கட்டுரை

கடம்பி மீனாட்சி

கடம்பி மீனாட்சி காலமான தினமின்று😢

இந்திய வரலாற்றாய்வாளர் ஆவார். இவர் பல்லவ மன்னர்களை நன்கறிந்த மேதையாவார். 1935 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் முதல் பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

அதாவது 1929-ம் ஆண்டு, மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து முடித்தவர், மதராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலை வரலாறு படிக்க விண்ணப்பித்தார். அன்றைய காலகட்டத்தில் முதுகலை வரலாற்றுப் படிப்பு இருந்த சில கல்லூரிகளில் ஒன்று அது. ஆனால், அதுவரை அந்தக் கல்லூரியில் பெண்கள் யாரும் பயிலாத காரணத்தைச் சுட்டிக்காட்டி அவருக்கு அனுமதி மறுத்தது கல்லூரி நிர்வாகம். அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய மீனாட்சியின் சகோதரர் லட்சுமிநாராயணன், தன் தங்கையைத் தானே பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாகவும், அவரது பாதுகாப்புக்கு எந்தத் தீங்கு வந்தாலும் முழுப் பொறுப்பும் தன்னுடையது என்றும் கைப்பட எழுதித் தந்த பின்புதான் மீனாட்சி கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அங்கு, எட்வர்டு கோர்லி போன்ற அறிஞர்களிடம் கற்றார்.

அதன்பின், மதராஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்தார் மீனாட்சி. 1931-ம் ஆண்டு, அவரது வரலாற்று ஆய்வுக்கென கல்வி உதவித் தொகை அறிவித்தது பல்கலைக்கழகம். தமிழக வரலாற்று ஆய்வாளர்களில் தலை சிறந்தவர்களில் ஒருவர் என்று அறியப்படும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிதான், மீனாட்சியின் ஆய்வுப்படிப்புக்கு வழிகாட்டி.

அதன்பின் தொடங்கியது மீனாட்சி என்ற பெண் ஆய்வாளரின் வரலாற்று வேட்டை! புதுக்கோட்டை, மன்னார்குடி, விழுப்புரம், காஞ்சிபுரம், மாமல்லபுரம் என்று தமிழகம் முழுக்கப் பயணப்பட்டார் மீனாட்சி. துணைக்கு அவரின் தாயும் சென்றார். மீனாட்சியைப் போல பல்லவர் வரலாற்றை ஆவணப்படுத்திய ஆய்வாளர் யாரும் இல்லை என்று இன்றும் சொல்வோர் உண்டு. குடுமியான்மலை இசைக் கல்வெட்டை மீனாட்சி அளவுக்கு அதன்பின் படியெடுத்து ஆராய்ந்தவர் மிகச் சிலரே. தன் முனைவர் பட்ட ஆய்வுக்கென மீனாட்சி தேர்ந்தெடுத்த தலைப்புகள் மூன்று – வைகுண்டப் பெருமாள் கோயில் சிற்பங்கள், கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் மற்றும் பல்லவர்களது நிர்வாகம் மற்றும் அவர்கள் கீழ் சமூக வாழ்க்கை. முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளைப் பரிசீலித்த குழுவின் உறுப்பினரான ஏ.என்.தீட்சித், `அவரது ஆய்வுகள் அத்தனை நுணுக்கமானவை’ என்று எழுதியிருக்கிறார். 1934-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். ஆக மதராஸ் மாகாணத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் அவர்தான்.

1938-ம் ஆண்டு `பல்லவர்கள் நிர்வாகம் மற்றும் பல்லவர் ஆட்சிக்காலத்தில் சமூக வாழ்க்கை’யைப் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டது மதராஸ் பல்கலைக்கழகம்.

1937-ம் ஆண்டு மதராஸ் பல்கலைக்கழகம் அளித்த ஊக்கத்தொகையில் தென்னிந்தியாவில் பௌத்தம் குறித்த ஆய்வுகளை மேற் கொண்டார் மீனாட்சி. அதே ஆண்டு தொல்லியல் துறை, காஞ்சி வைகுண்டப் பெருமாள் மற்றும் கைலாசப் பெருமாள் கோயில் சிற்பங்கள்குறித்து ஆய்வுசெய்ய மீனாட்சியைப் பணித்தது. தன் துறை சார்ந்த அறிஞர்களிடம் விவாதிப்பதில் அதிக ஆர்வம்கொண்டிருந்தார் மீனாட்சி. திராவிட கட்டடக் கலைகுறித்து அதிகம் எழுதியும் பேசியும் வந்த பிரெஞ்சு தொல்பொருள் ஆய்வாளர் ஜோவோ துப்ரேலுடன் காஞ்சி கைலாசநாதர் கோயில் தோற்றம்குறித்த விவாதங்களில் ஈடுபட்டார்.

பெண்கள் அதிகம் பணிபுரியாத அந்தக் காலத்தில், முனைவர் பட்டம் பெற்ற மீனாட்சியின் நிரந்தர வேலை தேடும் படலம் தொடங்கியது. அன்றைய மாகாண முதலமைச்சர் ராஜாஜி முதல், மைசூரு மன்னர் வரை அனைவருக்கும் தன் புத்தகத்தை அனுப்பினார். அவரது விடாமுயற்சி வெற்றிபெற்றது. 1939-ம் ஆண்டு மைசூரின் திவான் மிர்சா இஸ்மாயில் கையில் மீனாட்சி எழுதிய புத்தகம் கிடைக்க, புத்தகம் கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தும், ஒற்றை வரி பாராட்டுடனும் கடிதம் அனுப்பினார். சில மாதங்கள் கழித்து, இஸ்மாயிலின் முயற்சியால், பெங்களூரு மகாராணி கல்லூரியில் துணை விரிவுரையாளர் பணிக்கு மீனாட்சியை நியமித்திருப்பதாகக் கடிதம் வந்தது. தன் தாயுடன் ஆகஸ்ட் மாதம் பெங்களூருக்குப் பயணமானார் மீனாட்சி.

திடீரென மார்ச் 5, 1940 அன்று தன் 34-வது வயதில், பெங்களூரில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் மீனாட்சி. அவரது மரணத்துக்குப் பின் அவர் எழுதிய காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பங்கள், காஞ்சி மற்றும் தென்னிந்தியாவில் பௌத்தம் மற்றும் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரன் சம்ஸ்கிருதத்தில் எழுதிய `பாகவதஜுகம்’ என்ற நாடகத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகிய புத்தகங்கள் வெளிவந்தன. அவரது பழம் நாணயத் தொகுப்பு திருவனந்தபுரம் திருவிதாங்கூர் கல்லூரிக்குக் குடும்பத்தினரால் அளிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button