ஐரீன் ஜோலியட்-க்யூரி (Irene Joliot-Curie) காலமான தினமின்று

உலகப் புகழ்பெற்ற பிரெஞ்ச் விஞ்ஞானியும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஐரீன் ஜோலியட்-க்யூரி (Irene Joliot-Curie) காலமான தினமின்று
*பாரீசில் பிறந்தார். (1897) மேரி க்யூரி தம்பதியின் மகளான இவர் சிறு வயதிலிருந்தே மிகவும் திறமைசாலி. கணிதத்தில் அளவுகடந்த ஆர்வமும் திறனும் கொண்டவர். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், சார்போன் பல்கலைக்கழகத்தில் கணிதமும் வேதியியலும் பயின்றார்.
*ஐரோப்பாவில் முதல் உலகப்போர் தொடங்கியதால் இவரது படிப்பு தடைபட்டது. தன் தாயுடன் எக்ஸ்ரே சாதன வாகனத்தில் பயணம் செய்து, போரில் காயம்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தார். பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய ராணுவ மருத்துவக் கூடங்களில் எக்ஸ்ரே ஆய்வுச் சாதனங்களை நிறுவ ஏற்பாடு செய்தார். இவரது சேவைகளைப் பாராட்டி ராணுவப் பதக்கம் வழங்கப்பட்டது.
*போர் முடிந்ததும் பாரீஸ் திரும்பினார். படிப்பைத் தொடர்ந்து, பட்டம் பெற் றார். பாரீசில் பெற்றோர் அமைத்திருந்த க்யூரி கதிரியக்க ஆய்வுக் கூடத் தில் 1918-ல் தனது அம்மாவின் உதவியாளராக சேர்ந்தார். பொலோனியம் ஆல்ஃபா கதிர்கள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி 1925-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
*தன்னுடன் பணிபுரிந்த ஃபிரெடெரிக்கை மணந்தார். கணவன் மனைவி இருவரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அணு உட்கரு குறித்து ஆராய்ந்தபோது, பாஸிட்ரான், நியுட்ரான்களை அடையாளம் கண்டனர். தொடர் ஆய்வுகளின் பலனாக 1934-ல் செயற்கை கதிர் வீச்சைக் கண்டறிந்தனர். மூலக மாற்றத்தைப் (transmutation of elements) புரிந்துகொண்டு ஏராளமான கதிரியக்க ஏக மூலங்களை (Radioactive Isotopes) உருவாக்கினர்.
*ஒரு மூலகத்தை (element) மற்றொரு மூலகமாக மாற்ற முடியும் என்பதைக் கண்டறிந்தனர். இதன் மூலம் புதிய கதிரியக்க மூலகங்களை (Radioactive Elements) உண்டாக்கினர். கதிரியக்க நைட்ரஜனை போரோனாகவும், அலுமினியத்திலிருந்து கதிரியக்க பாஸ்பரஸ் ஐசோ டோப்களையும், மெக்னீஷியத்திலிருந்து சிலிக்கானையும் உருவாக்க முடியும் என்பதையும் கண்டறிந்தனர். இதற்காக இவர்களுக்கு 1935-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது.
*இதன் மூலம் நோபல் பரிசை வென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அறிவியல் மேதைகள் என்ற தனிப்பெருமை பெற்றனர். வேதியியலுக் கான நோபல் பரிசை வென்ற முதல் பெண் அறிவியல் அறிஞர் என்ற பெருமைக்குரிய இவரது தாய் மேரி க்யூரியை அடுத்து, இதே களத்தில் இதே பரிசை வென்ற இரண்டாவது பெண்மணி இவர்தான்.
*மூலகங்களின் அணி அட்டவணையை (periodic table of elements) விரிவாக்கம் செய்த இவர், விஞ்ஞான மேதை எனப் புகழ் பெற்றார். இவர்களுடைய இந்த செயற்கைக் கதிரியக்கம் நவீன அணுக்கரு விஞ்ஞானத்தை மேம்படுத்த வழிகோலியது. இது அணுவைப் பிளக்கவும் வழிவகுத்தது. பிரெஞ்ச் அணுசக்திப் பேரவை உறுப்பினராகவும் பாரீஸ் பல்கலைக்கழகத்தின் ரசாயனத் துறைப் பேராசிரியராகவும் செயல்பட்டு வந்தார்.
*1940-ல் ஹிட்லர் பிரான்சை கைப்பற்றியபோது, இந்தத் தம்பதியின் அணுப்பிளவு ஆராய்ச்சிகள் முடக்கப்பட்டன. எனவே குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்து சென்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்ஸ் விடுதலை பெற்றவுடன் நாடு திரும்பினார்.
*செயற்கை முறையில் விரைவாக, சிக்கனமாக, ஏராளமாக கதிரியக்க சாதனங்களை உருவாக்குவதற்கு, இவரது கண்டுபிடிப்பு வித்திட்டது. உலகம் முழுவதும் மருத்துவம் மட்டுமல்லாமல், தொழிற்துறை, பொறியியல், வேளாண்மை, விஞ்ஞானம் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் இதன் பயன்பாடு விரிவடைந்தது.
*மனித குல நலன் காப்பதில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஐரீன் ஜோலியட்-க்யூரி, தன் தாயைப் போலவே கதிர்வீச்சுக்கு ஆளானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே 17இல் 59-வது வயதில் மறைந்தார்.