அறிவியல்

அலெக்சாண்டர் கிரகாம் பெல்

📞

பிறந்த தினமின்று

அலெக்சாண்டர் கிரகாம் பெல்📞 பிறந்த தினமின்று..💐

💥தொலைபேசியைக் கண்டறிந்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட வழிவகுத்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) பிறந்த தினம் இன்று (மார்ச் 3).

ஸ்காட்லாந்தில், எடின்பர்கில் பிறந்தார் (1847). தந்தை ஒரு பேராசிரியர். குரல் பயிற்சியிலும், காது கேளாதோருக்குக் கல்வி கற்பிப்பதிலும் வல்லுநர். இவரது இயற்பெயர் பெல். குடும்ப நண்பரான அலெக்ஸாண்டர் கிரகாம் என்பவரின் மேல் உள்ள அபிமானத்தால் இவருக்கு அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வீட்டிலேயே 11 வயது வரை இவருக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது. அறிவியல் பாடத்தை விரும்பிப் படித்தார். பியானோ இசைப்பதிலும் ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் முழு நேரத்தையும் செலவிட்டார். 1863-ல் தன் தாத்தா வசித்து வந்த லண்டனில் குடியேறினார்.

பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவு அனுப்பினார். பேசுவதையும் அதே முறையில் அனுப்பலாமே என்ற சிந்தனையை நிஜமாக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார். இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன.

பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1876-ல் உலகிலேயே முதன் முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார். பெல் பேசிய சொற்களை வாட்சனால் தெளிவாக கேட்க முடிந்தது. ஃபிலடல்ஃபியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார்.

அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திப் பார்த்தார். அதன் பிறகுதான் இவரது தொலைபேசியின் புகழ் பரவியது. இதற்கான காப்புரிமை பெற்றார். 25-வது வயதில் பாஸ்டனில் காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக ஒரு பள்ளியை நிறுவினார். 1877-ம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியைத் தொடங்கினார்.

பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேச்சு உடலியல் மற்றும் பேச்சுத் திறன் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். தொலைபேசி கண்டுபிடிப்புக்காக பிரெஞ்சு அரசு வழங்கிய பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். குரலைப் பதிவு செய்யும் ஒலித் தகடுகளை உருவாக்கினார்.

1882-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். 1885-ல் தனது குரலை மெழுகு தடவிய கார்போர்ட் தகட்டில் பதிவு செய்துள்ளார். அது இன்றும் அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காது கேளாதோர் பேசவும் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதற்குமான முறைகளை மேம்படுத்தினார்.

கண்பார்வையற்ற, காதுகேளாத, பேச முடியாமல் தவித்த சாதனையாளர் ஹெலன் கெல்லர், பேச்சுத்திறனை வசப்படுத்திக்கொண்டதில் பெரும் பங்காற்றினார். போட்டோபோன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாய்ஸ் ரெக்கார்டிங், சிலிண்டர், உள்ளிட்ட ஏறக்குறைய 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றார்.

உலகம் முழுவதும் உள்ள காது கேளாதோர் பள்ளிகளுக்கு பெருமளவில் நிதியுதவி வழங்கியதுடன், அவர்கள் துயரைக் களைவதற்கான பல அமைப்புகளையும் தொடங்கினார். வோல்டா பரிசு, ஆல்பர்ட் பதக்கம், எடிசன் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார்.

மனிதகுல வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களுள் ஒருவர் என்ற பெருமைக்குரிய அலெக்ஸாண்டர் கிரகாம் பெல், 1922-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 75-ம் வயதில் மறைந்தார். அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button