எல்லா மக்களும் நல்லா இருக்கட்டும்

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ திட்டத்தை 1993இல் தொடங்கியபோது நான்கு திசைகள், 18 மொழிகளை ஆறு ஆண்டுகளில் முடித்துவிட நினைத்தேன். ஆனால், 16 ஆண்டுகளாகிவிட்டன. பெரும்பாலான எழுத்தாளர்களுக்குத் தொலைபேசிகூட இருக்காது. ரிஜிஸ்தர் தபாலில் கடிதம் அனுப்பி, அவர்களிடம் இருந்து பதில் வரும்வரை காத்திருந்து அந்தந்த மாநில எழுத்தாளர்களை இரண்டு வாரங்களுக்குள் அடுத்தடுத்துச் சந்திக்க முடியுமா எனத் திட்டமிட்டு நிற்கக்கூட நேரமில்லாமல் உழைத்தேன். பெரும் நிறுவனம் செய்ய வேண்டிய வேலை இது. அதைத் தனி மனுஷியாகச் சாதித்திருப்பதில் நிறைவு. அதனால்தான் எழுத்தைத் தவம் என்கிறேன். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை மட்டும் வைத்துக்கொண்டு கணினி, இணையம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்றவை மிக அரிதாகவே இருந்த 1990களில் இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாக வலம்வந்திருக்கிறேன். ஒரு நிலத்தை, அங்கிருக்கும் மக்களை அவர்களின் வாழ்க்கை முறையை அந்தந்தப் பிரதேச எழுத்தாளர்களின் கண் வழியே பதிவுசெய்வதுதானே நியாயமாக இருக்க முடியும். அவர்களின் நேர்காணல்களை ஒலிநாடாவாகப் பதிவுசெய்து என் உதவியாளர் லலிதாவின் உதவியோடு தட்டச்சு செய்து, அதைத் திருத்தி, அதன் பிறகே இது புத்தக வடிவம் பெற்றது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பயணக்கதை, எழுத்தாளரின் நேர்காணல், அவரது படைப்பு மொழிபெயர்ப்பு, எழுத்தாளரின் கட்டுரை என்று 102 எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணப்படுத்தியுள்ளேன். இவர்களில் மணிப்பூரி, சிந்தி ஆகிய இரண்டு மொழி எழுத்தாளர்களுக்கு மட்டுமே மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டேன். மற்ற அனைவரும் ஆங்கிலத்தில் பேசினார்கள்.
இந்தப் பயணம் பல நல்ல பாடங்களைக் கற்றுத் தந்தது. கன்னடத்தின் மூத்த எழுத்தாளர் சிவராம் காரந்த்தைச் சந்தித்தபோது அவருக்கு 92 வயது. சாப்பிடும்போது சமூகத்தைப் பற்றிப் பேச்சு திரும்பியது. ஆதிகாலம்தொட்டே மனிதன் சுயநலமாகத்தான் இருந்திருக்கிறான் என்றவர், “சர்வே ஜனா சுகினோ பவந்து” என்றார். “எல்லா மக்களும் நல்லா இருக்கட்டும் என்று சொல்வதில் என்ன தவறு?” என்றேன். “புல், பூண்டு, பிராணிகளையும் கணக்கில் வைத்து, சர்வே ஜீவே சுகினோ பவந்து என்று எல்லா உயிரினங்களும் நன்றாக இருக்கட்டும் என்றுதானே எண்ண வேண்டும்” என்றார். அது எனக்குக் கண்திறப்பாக அமைந்தது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஜாம்பவான்களில் 85க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்ட நிலையில் இந்தப் புத்தகம் ஒன்றுதான் பலருக்கான ஆவணமாக இருக்கிறது.
– சிவசங்கரி
நன்றி: இந்து தமிழ் திசை

Like
Comment