அறிவியல்

வால்டர் ருடால்ஃப் ஹெஸ் (Walter Rudolf Hess) பிறந்த தினம் இன்று

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான வால்டர் ருடால்ஃப் ஹெஸ் (Walter Rudolf Hess) பிறந்த தினம் இன்று (மார்ச் 17). 💐

சுவிட்சர்லாந்து நாட்டின் ஃபிராவன்ஃபெல்ட் நகரில் பிறந்தார் (1881). தந்தை இயற்பியல் ஆசிரியர். மிகவும் சிறிய வயதிலேயே தன் மகனை ஆய்வுக்கூடத்துக்குள் அனுமதித்த தோடு அங்குள்ள சோதனைக் கருவிகளை கவனமாகக் கையாளும் நுட்பத்தையும் கற்றுக்கொடுத்தார்.

வால்டர் 1906-ம் ஆண்டு சூரிச் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்னர், அறுவைசிகிச்சை நிபுணராகப் பயிற்சி பெற்றார். ரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மையை அளப்பதற்காக விஸ்கோசிமீட்டர் என்ற கருவியைக் உருவாக்கினார். சூரிச் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவராகப் பயிற்சி பெற்றார்.

விழி விலகலின் அளவுகளைக் கண்டறிய உதவும் ஹெஸ் திரையை உருவாக்கினார். 1912-ல் கண் மருத்துவர் பணியை விட்டுவிட்டு ஜஸ்டஸ் கோல் என்ற விஞ்ஞானியுடன் இணைந்து உடலியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். குறிப்பாக, ரத்த ஓட்டம் மற்றும் சுவாசம் குறித்த ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டார். பின்னர் 1916-ல் சூரிச் பல்கலைக்கழகத்தில் உடலியல் நிறுவனத்தில் இடைக்கால இயக்குநராகப் பதவியேற்றார்.

அடுத்த ஆண்டே அதன் முழுநேரப் பேராசிரியராகவும் அந்த நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றார். 1930களின் ஆரம்பத்தில் உள்ளுறுப்புகளைக் கட்டுப்படுத்தும் நடுமூளைப் பகுதியின் செயல்பாடு குறித்து பூனைகளைப் பயன்படுத்தி ஆராயத் தொடங்கினார். அவற்றின் மூளையின் அடிப்பகுதியை சிறிய அளவில் மின்னோட்டத்தை செலுத்துவதன் மூலம் தூண்டினார்.

அவ்வாறு தூண்டப்பட்டபோது அவற்றின் நடவடிக்கைகள் உற்சாக நிலையிலிருந்து சோர்வான நிலையை அடைந்தன. முன்பக்க (பக்கவாட்டு) மூளைப்பகுதியில் தூண்டுதல் ஏற்படுத்தியபோது ரத்த அழுத்தக் குறைவைத் தூண்டுவது, சுவாசத்தை மெதுவாக்குவது மட்டுமல்லாமல் பசி, தாகம், சிறுநீர், மலம் கழித்தல் ஆகிய நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்பதையும், மூளையின் பின்பக்கப் பகுதியைத் தூண்டியபோது, அதீத உற்சாகம் மற்றும் பாதுகாப்பு உணர்வுகொண்ட நடத்தை ஏற்படுவதையும் கண்டறிந்தார்.

இந்த நடவடிக்கை மூலம் பூனைகளைத் தூங்க வைக்கவும் முடியும் என்பதையும் கண்டறிந்தார். இது பின்னர் நடைபெற்ற ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டது. நியுரோ செக்ரியேஷன் (நரம்பு மண்டல கசிவுகள்) குறித்தப் புரிதல்களுக்கான முக்கிய கண்டுபிடிப்பாகத் திகழ்ந்தது.

இந்தக் கண்டுபிடிப்புக்காக இவர் 1949-ம் ஆண்டு எகாஸ் மோனிஸ் என்பவருடன் இணைந்து மருத்துவம் அல்லது உடல் இயங்கலியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

உடலியல் குறித்த தனது ஆராய்ச்சிகளை விவரித்து `தி ஃபங்க்ஷனல் ஆர்கனைசேஷன் ஆஃப் தி டியென்சிபெலான்’, `ஹைப்போதாலமஸ் அன்ட் தாலமஸ்’, `தி பயாலஜி ஆஃப் தி மைன்ட்’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை வெளியிட்டார்.

உடலியல் குறித்த இவரது பங்களிப்புகளுக்காக மார்சல் மெனோயிஸ்ட் பரிசு, பல பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றார்.

மனிதகுலத்துக்குப் பயன்படும் உடலியல் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அந்தத் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய வால்டர் ருடால்ஃப் ஹெஸ் 1973-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 92-ம் வயதில் காலமானார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button