கட்டுரை

தன் சொந்த சொத்துக்களை விற்று பெரியாறு அணைக்கட்டிய தென்னகச் சாமி பென்னி குவிக்!

தன் சொந்த சொத்துக்களை விற்று பெரியாறு அணைக்கட்டிய தென்னகச் சாமி பென்னி குவிக்!

முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் இங்கிலாந்து நாட்டின் பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக். இவருடைய தந்தை பெயர் ஜான் பென்னிகுவிக். அவர், ஆங்கிலேயே ஆட்சியின் போது இந்திய ராணுவத்தின் உயர் பதவியான பிரியேடியர் ஜெனரலாக பணியாற்றினார். கர்னல் ஜான்பென்னிகுவிக் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 1841–ம் ஆண்டு ஜனவரி 15–ம் நாள் பிறந்தார். 8 வயது சிறுவனாக இருந்த போது, அவருடைய தந்தை ஆங்கில–சீக்கிய போரில் இறந்தார். தந்தையை போன்று ராணுவத்தில் பணியாற்ற ஆசைப்பட்ட கர்னல்ஜான் பென்னிகுவிக் இங்கிலாந்து நாட்டின் லண்டன் அருகே உள்ள செல்டன்காம் நகர பள்ளியில் படித்தார். பின்னர் லண்டன் புறநகர் பகுதியில் ராணுவ பொறியாளர் பிரிவில் படிப்பை மேற்கொண்டார்.

1858–ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். பின்னர் தனது திறமையால் பல்வேறு பதவி உயர்வுகளை பெற்றார். 1881–ம் ஆண்டு பெரியாறு அணை திட்டத்திற்காக சிறப்பு பணி நிமித்தமாக நியமிக்கப்பட்டார். 1887–ம் ஆண்டு மார்ச் 24–ந்தேதி பெரியாறு அணைக்கட்டும் திட்டத்திற்கு பொறியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 1888–ம் ஆண்டு ஜூலை 4–ந்தேதி முதல் தலைமை கண்காணிப்பு பொறியாளராக பதவி ஏற்று அணை கட்டும் பணிக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

அணை கட்டுமான பணி இயற்கை சீற்றத்தால் பல தடங்கலை சந்தித்தது. மக்கள் எளிதில் செல்ல முடியாத அடர்ந்த காட்டு பகுதியில், வன விலங்குகள் வாழும் பகுதியில் தொழில்நுட்ப ரீதியாக முல்லைப்பெரியாறு அணை கட்டும் பணியை பென்னிகுவிக் தொடர்ந்தார். பணிகள் முடிவடையும் தருவாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அணையை அடித்துச் சென்றது. ஒரு கட்டத்தில் அணை கட்டுமான பணிக்கு நிதி தேவைப்பட்டதால் இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது சொந்த சொத்துக்களை விற்று அதில் கிடைத்த பணத்தை அணை கட்டுமான பணிக்கு பயன்படுத்தியுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை கட்டும் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு ஆங்கிலேய அரசு பாராட்டுக்களையும், பதக்கங்களையும் வழங்கியது. அணை திறக்கப்பட்ட நாளில் நடந்த விழாவில் வீரத்திற்கும், திறமைக்கும் ஆங்கிலேய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான ‘இந்தியாவின் மிக உயர்ந்த மேன்மை தாங்கிய வரிசையில் உள்ள அதிகாரி’ என்ற பட்டம் பென்னிகுவிக்கிற்கு கொடுக்கப்பட்டது. பென்னிகுவிக் ஓய்வுக்கு பிறகு 1911–ம் ஆண்டு மார்ச் 9–ந்தேதி லண்டனில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் சர்ரே என்ற பகுதியில் உள்ள கேம்பர்லி என்ற இடத்தில் தனது 70 வயதில் மரணம் அடைந்தார்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பஞ்சத்தை போக்கி, வறண்ட நிலங்களை வளமாக்கிய பெருமை பென்னிகுவிக்கையே சாரும். இதனால் ‘மக்களை காப்பாற்றிய ரட்சகன்’, ‘முல்லைப் பெரியாறு அணையின் தந்தை’ என்றெல்லாம் அவர் புகழப்படுகிறார். பென்னிகுவிக்கின் சிறப்பை போற்றும் வகையில் தமிழக அரசு கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் வெண்கல சிலையுடன் கூடிய, மணிமண்டபம் அமைத்து உள்ளது. மேலும் தேனி புதிய பஸ் நிலையத்திற்கு கர்னல் ஜான்பென்னி குவிக் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். ‘நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்’ என பென்னி குவிக்கை எண்ணி தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பெருமிதம் அடைகின்றனர். தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வீடுகளில் சாமி படங்கள் இருக்கிறதோ, இல்லையோ! கர்னல் ஜான் பென்னி குவிக்கின் கம்பீரமான புகைப்படம் நிச்சயம் இடம் பெற்று இருக்கும். அந்த அளவில் மறைந்தாலும், மக்கள் மனதில் வாழ்கிறார் பென்னிகுவிக்.

நன்றி: ஆனந்தி ரிப்போர்ட்டர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button