அறிவியல்

இந்திய அறிவியல் நாள் | நம்ம ஊரு விஞ்ஞானி!

இந்திய அறிவியல் நாள் | நம்ம ஊரு விஞ்ஞானி!

மக்கள் விஞ்ஞானி’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் கோவை ‘ஜி.டி.நாயுடு அருங்காட்சியக’த்தில் வைத்திருக்கிறார்கள். அவர் சேகரித்த நூற்றுக்கும் அதிகமான கார்களை வைத்து, ‘விண்டேஜ் கார் மியூசியம்’ ஒன்றும் அருகிலேயே இருக்கிறது.

இன்றைய தகவல்தொடர்பு வசதிகள் இல்லாத 75 ஆண்டுகளுக்கு முன்னர், ஜி.டி.நாயுடுவின் கண்டு பிடிப்புகளைப் பார்த்து மேற்குலகம் வியந்திருக்கிறது! நோபல் பரிசுபெற்ற சி.வி.ராமன், “அவரது சாதனைகளைப் பற்றி எழுத எனக்குத் திறமை போதாது!” என்று வியந்திருக்கிறார்.

கோவையில் உள்ள கலங்கல் கிராமத்தில் 1893 மார்ச் 23இல் பிறந்தார் ஜி.டி.நாயடு. பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி, அப்பா
வுடன் வயலில் வேலை செய்தார். தமிழ்ப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார். வாசிப்பு அவரது அறிவை விசாலமாக்கியது. இந்த நேரத்தில் ஓர் ஆங்கிலேய அதிகாரி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தார்.

விலங்குகளைப் பூட்டாமல் ஓடிய அந்த வண்டிதான் அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. உணவகம் ஒன்றில் வேலை செய்து, அந்தப் பணத்தில் மோட்டார் சைக்கிளை வாங்கி, அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்தார். பின் மீண்டும் இணைத்து ஓட்டிப் பார்த்தார்.

சுதேசிப் போக்குவரத்து நிறுவனம்: பேருந்துப் போக்குவரத்து நிறுவனம் நடத்திய ஆங்கிலேய தொழிலதிபரான ராபர்ட் ஸ்டேன்ஸ் கம்பெனியில் சேர்ந்து, அவரது அன்புக்குப் பாத்திரமானார் ஜி.டி.நாயுடு. அவரிடம் ஆங்கிலத்தில் உரையாடவும் கற்றுக்கொண்டார்.

1921 இல் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த தனது பேருந்து ஒன்றை ஜி.டி.நாயுடுவுக்கு விற்றார் ஸ்டேன்ஸ். 1933இல் ‘யுனைடெட் மோட்டார் டிரான்ஸ்போர்ட்’ என்கிற சுதேசிப் போக்குவரத்து நிறுவனம் உருவானது. 280 பேருந்துகளை அந்நிறுவனம் இயக்கியது! தொழிலதிபராக நாயுடுவின் புகழ் டெல்லி வரை பரவியது.

எலெக்ட்ரிக் ரேஸர்: தனது போக்குவரத்துச் சேவையை மேலும் தரமாக வழங்கவும் பல்வேறு தொழில்களில் கிளை பரப்பவும் ஜி.டி.நாயுடு, வெளிநாடுகளுக்குச் சென்றார். பெல்ஜியம் சென்றபோது, அங்கே வாங்கிய பொம்மை காரி லிருந்த சிறு மின் மோட்டாரைத் தனியே பிரித்தெடுத்து, உலகின் முதல் ‘எலெக்ட்ரிக் ரேஸர்’ உருவாக்கினார்.

அதற்குக் காப்புரிமையும் பெற்று, பல நாடுகளிலிருந்து மூலப் பொருள்களை இறக்குமதி செய்து, தரமான முறையில் ‘எலெக்ட்ரிக் ரேஸர்’களை உற்பத்தி செய்தார். ரசந்த் (Rasant) என்கிற பெயரைச் சூட்டி, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, விற்பனையிலும் சாதனை படைத்தார்.

ராணுவத்துக்கு விநியோகம்: இரண்டாம் உலகப் போரின்போது மைக்கா கொண்டு தயாரிக்கப்பட்ட பேட்டரிகளையும் கார்பன் ரெசிஸ்டர்களையும் தயாரித்து ஆங்கிலேய ராணுவத்துக்கு விநியோகம் செய்தார். கோவையின் மற்றொரு சுதேசி தொழிலதிபரான ‘டெக்ஸ்டூல்’ பாலசுந்தரத்தின் கூட்டுறவுடன் மின் மோட்டார்களைத் தயாரித்தார்.

மின்மோட்டார் மட்டுமல்ல; ஐந்து பாண்ட் அலைவரிசைகள் கொண்ட வானொலிப் பெட்டிகள், சுவர்க் கடிகாரம், ஆரஞ்சு பிழியும் இயந்திரம், உருளைக் கிழங்கு தோல் சீவும் இயந்திரம், லேத் இயந்திரங்கள், மினி கார், அதிக வலிமையான டயர்கள் என 150க்கும் அதிகமான கண்டுபிடிப்புகளைத் தந்திருக்கிறார்! ஜி.டி.நாயுடு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button