிட்ட சண்டைதனை விலக்கிடவும் நாதியில்லை!
அது போலே
காதலால் துடித்திடுக என்றென்னை எவருமே தூண்டவில்லை: அக் காதல் கனல் என்னை தகிக்கும் போது யாரும் வந்து தணிக்கவில்லை!
குப்பைக் கோழிகள் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொத்திக் கொண்டு தாமே அழிவது போல்
அனுமதியின்றி என் இதயம் புகுந்து அணுஅணுவாய் எனைச் சீர்குலைக்கும் அடங்காக் காதல் நோயை அகற்றி எந்தன் அழிவைத் தடுத்திட எவருமில்லையே? என்று புலம்பினாள்.
அந்தக்
குமரிப் பெண்ணின் குமுறும் நெஞ்சுக்கு குப்பைக் கோழி சண்டையினை உவமையாக்கிய குறுந்தொகைப் புலவரின் பெயர் தெரியாதக் காரணத்தால் “குப்பைக் கோழியார்” என்று அவரை அழைத்தனர்.
இப்படி தமிழ் நிலத்தில் இனிய சுவை இலக்கியங்கள் படைத்தோர் பெயர்கள் சில எப்படியோ மறைந்தும் ஒழிந்தும் போயினுங் கூட தப்பியதே தமிழ் இலக்கியம் பல எனக் களித்திடுவோம்! களிப்பில் கூத்திடுவோம்.
மேற்படி உயர் உரைநடை “சங்கத்தமிழ்” கலைஞர் அய்யா அவர்களின் நூலிலிருந்த பதிவு.
