முள்ளும் மலரும் அச்சாணி அல்லவா?

நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் எனக்கே இருக்கிறது. ஆனால் அது நடந்தது,. சற்றேறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன் அண்ணாசாலையில் -இப்போது உள்ள தி பார்க் நட்சத்திர ஓட்டல் அருகில்- நடந்து சென்று கொண்டிருக்கிறேன் . கையில் ஒரு நோட்புக்.
தாய் வார இதழில் துணை ஆசிரியர் வேலை. எந்த நேரத்திலும் பேனா நோட்டோடு அலர்ட்டாக இருப்பது அவசியம். நான் சினிமா இலக்கியம் சமூக செய்திகள் பேட்டிகளை வாரம் 12 பக்கமாவது எழுதி பேரெடுக்கும் தீராப்பசியில் திரிந்து கொண்டிருந்த நேரம். சாப்பாடு பசி பொறுத்த படி நடக்கிறேன். எவரிடமும் கைநீட்டி விடக் கூடாது என்ற வைராக்கியம் வேறு.
வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கொரு சேதி தரும் என்ற கனவில் போய்க் கொண்டிருந்தேன் . அட என்னடா வம்பு? என் அருகாமையில் ஒரு கார் உரசுகிற வாக்கில் நின்றது. அலறி திட்ட வாயெடுப்பதற்குள் கார் கதவு திறக்க என் அனுமதி இல்லாமலே காருக்குள் அடைபடுகிறேன். கார் விர்ரென வடபழனி நோக்கிச் செல்கிறது. கதவு திறக்க எதிரே இயக்குனர் எஸ் பி முத்துராமன் . வாங்க ராசி என்கிறார். காரில் கடத்தி வந்தவர் சிரித்தபடியே நகர்ந்து மேக்கப் போட செல்கிறார் .
யார் அது என்கிறீர்களா?
அவர் ஒரு எளிமையான நடிகர்
பெயர் ரஜினிகாந்த் .
ஆமாம் சூப்பர் ஸ்டார்
படம் மிஸ்டர் பாரத்
அன்று முழுவதும் அவரோடு இருந்து உண்டு பேசி மகிழ்வாக ஒரு கவர்ஸ்டோரி செய்து விட்டேன்.
சத்யராஜ் கூட நடிப்பு தான் என்றாலும் அன்று அவருக்கு காட்சி இல்லை. படப்பிடிப்பு நேரம்போக தேவையில்லாமல் பேசுவது தவிர்க்க கர்ச்சிப்பால் முகத்தை மூடிக் கொண்டு ஏதோ ஒரு பெஞ்ச்சில் படுத்து கண்ணை மூடிக் கொள்வது அவர் வழக்கம். ஆனால் அன்று அது நடக்கவில்லை நான் பேனாவுக்கு வேலை கொடுத்த படி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மையில் படப்பிடிப்பின்போது ஒரு நடிகரை இப்படி கேள்வி கேட்டு அவரின் வேலையை கெடுப்பது நியாயம் இல்லை. ஆனால் இந்த சூழலை விரும்பி அவரே ஏற்றுக் கொண்டதால் அந்த நாள் இலகுவாக கடந்து கொண்டிருந்தது.
திடீரென இரண்டு பஸ்கள் வந்து நின்றது, அதிலிருந்து திமு திமு வென்று வந்து இறங்கியவர்கள் சட சட வென ரஜினிகாந்த் காலில் விழுந்து வணங்கி எழுந்தனர்.
வேண்டாம் என தடுத்துப் பார்த்தார். நடக்கவில்லை. தூத்துக்குடியில் இருந்து வந்த ரசிகர்கள். அதில் பெண்களும் அடக்கம். அவர்களை உபசரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து சிரித்தபடி அனுப்பி வைத்தார்.
எனக்கு எப்படி இருக்கும்? நான் கேட்டு விட்டேன். இப்படி காலில் விழுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?
சட்டென மறுத்தார். நிச்சயமாக இல்லை. பெத்த அம்மா அப்பா காலில் விழலாம். தெய்வத்துகிட்ட விழலாம் . வேற யார்கால்ல வேணும்னா குரு கால்ல விழலாம் . நியாயம். என் கால்ல விழறதுல எனக்கு இஷ்டமில்ல. சொன்னா கேக்க மாட்டேன்றாங்க. இனி கடுமையா இந்த விஷயத்துல இருக்கப் போறேன் என்று உணர்ச்சி வயப்பட்டு சொன்னார். அதில் உண்மை இருந்ததை என்னால் காண முடிந்தது.
அதன் பிறகு நிறைய முறை அவரோடு உரையாடும் சந்தர்ப்பமும் உணவருந்தும் சந்தர்ப்பமும் வாய்த்தது. எனக்கு அதிகமான பிடித்த இயக்குநர் மகேந்திரன் அவர்களோடு நிறைய நாட்கள் செலவழித்திருக்கிறேன். அவரை கேட்காமலே அவர் படப்பிடிப்புக்கு சென்று அவருடன் இருப்பது வழக்கம்.
அப்படி ஒரு நாள் உத்தண்டி மகாபலிபுரம் கடற்கரை சாலையில் ‘கை கொடுக்கும் கை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சென்றேன். பேசிக்கொண்டிருந்தேன். அன்று ரஜினிகாந்த் ஒரு சேரில் அமர்ந்து கொண்டிருந்தார். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் நீரில் ஒரு குடம் மிதந்து கொண்டு போவது போலவும் அதில் ஒரு தாமரைப்பூ மிதந்து போவது போலவும் எடுக்கச் சொல்லிவிட்டு டைரக்டர் அன்றைய காட்சிக்கான வசனம் எழுத எத்தனித்தார்.
என்ன நடக்கிறது என்று கவனிக்காமல் சூப்பர் ஸ்டாரை உட்கார வைத்துவிட்டு குடம் மிதப்பதை எடுக்கிறார் என்ற கோபத்தில் டைரக்டரை சத்தம் போட்டு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் தயாரிப்பாளர் . விஜயகுமார்.
சட்டென கோபம் கொப்பளிக்க எழுந்த ரஜினிகாந்த் நேராகச் சென்று, “ மிஸ்டர் விஜயகுமார் ‘மகேந்திரன் டைரக்டருக்காகத்தான் நான் டேட் கொடுத்தேன். அவர் என்ன பண்ணணும்னு நீங்க சொல்லாதீங்க. என்ன எப்போ எடுக்கணும்னு அவருக்குத் தெரியும். நான் வந்ததும் என்ன வச்சுத்தான் காட்சி எடுக்கணும்னு அவசியம் இல்லை. நான் அப்படி நினைக்கிற ஆளும் இல்ல. மகேந்திரன் சார் கிரேட் டைரக்டர் . அவருக்கு எல்லா காட்சியும் முக்கியம். நடிகர்னா வெயிட் பண்றதுக்கும் சேர்த்து தான் சம்பளம் வாங்கறோம். டைரக்டரோட உரிமையில யாரும் தலையிடறத நான் விரும்பலை. உங்களுக்கு பிரச்சனைன்னா விட்டுடுங்க இந்தப் படத்தை நான் பாத்துக்கிறேன்’என்று பதிலுக்கு சொற்களை சூடாகப் பயன்படுத்த ஒருகணம் அந்த இடம் வேர்த்து விறுவிறுத்து நின்றது. அமைதியான சூழல் பரவலானது.
உண்மையில் இயக்குநர் மீது ரஜினிகாந்த் வைத்திருந்த நேசம் புரிந்தது. சும்மாவா? முள்ளும் மலரும் அச்சாணி அல்லவா?
ராசி அழகப்பன்
நன்றி: அந்தி மழை